தலிபான்களை நாசப்படுத்தவும் அமெரிக்க ஐரோப்பிய யுத்தக் குற்றங்களை மூடி மறைக்கவும் இரவு பகலாக ஓய்வின்றி உழைக்கும் மேலைத்தேச ஊடகங்கள்!

Date:

லத்தீப் பாரூக் 

1996 முதல் 2001 வரை தலிபான்கள் மேற்கொண்ட அடக்குமுறை மற்றும் பெண்கள் மீதான மோசமான செயற்பாடுகள் என்பனவற்றை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி மக்கள் மத்தியில் தமக்கு எதிரான மோசமான பிரசாரங்களைக் கட்டவிழ்த்து வருவதாக மேலைத்தேச ஊடகங்கள் மீது தலிபான்களின் தலைவர்களில் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார். தலிபான்களின் கடந்த காலங்களை நினைவூட்டிக் கொண்டே அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் யுத்தக் குற்றங்களை அவை மூடி மறைத்து வருகின்றன என்றும் அவர் சாடி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அண்மையில் அமெரிக்காவை தோற்கடித்து மீண்டும் தலிபான்கள் ஆட்சியைப் பொறுப்பேற்றது முதல் அமெரிக்கா இழைத்த யுத்தக் குற்றங்களை மேற்குலக ஊடகங்கள் புறக்கணித்து வருகின்றன. ஈவு இரக்கமற்ற பாரபட்சமான கைதுகள், ஆயிரக்கணக்கான பொது மக்கள் சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் கொல்லப்பட்டமை, அப்பாவி ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் முடமாக்கப்பட்டமை, குடும்பங்கள் அவற்றின் வாழ்வாதாரங்களையும் அவற்றை ஈட்டிக் கொடுத்தவர்களையும் இழந்தமை, சிறுவர்கள் அநாதைகளாக்கப்பட்டமை, பெண்கள் விதவையாக்கப்பட்டமை, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உன்னதமான கலாசாரங்களும், சமூகக் கட்டமைப்புக்களும் சிதைக்கப்பட்டமை, பெறுமதி மிக்க சமய விழுமியங்கள் நிந்திக்கப்பட்டமை என இந்த யுத்தக் குற்றப் பட்டியல் நீண்டு செல்கின்றது. அச்சு மற்றும் இலத்திரனியல் முறையிலான பல சுதந்திரமான அறிக்கைகளின் பிரகாரம் ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருட கால அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து லட்சத்துக்கும் அதிகமாகும்.

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆயிரக் கணக்கில் அநாதைகள் உள்ளனர். இவர்களுள் பலர் தமது பெற்றோர் அல்லது உறவினர் அல்லது அயலவர் அல்லது நண்பர்கள் பலவந்தமாக இழுத்தச் செல்லப்பட்ட போது அல்லது தாக்கப்பட்டபோது அல்லது கற்பழிக்கப்பட்ட போது அல்லது கோரமாகக் கொல்லப்பட்டபோது நேரடியாகக் கண்டவர்கள். இந்தச் சிறுவர்களைப் பாதுகாக்க எவரும் முன்வரவில்லை மாறாக அவர்களை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தவே பல்வேறு நோக்கம் கொண்ட குழுக்கள் முன்வந்தன.

ஆப்கானிஸ்தானின் கலாசாரம் என்பது மிகவும் கூட்டுத்தன்மை கொண்டது. பெரும்பாலும் அந்த மக்கள் தமது சொந்த நலனைப் பார்க்கிலும் குடும்ப நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள். அதாவது குடும்ப நலன் என்பது தமது சொந்தத் தேவைகளிலும் பார்க்க அதிக முக்கியத்துவம் கொண்டது எனக் கருதி காரியமாற்றும் இயல்பு கொண்டவர்களே ஆப்கானிஸ்தான் மக்கள். ஒருவர் தனது இனம் அல்லது குலத்தின் மீது கொண்டுள்ள பரிவைக் காட்டிலும் தனது குடும்பத்தின் மீது பரிவும் பாசமும் கடப்பாடும் கொண்டவராகவே காணப்படுவார்.

எந்தவிதமான நியாயமும், ஈவு இரக்கமும் இன்றி அமெரிக்காவும் பிரிட்டனும் அப்கானிஸ்தானின் அப்பாவிப் பொது மக்களை கொன்று குவித்தமையானது அன்றைய ஐ.நா செயலாளர் கொபி அனன் பயங்கரவாதம் என்றால் என்ன என்று உலகுக்குப் புரியும் படி தார்மிக நியாயங்களோடு தெளிவாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என பகிரங்கமாக கோரிக்கை விடுக்கும் நிலையை ஏற்படுத்தியது. பயங்கரவாதம் என்பதற்கு பிரபஞ்சரீதியான ஒரு விளக்கத்தை வழங்கி அதில் உலகத் தலைவர்கள் இணக்கம் காண வேண்டும் என்றும் அவர் கோரினார்.

தலிபான்களின் கலாசார ஆணைக்குழுவின் முன்னணி உறுப்பினரான அப்துல் கஹார் பல்கி என்பரை மேற்கோள் காட்டி பத்தி எழுத்தாளர் அன்ஜுமான் றஹ்மான் ஒரு கட்டுரையில் சிரேஷ்ட தலிபான் தலைவர்கள் அரச மற்றும் தனியார் துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவு ஊழியர்கள் உற்பட சகல பொது மக்களுக்கும் பொது மன்னிப்பை அறிவித்துள்ள போதிலும், பிரதான பிரிவு மேலைத்தேச ஊடகங்கள் தொடர்ந்தும் பாதகமான செய்திகளையே வெளியிட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

காபுலில் உள்ள ஹமீட் கர்ஸாயி விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பகரமான சூழலுக்கும் அமெரிக்காவே காரணம் என்று அவர் சாடி உள்ளார். அமெரிக்காவின் ஹொலிவுட் அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ளவே அவர்கள் தொடர்ந்தும் முயலுகின்றனர். மறுபுறத்தில் சுபிட்சம் அல்லது பசுமை பற்றி அவர்கள் அளித்த போலியான வாக்குறுதிகளையும் அவர்கள் தக்க வைக்க முயலுகின்றனர். கடந்த சுமார் நான்கு தசாப்தங்களாக வெளிநாடுகளின் படையெடுப்பு மற்றும் திணிக்கப்பட்ட யுத்தம் என்பன காரணமாக பெரும்பாலான ஆப்கான் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வதால் சிறந்த வாழ்வாதாரங்களையும் முன்னேற்றகரமான வாழ்வு முறைகளையும் தேடி நகர வேண்டிய இயல்பான தேவை எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மிக மோசமான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த ஒரு நாட்டை 2001இல் அமெரிக்கப் படை வீரர்கள் மீட்டு எடுத்ததைப் போல் தான் ஆப்கானிஸ்தான் தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன. அங்கு இடம்பெற்ற வெளிநாட்டு ஊடுறுவல்களை நியாயப்படுத்தவே இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் அதேவேளை ஆப்கானிஸ்தான் ஒரு பாரிய மனிதப் பேரழிவின் முனையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தும் இருந்தது. அந்த நாடு மிக மோசமான வரட்சிக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் முகம் கொடுத்த போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் தான் மேற்கொண்ட யுத்தத்துக்காக அமெரிக்கா 2.26 ட்ரில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. யுத்த செலவுகளுக்கான கணக்குகளில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான நிதி சுமார் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பராமரிப்புக்காகவும், ஆயிரக்கணக்கான குண்டுகளையும் ஏவுகணைகளையும் அங்கே பொழிவதற்காகவும்; செலவிடப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினர் செலவழித்தாலும் கூட அவை ஒரு குறிப்பிட்ட திட்டத்தையும் நிகழ்ச்சி நிரலையும் ஊக்குவிப்பதற்காகவே செலவிடப்பட்டுள்ளன. அதில் தலிபான்கள் ஒரு தீய சக்தியினர் எனக் காட்டும் விளம்பரங்களும் பிரதான இடம் பிடித்துள்ளன என்று தலிபான் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

அப்துல் கஹார் என்ற அந்த அதிகாரியின் கூற்றுப்படி ஆப்கானிஸ்தான் மக்களுக்காக அமெரிக்கா முன் வைத்த பிரதான இலக்கை அடைய அது தவறி விட்டது. அதுதான் மேலைத்தேச ஜனநாயகம். இந்த மேலைத்தேச ஜனநாயகம் என்ற எண்ணக்கரு ஆப்கானிஸ்தானில் ஆரம்பம் முதலே பிசுபிசுத்துப் போன ஒரு விடயமாகவே காணப்பட்டது. காரணம் அது அங்கே நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகும். பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைத்து நிற்கக் கூடியதும் அல்ல. இஸ்லாமிய சட்டங்களோடு முரண்படும் அந்த எண்ணக்கருவை பெரும்பாலான ஆப்கானிஸ்தான் மக்கள் நிராகரித்து விட்டனர்.

அப்துல் கஹார் ஒரு வாக்குறுதியையும் அளித்துள்ளார். நீண்ட நாட்களாக நீடித்த யுத்தம் மற்றும் அழிவு என்பன காரணமாக நாம் எல்லோருமே ஒரு நல்ல பாடத்தைப் படித்துள்ளோம் என்று நம்புகின்றோம். கடந்த காலத்தில் இருந்து எல்லோரும் விடுபட வேண்டும் என நாம் உற்சாகம் ஊட்டுகின்றோம். அந்த இருள் சூழ்ந்த கடந்த காலத்தை மறந்து விட்டு புதிய எதிர்காலத்தை நோக்கி நமது தேசம் முன்னேற வேண்டும். அப்போது தான் எமது நாடும் இந்தப் பிராந்தியமும், முழு உலகும் சமாதானத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். எமது மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும் சுபிட்சத்துடனும் வாழ்ந்து பாரம்பரியம் மிக்க ஒரு பாரிய மனித நாகரிகத்துக்கு பங்களிப்புச் செய்ய முடியும். ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவர் மீது தமது கலாசாரத்தையும் வாழ்வு முறையையும் திணிக்க முயலாமல் தமக்கே உரிய தனித்துவத்துடனும் நாகரிகத்துடனும் வாழ முடியும்.

ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு தான் அமெரிக்கா தலைமையிலான முஸ்லிம் நாடுகள் மீதான யுத்தத்தின் ஆரம்பம். வெறும் பொய், ஏமாற்றம் என்பனவற்றின்; அடிப்படையிலேயே ஆப்கானிஸ்தான் மீதான யுத்தம் தொடங்கப்பட்டது. அமெரிக்க ஆயுத தொழில்துறையின் தீய நிகழ்ச்சி நிரலை அமுல் செய்வதும் அமெரிக்க கூட்டாண்மை நிறுவனங்களினதும் ஒப்பந்தக் காரர்களினதும் தேவைகளை நிறைவேற்றுவதும்தான் இந்த யுத்தத்தின் பிரதான குறிக்கோள். உதாரணத்துக்கு செப்டம்பர் 11 தாக்குதலின் பின் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஜுனியர் 24 மணிநேரத்துக்குள் அல்குவைதா மீது குற்றம் சாட்டினார். தான் ஆப்கானிஸ்தான் மீது நடத்தவுள்ள படையெடுப்பில் பங்கேற்குமாறு 27 தினங்களுக்குள் உலக நாடுகளை அச்சுறுத்தினார்.

ஆனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தை மீள் வடிவமைப்பு செய்வதற்காக முன் கூட்டியே வகுக்கப்பட்டிருந்த சதித் திட்டத்தை அமுல் செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கவிழ்த்து தனக்கு தேவையான பொம்மைகளை அங்கு அதிகாரத்தில் அமரச் செய்வதற்காகத் தான் இந்த படையெடுப்பை அவர் நடத்தினார் என்பது பிற்காலத்தில் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்த இந்தத் திட்டம் பின்னர் குவைத், ஈராக், லிபியா, சிரியா என வியாபித்துச் சென்றது. இதனால் மக்கள் அடைந்த துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னமும் அகதி முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார, கலாசார, சமய, இராணுவ, நிதி என எல்லாப் பிரிவுகளையும் அமெரிக்கா சின்னாபின்னப்படுத்தியது. இவை எல்லாம் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போர் என்ற போர்வையில் நடத்தி முடிக்கப்பட்டன.

பயங்கரவாதிகளைத் தேடி வேட்டையாடும் போர்வையில் உலக நாடுகளில் ஒரு வகையான அச்ச நிலையும் வெறித்தனமும் ஏற்படுத்தப்பட்டது.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் முற்றாக அழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த நிலை இன்றும் உலக நாடுகளில் தொடருகின்றது. முஸ்லிம்கள் தொடர்ந்து கொல்லப்படுவதும் அகதி முகாம்களை நோக்கி விரட்டி அடிக்கப்படுவதும் இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

(முற்றும்)

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...