ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை தோல்வியுறுச் செய்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது முதல் அந்த நாட்டின் பொருளாதாரம் சரிவடையத் தொடங்கி உள்ளது.
கிடைக்கப்பெறும் அறிக்கைகளின் படி ஆப்கானிஸ்தான் அரசின் செலவினத்தில் 75 வீதம் வெளிநாட்டு உதவிகள் மற்றும் மானியங்கள் மூலம் கிடைப்பவையே. இரண்டு பிரதான வெளிநாட்டு நன்கொடை முகவராண்மைகளும் வெளிநாட்டு நன்னொடையாளர்களும் உதவிகள் வழங்குவதை நிறுத்தி உள்ளனர். இவற்றுள் வெளிநாட்டு ஒதுக்குகளும் அடங்கும். மேலைத்தேசங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களும் உதவிகள் வழங்குவதை வாபஸ் பெற்றாலோ அல்லது நிறுத்திக் கொண்டாலோ நிலைமை மேலும் மோசமடையும்.
சர்வதேச சமூகம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ஆப்கானிஸ்தானின் சுகாதார பராமரிப்பு முறையும் சரிவடையும் நிலைக்கு வந்து விடும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே பாகிஸ்தானும் கத்தாரும் ஆப்கானிஸ்தானின் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிக்குமாறு அமெரிக்காவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளன. மொத்தமான பொருளாதார சரிவில் இருந்து அந்த நாட்டை காப்பாற்றும் வகையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இணை செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொஹமட் குரேஷியும் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ள கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் மொஹம்மத் பின் அப்துல் றஹ்மான் அல் தானியும் ஆப்கானிஸ்தான் மக்களின் நலன்களைப் பேணுவது மிகவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயம் என்று தெரிவித்துள்ளனர்.
உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் நிதி வழங்குவதை நிறுத்தி உள்ளன. ஒரு சட்டபூர்வ அரசு என்ற வகையில் பெண்களை தலிபான்கள் எவ்வாறு நடத்தப் போகின்றனர் கருத்துச் சுதந்திரம் உற்பட ஏனைய சுதந்திர செயற்பாடுகளுக்கு அவர்கள் எவ்வாறு இடமளிக்கப் போகின்றனர் என்ற விடயங்களை சர்வதேச சமூகம் இப்போது உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கி உள்ளது.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் மில்லியன் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கடந்த சுமார் கால் நூற்றாண்டுகளாக கொன்று குவித்து தமது கரங்களில் இரத்தக் கரையோடு காணப்படுகின்றன. ஆனால் அவர்கள் தான் இப்போது தலிபான்களின் மனித உரிமை தொடர்பான செயற்பாடுகளையும் அவதானிக்க உள்ளமை வேடிக்கையானது. இவ்வாறான பின்னணியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சில பெண்கள் மற்றும் ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீதான தலிபான்களின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் அவர்களின் நிலைமையை மேலும் மோசமடைய வைத்துள்ளது.
ஏற்கனவே அங்கு எரிபொருள், உணவு, மருந்து என்பனவற்றுக்கு தட்டுப்பாடுகள் தலைதூக்கி உள்ள நிலையில் சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் வறுமையில் வாடி வரும் பின்னணியில் மிகப் பெரிய மானுட இடருக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டானியோ கட்டரஸ{ம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காபுல் விமான நிலையத்தை மீண்டும் திறக்க கத்தார் தலிபான்களுக்கு உதவியுள்ளது. அமெரிக்கப் படையினர் இவ்வார முற்பகுதியில் இங்கிருந்து விலகிச் சென்ற பின் காபுல் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. நாணய பரிமாற்ற சேவையில் ஈடுபடும் வெஸ்டர்ன் யூனியன் மற்றும் மணிகிராம் என்பன காபுலில் மீண்டும் செயற்படத் தொடங்கி உள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு உதவக் கூடிய ஏனைய இரண்டு முக்கிய நாடுகளாக சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் காணப்படுகின்றன. ஆனால் அவர்களின் நிகழ்ச்சி நிரல்கள் வித்தியாசமானவை. அவை தமது அமெரிக்க எஜமானர்களின் வழிமுறையைப் பின்பற்றக் காத்திருப்பவை.
இஸ்லாத்தின் தேசம் என வர்ணிக்கப்படும் தேசம் சவூதி அரேபியா, ஆனால் துரதிஷ்டவசமாக அது தனது சுய இருப்புக்காக அமெரிக்காவிடம் தங்கி உள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு முறை இது பற்றி குறிப்பிடும் போது அமெரிக்காவின் தயவு இன்றி சவூதி அரேபிய அரசால் இரண்டு வாரங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தமை இங்கு நினைவூட்டத்தக்கது.
இன்று சவூதியும் அமீரகமும் இஸ்லாமிய அடிப்படையிலான ஜனநாயக ஆட்சி முறைகளுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய நிகழ்ச்சி நிரலை அமுல் செய்யும் பிரதான நாடுகளாக உள்ளன. எகிப்து மற்றும் அண்மையில் துனிஷியா ஆகிய நாடுகளில் இஸ்லாமிய அடிப்படையிலான ஜனநாயக ஆட்சி முறைகளுக்கு முடிவு கட்டுவதில் சவூதி, அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் மகத்தான பங்களிப்புக்களை வழங்கி உள்ளதோடு பெருந் தொகை நிதியையும் செலவிட்டுள்ளன.
மறுபறத்தில் தற்போது யெமனில் சவூதி தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ள காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்கள் கூட அமெரிக்காவுக்காக சவூதி அரேபியா நடத்தி வரும் யுத்தம் என்றே குறிப்பிட வேண்டி உள்ளது. அமெரிக்காவில் இருந்து பெருந் தொகையான நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்து யெமனில் சவூதி அரேபியா பாவித்து வருகின்றது.
அமெரிக்காவின் ஆயத விற்பனைத் தேவைக்காக சவூதி நடத்தி வரும் இந்த யுத்தம் காரணமாக யெமன் தேசத்து மக்களில் இரண்டரை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். நவீன உலகின் மிக மோசமான மனிதப் பேரழிவு நிலை அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டும் கூட இந்த யுத்தம் மட்டும் இன்னும் தொடருகின்றது.
மறுபுறத்தில் தலிபான்கள் சரிவடைந்து விடாமல் பாதுகாக்க சீனா முன்வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் பூமியில் மிக அரிய வகையிலான பல மூலப்பொருள்கள் கணிசமான அளவு புதையுண்டுள்ளன. இவற்றுள் பல, நவீன கைத்தொழில் துறைக்கு மிகவும் தேவையானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி சுமார் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மாபெரும் இந்த செல்வத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது தான் சீனாவின் நோக்கம். இங்கு சீனா மேற்கொள்ளும் முதலீடுகள் மேற்குலகில் இருந்து அதன் நேரடி முதலீட்டை நீக்கக் கூடும். இது ஏற்னகவே ஓரளவு நடந்தும் உள்ளது. ஏனெனில் ஐ.நாவின் மிக அண்மிய தரவுகளின் படி சீனா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவை விட பத்து மடங்கு அதிகமாக ஏற்கனவே முதலீடுகளைச் செய்துள்ளது. இதன்படி தனது அவசர தேவைகளுக்கு முகம் கொடுப்பதற்கான குறுகிய கால உதவிகள் மட்டுமே தற்போது ஆப்கானிஸ்தானுக்கு தேவையாக உள்ளது. (முற்றும்)
லத்தீப் பாரூக்