அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட சிறப்புச் செய்தி

Date:

ரபீஉனில் அவ்வல் மாதம் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மாதமாகும். ஏனெனில், இந்த மாதத்தில் எம் உயிரிலும் மேலான இறுதி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பால் மனிதகுலம் ஆசீர்வதிக்கப்பட்டது.

‘ரபீஉன்’ என்றால் ‘வசந்தம்’ என்பது பொருள். வசந்த காலம் பூமிக்கு பசுமையையும், அழகையும் கொண்டு வருவது போல ‘வசந்தம்’ எனப் பொருள்படும். ‘ரபீஉனில் அவ்வல்’ மாதத்தில் பிறந்த உயிரிலும் மேலான அருமைத் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சம், வெற்றி, மகிழ்ச்சி, அமைதி மற்றும் மனநிறைவையும் கொண்டு வந்தார்கள்.

‘நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாகவே அன்றி அனுப்பவில்லை.’ (அத்தியாயம்: அல்-அன்பியா, வசனம்: 107)

இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹு தஆலா உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பினான். அன்னார் இரக்கம், கருணை, தயவு மற்றும் மென்மையுடையவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய கருணை முதியவர்கள், சிறார்கள், ஆண்கள், பெண்கள், முஸ்லிம்கள் இன்னும் முஸ்லிம் அல்லாதவர் அனைவர் மீதும் காணப்பட்டது. அவர்களது கருணை மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் சென்றடைந்தது. அருமைத் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கையில் கருணைக்கான சான்றுகள் நிறைந்தே காணப்படுகின்றன.

உயிரிலும் மேலாக மதிக்கப்படும் இறுதித் தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அளவிலா அன்புடனும் நேசத்துடனும் மிகவும் உணர்வுப்பூர்வமாக நினைவு கூறுகின்ற இந்த வேளையில் அவர்கள் போதித்த மனித நேயம், அன்பு, கருணை, பிறர் நலன் பேணல் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்தல் முதலான பண்புகளை கடைப்பிடித்து வாழ நாம் திடசங்கற்பம் பூணுவோமாக. இந்த காலத்தில் மார்க்க மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழைக் கூறி, அவர்களின் சிறப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்ல பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யக்கூடியவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உயர்ந்த கூலிகளை வழங்குவானாக.

கொவிட்-19 தொற்றின் காரணமாக நம் நாட்டு மக்களில் பலர் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற இந்த நேரத்தில் தேவையுடைய மக்களுக்கு இன, மத பாகுபாடுகளின்றி உதவிக்கரம் நீட்டுமாறும் அனைவரையும் தயவாய் வேண்டிக் கொள்கின்றோம். மேலும் பயங்கர கொரோனா தொற்றின் ஆபத்து நம் நாட்டிலிருந்தும், உலகிலிருந்தும் விரைவில் நீங்கி எல்லோருக்கும் சுபீட்சமான வாழ்வு பிறக்க பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் எல்லோரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

நமது தாய் மண்ணில் சாந்தியும் சமாதானமும் நல்லுறவும் நல்லிணக்கமும் பொருளாதார அபிவிருத்தியும் ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவிடம் பிரார்த்திக்கின்றோம்.

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2021.10.19 (1443.03.12)

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...