வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் இடம்பெற்று இன்றுடன் 31 வருடங்கள் பூர்த்தி அதனை முன்னிட்டு Newsnow இன் விசேட கட்டுரை.
பி.எம் முஜிபுர் ரஹ்மான்.
முசலி பிரதேச சபை உறுப்பினர்.
முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த பரிசு என்ன?
இனச்சுத்திகரிப்பும் பலவந்த வெளியேற்றமும்
“சுமார் பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக எம்முடன் வாழ்ந்த இனத்தை, எமது தாய் மொழியும் அவர்களது தாய்மொழியும் ஒன்றாக இருக்கும் இனத்தை, எமது வாழ்க்கை நடைமுறையில் பல அம்சங்களை தமது வாழ்க்கை முறையாகக் கொண்ட இனத்தை, தமது பாரம்பரியப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த அம்மக்களை இரவோடு இரவாக துரத்தும் மனித இதயமில்லாச் செயலைச் செய்ய விடுதலைப் புலிகள் எப்படித்தான் கற்றுக் கொண்டார்களோ.
வடபகுதியை விட்டு 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்ட சம்பவத்தைக் தமிழ் இனத்தில் நான் பிறந்ததற்காக மிகவும் வெட்கப்பட்டு தலை குனிந்து நிற்கிறேன்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ‘’தமிழீழம் சிவக்கிறது’’ என்னும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் பழ. நெடுமாறன் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் அப்புத்தகத்தின் 348 ஆம் பக்கத்தில் கீக்கண்டவாறு எழுதியதுதான், ‘’ சிங்கள அரசின் கைப்பாவையான அஷ்ரப் கூட புலிகள் மீது குற்றம் சுமத்த முடியவில்லை, இக்கொலைகளைச செய்தவர்கள் சிங்கள இராணுவத்தினரே என்னும் உண்மை முஸ்லிம் மக்களிடையே அம்பலமாகி விட்டதே இதற்கு காரணமாகும்.’’ எனச் சொல்கிறார். எப்படி இருக்கிறது பழ. நெடுமாறனின் அரசியல் நேர்மை ?
எமது போராட்டத்தில் முஸ்லிம் மக்களின் பங்கு பிரித்துப் பார்க்க முடியாததாகும் தமிழ் மக்கள் எப்படி சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளுக்கு ஆளாகிரார்களோ, அதைப் போலவே முஸ்லிம் மக்களும் இந்தச் சிங்கள பேரினவாதத்தின் நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் பங்காளிகளாக முஸ்லிம் மக்களை ஆக்கிக் கொள்ள தவறியதுதான் இயக்கங்கள் விட்ட மாபெரும் தவறு, நாங்கள் இதுபற்றி நன்றாகச் சிந்திக்கலாம், செயல்படலாம், ஒன்றும் தாமதமாகிவிடவில்லை.” என ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் எனும் புத்தகத்தில் நூலாசிரியர் சி.புஸ்பராஜா குறிப்பிடப்பட்டுள்ளதை நான் இங்கு மேற்கோல் காட்டி வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தை குறிப்பிட விரும்புகிறேன்.
வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகி இம்மாதத்துடன் 31 வருடங்களாகின்றன. இக்கரிய இனச்சுத்திகரிப்பு நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் 1990 ஒக்டோபர் மாத இறுதி வாரத்தில் நிகழ்த்தப்பட்டது. உடுத்திய உடையுடன், கைச்செலவுக்காக 500 ரூபாய்களை மாத்திரமே எடுத்துச் செல்ல அனுமதித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இச் செயல் இம்மக்களின் வாழ்வை பாரிய பின்னடைவுக்கு இட்டுச் சென்றுள்ளதாக இம்மக்கள் உணர்கின்றனர்.
வரலாற்றுக் காலம் முதல் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகள், ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்த இம்முஸ்லிம்கள் தங்களது தாயக பூமியை விட்டு 24 மணித்தியாலத்திற்குள் (சில பிரதேசங்களுக்கு 2 மணித்தியாலங்கள்) சுமார் 75000 முஸ்லிம்களை வெளியேறுமாறு பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர். நகைகள், ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மேலதிக பணங்களை பள்ளிவாசல்கள் மற்றும் பொது மைதானத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்.
இக் குறுகிய கால பலவந்த வெளியேற்ற அறிவித்தலால் செய்வதறியாது திகைத்த, வடமாகாண முஸ்லிம்கள் என்ன செய்வது? எங்கு செல்வது? எவ்வாறு செல்வது? என எந்தத் திட்டமுமின்றி நிலை குலைந்து நின்றனர். மேலும், அது தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைக் காலம் என்பதால் பல அசௌகரிகங்களுக்கு உள்ளானார்கள். இறுதியில் அப்போதைய அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியைக் கோரியுள்ளார்கள். ஆனால், முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் செவிசாய்க்க மறுத்து விட்டனர்.
அதேநேரம் கடும் காற்றும் மழையும் காரணமாக யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மறுபுறம் விடுதலைப் புலிகள் ஆயுதமுனையில் உடனடியாக வெளியேறுமாறு கூறுகின்றனர். எங்கு செல்வது? என்ன செய்வது? என அறியாது திகைத்து நின்ற இம்மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலினால், இறைவனே (அல்லாஹ்) பாதுகாவலன் அவன்மேல் பாரம்சாட்டிவிட்டு கடலில் குதித்துள்ளனர். இறைவனின் உதவியால் ஒரு வழியாக கல்பிட்டி மற்றும் புத்தளப் பிரதேசத்தை சென்றடைந்துள்ளனர்.
இம் முஸ்லிம்கள் கல்பிட்டி மற்றும் புத்தளத்தை அடைந்ததும் அங்குள்ள மக்கள், தங்களிடம் இருந்தவற்றை கொடுத்து உபசரித்துள்ளனர். ஆனால், அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இம்மக்களுக்கான உடனடித் தேவைகள் எதனையும் செய்யவில்லை என அம்மக்கள் ஆதங்கப்பட்டனர். மேலும், 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலம் வரை இம்மக்கள் அப்பிரதேசங்களிலுள்ள தனிநபர்களின் காணிகளில் அகதி முகாம்களில் இருந்துள்ளனர். அங்கு தென்னை மர ஓலைகளால் தங்களுக்கான கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அகதி முகாம்களில் வாழ்ந்த வடமாகாண முஸ்லிம்களின் வாழ்வியல் ஒழுங்கு சிரழிந்துள்ளது. பலர் கல்வியை இழந்துள்ளார்கள். சிலர் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வாலிபத்தை அகதி முகாம்களிலேயே சீரழித்துள்ளனர். ஒருசிலர் முன்னேறிய வரலாறும் உண்டு.
இவ்வாறு 2009 ஆம் ஆண்டு யுத்தம் வெற்றி கொள்ளப்படும்வரை அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வந்துள்ளர்கள். யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் மிகுந்த ஆர்வத்தோடு, மீண்டும் தமது சொந்த தாயக பூமியை நோக்கி மீள்குடியேறி வருகின்றனர்.
மீள்குடியேற்ற சவால்களும் வடமாகாண நிர்வாகமும்
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணில் மீள்குடியேறச் சென்றபோது, இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும், அழுத்தங்களையும் வடமாகாண நிருவாகம் தெரிவிப்பதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது, இவர்கள் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், தென்னிலங்கையான புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் வடமாகாணத்தில் வந்து குடியேறுவதாக தெரிவித்து இவர்களின் பதிவினை ஏற்க மறுக்கின்றனர். பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்ததன் பின்னர், மீள்குடியேறுவதற்கான எந்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதுமில்லை என இம்மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் பிரதேசங்களுக்கு மீள்குடியேறச் செல்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு காணிப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். இதனைத் தீர்ப்பதற்காக வடமாகாண சபையோ, வடமாகாண நிருவாகமோ முயற்சிப்பதில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, மன்னார் முசலிப் பிரதேசம் வடமாகாணத்தின் ஒரு பகுதியாகும். அதன் தென் பகுதியில் குடியேறச் சென்ற முஸ்லிம்களுக்கு பாரிய காணிப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. அது நாட்டில் பாரிய விஸ்வரூபம் எடுத்து, தென்னிலங்கையில் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஆனால், முசலிப் பிரதேசம் வடமாகாணத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில், அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், அப்போதைய வடமாகாண முதலமைச்சர் அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து நாட்டிக்கும் சர்வதேசத்திற்கும் தெரிவிக்க மறுத்ததற்கான காரணம் என்ன என இம்மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேநேரம் மன்னார், முசலிப் பிரதேசத்திற்கு அருகாமையில் உள்ள நானாட்டான் பிரதேசத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு சிறிய காணிப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனைப் பார்வையிட்டு, தீர்த்து வைப்பதற்காக அப்போதைய முதலமைச்சர் விஜயம் செய்துள்ளார். ஆனால், அருகில் உள்ள முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட முசலிப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினையைப் பார்த்து சுமுகமாக தீர்ப்பதற்கு நேரம் இல்லாமல் போனதற்கான காரணம் என்ன? ஏன் இந்த பாரபட்சம்?
இதேபோல், முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் கல்வித் துறை, சுகாதாரத் துறை, விவசாயத் துறை, மீன்பிடித் துறை, ஏன் போக்குவரத்து சேவை என அனைத்திலும் இவ்வாறான அடக்குமுறைகளும், பாகுபாடுகளும், நீதியற்ற செயற்பாடுகளும் இந்த முஸ்லிம்களுக்கு நடைபெறுவதாக ஆதங்கப்படுகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 31 வருடங்களாக அகதி வாழ்வின் மூலம் வாழ்வை இழந்த முஸ்லிம்களுக்கு மாத்திரம்தானா இவ்வாறான பாகுபாடுகள்? இதுதானா வட மாகாணத்திலுள்ள சமூக நீதியும், சமத்துவமும், சகவாழ்வும் என்று அவர்கள் கண்ணீர் மல்க கேட்கின்றனர்.
ஏனெனில், “இலங்கை பிரஜை ஒருவர் எங்கும் வாழலாம்“ என்று அரசியல் யாப்பு கூறுகின்றது. ஆனால், வடக்கு முஸ்லிம்களுக்கு இவ்வுரிமை மறுக்கப்படுவதாக உணர்கின்றனர். எனவே, இம்முஸ்லிம்களின் கஷ்டங்களை உணர்ந்து, நீதியான முறையில் செயற்பட்டு சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு, நல்லிணக்கம், சமூக நீதியை கட்டியெழுப்பி, சுபீட்சமான வடமாகாணத்தை உருவாக்க விரிந்த மனதோடு இந்நிருவாகம் ஒத்துழைக்க வேண்டும் என இம்மக்கள் தெரிவின்றனர்.
மீள்குடியேற்ற உரிமையும் நிலைமாறு காலமும்
நிலைமாறு கால நீதி என்பது யுத்தத்தால் வெளியேற்றப்பட்டு அகதிகளாகவும் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்கவும், மீண்டும் இவ்வாறு நடக்காது என உத்தரவாதம் அளிப்பதுமாகும். இந்நீதி முறைமை பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்நீதி ஒழுங்கை ஐக்கிய நாடுகள் சபையும் அங்கீகரித்துள்ளது. இதனை கடந்த நல்லாட்சி அரசாங்கம் அங்கீகரித்து கையொப்பமிட்டுள்ளது.
ஆனால், இந்நீதி வடமாகாண முஸ்லிம்களுக்கு இல்லையோ என்று நோக்கும் அளவுக்கு வடமாகாணத்தில் பாகுபாடுகள் நடைபெறுவதாக உணரக்கூடியதாக இருக்கின்றது. ஏனெனில், வடமாகாண முஸ்லிம்கள் உடனடியாக மீளக்குடியேற முடியாதவர்களாக உள்ளனர். சுமார் 31 வருடங்களாக பாவனையற்று இருந்த இவர்களின் நிலங்கள் யாவும் அடர்ந்த காடுகளாக மாறியுள்ளன. இக்காடுகளை அழித்து, துப்பரவு செய்து, தற்காலிக கொட்டில்களை அமைத்து, அதில் தற்காலிக மலசல கூடங்களை உருவாக்கி மீளக்குடியேறுவது என்பது கட்டம் கட்டமாக நிகழ வேண்டிய ஒரு நிகழ்வாகும்.
அதுவும் 31 வருடங்களாக அகதி முகாம்களில் அரசாங்கத்தின் சிறிய கொடுப்பணவுகளை மாத்திரம் நம்பி வாழ்ந்த இம்மக்கள் எப்படி உடனடியாக மீளக்குடியேற முடியும்? அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, உதவி இன்றி எப்படி தற்காலிக கொட்டில்களை அமைக்க முடியும்? அதில் எவ்வாறு மலசல கூடங்களை அமைத்தல்? இவைகளுக்கு ஏற்படும் செலவுகளுக்கு என்ன வழி? இவைகளுக்கு யார் பொறுப்பு?
அதுவும் பலவகையான விச ஜெந்துக்கள் உள்ள இப்பிரதேசத்தில் உடனடியாக வந்து மீளக்குடியேறுமாறு வடமாகாண நிருவாகம் நிர்ப்பந்திக்கின்றது. இல்லையெனின் வடமாகாணத்திலுள்ள எந்த விடயத்திற்கும் உடந்தையாக மாட்டீர்கள் எனக்கூறுகின்றனர். இது தங்களது மீளத்திரும்பும் உரிமைக்கு திட்டமிட்டு முட்டுக் கட்டை போடப்படுவதாக உணர்கின்றனர்.
உதாரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத வடமாகாண முஸ்லிமான அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் கூறினார், “நான் மீளக்குடியேற விரும்புகிறேன். ஆனால், எனது தொழில் நாட்டின் இன்னுமொரு மாகாணத்தில் இருக்கிறது. எனக்கு அங்குள்ள அரச நிருவாகம் உடனடியாக மாற்றம் கொடுக்குமாக இருந்தால் நான் உடனடியாக மீளக்குடியேற விரும்புகிறேன். அவ்வாறு மாற்றம் வழங்கவில்லையாயின் நான் எவ்வாறு மீள்குடியேற முடியும்?. அதேநேரம் எனது இடமாற்றத்தை உடனடியாக வடமாகாண நிருவாகம் ஏற்றுக் கொள்ளுமா? இவ்வாறான இக்கட்டான நிலையில், எனது குடும்பப் பதிவு குறித்து என்ன வழிகாட்டலை வடமாகாண நிருவாகம் வழங்குகிறது?”
மேலும் அவர் கேள்வி எழுப்புகிறார், தொழில் நிமித்தம் நாட்டின் ஏனைய மாகாணங்களின் வாழ்கின்றவர்கள், அவர்களது பதிவுகளை தொழில் செய்யும் மாகாணங்களிலா வைத்திருக்கிறார்கள். அவ்வாறே அவர்களது வாக்குகளும் தொழில் செய்யும் மாவட்டங்களிலா இருக்கின்றன? இது ஒரு சாதாரண நிருவாக ஒழுங்குதானே. இந்த சாதாரண நிருவாக ஒழுங்கு ஏன் வடமாகாண முஸ்லிம்களுக்கு உடந்தையாவதில்லை? வடக்கு முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஏன் இந்த அநீதி?
மேலும், சித்தி கதீஜா கருத்துத் தெரிவிக்கையில், (பெண் தலைமை தாங்கும் குடும்பம்) “எனக்கு மூன்று பிள்ளைகள் (ஒரு ஆண் இரண்டு பெண் பிள்ளைகள்) இருக்கிறார்கள். எனக்கு உதவிக்கு யாரும் இல்லை. நான் மீள்குடியேறுவதற்காக சென்று எனது பெயரைப் பதியுமாறு கிராம அதிகாரியிடம் கேட்டபோது, நீங்கள் இங்கு இல்லை என்பதால் உங்களது பெயரைப் பதிய முடியாது என்கின்றார்.
நான் எப்படி உடனடியாக மீள்குடியேற முடியும்? நான் அகதி முகாமில் பல சிரமங்களுக்கு மத்தியில் கூலித் தொழில் செய்து எனது பிள்ளைகளை வளர்த்து வருகிறேன். எனது பிள்ளைகளை அகதி முகாமில் தனியாக விட்டு விட்டு எவ்வாறு வடக்கில் உள்ள எனது ஊருக்குச் சென்று காணிகளை துப்பரவு செய்து தற்காலிக கொட்டிலை அமைக்க முடியும்?
அவ்வாறு வருவதாக இருந்தாலும் எனது காணியை யார் துப்பரவு செய்து தருவது? அத்தோடு, மலசல கூட வசதிகள் இன்றி பெண் பிள்ளைகளோடு நான் எப்படி மீள்குடியேற முடியும்? அவ்வாறு மீள்குடியேற வேண்டும் என்றால் தற்காலிக கொட்டில்கள் மற்றும் மலசல கூடங்களை அமைப்பதற்கான செலவுகளை யார் தருவது? அதனைச் செய்வதற்கான வசதி என்னிடம் இல்லையே” இவைகளை இங்குள்ள நிருவாகம் ஏன் உணர மறுக்கிறது?
இங்குள்ள நிருவாகத்தின் இச்செயற்பாட்டால் இப்போது எனது பெயர் புத்தளத்திலும் இல்லை இங்கும் இல்லை. இரு இடத்திலும் பதிவின்றி, இலங்கை பிரஜையாக இருக்கிறேனா இல்லையா என்றுகூட தெரியாமல் அகதி முகாமில் வாழ்கிறேன். அதாவது, புத்தளத்தில் இருந்த பதிவையும் வெட்டிவிட்டேன். அதேநேரம், எனது சொந்த ஊரிலும் பதிவில்லை, எங்களுக்கு என்ன தீர்வை அரசாங்கமும் வடக்கு நிருவாகமும் முன்வைக்கும்? என கண்ணீர் மல்கக் கூறினார்.
காணி விவகாரமும் வீட்டுத் திட்டமும்
1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து சுமார் 75000 பேர் வெளியேற்றப்பட்டனர். 31 வருட சாதாரண சனத்தொகை வளர்ச்சியின் மூலம் இப்போது இத்தொகை பலமடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்தவர்கள் எங்கு செல்வது? அவர்களின் காணிப் பிரச்சினைக்கு என்ன தீர்வு? என ஏங்குகின்றனர்.
உதாரணமாக: 1990 ஆம் ஆண்டு அரை ஏக்கர் குடியிருப்புக் காணியில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது. அவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் மற்றும் 3 பெண் பிள்ளைகள். இப்போது இக்குடும்பம் தந்தையோடு சேர்த்து ஏழு (7) குடும்பங்களாக மாறியுள்ளது. இந்த ஏழு குடும்பமும் அரை ஏக்கர் காணியில் எவ்வாறு ஏழு வீடுகளை அமைத்தல். இவர்களின் காணிப் பிரச்சினைக்கு என்ன தீர்வு? என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந் நிலையில் அரசாங்கத்தின் காட்டு இலாக்கா திணைக்களம் (Forest Department) மற்றும் காட்டு மிருகங்களைப் பாதுகாக்கும் திணைக்களம் (Wild life Department) என்பன 31 வருடங்களாக பாவனை இன்றி, காடுகளாக மாறியுள்ள மக்களின் இடங்களையும் ஆக்கிரமிக்கின்றனர். இதனால் மக்களுக்கும் அரச திணைக்களங்களுக்கும் இடையில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஆனால், வடமாகாண நிருவாகம் காணிப் பிரச்சினைகளில் கரிசனை கொண்டு தீர்க்க முயற்சிக்காமல் குறித்த அரை ஏக்கர் காணியில் ஏழு குடும்பங்களையும் தற்காலிக கொட்டில்களை அமைத்து மீள்குடியேறுமாறு நிர்ப்பந்திக்கின்றது. இல்லையாயின் அவர்களை குடும்பப் பதிவிலும், வீட்டுத் திட்டத்திலும் உள்ளடக்குவதில்லை என அறிவிக்கின்றனர்.
மேலும், இந்நிருவாகம் கொட்டில்கள் அமைப்பதற்கு உதவிகளை செய்வதுமில்லை. அதேநேரம், அரச திணைக்களங்களினால் ஆக்கிரமிக்கப்படுகின்ற இவர்களின் காணிகளை பாதுகாப்பதற்கு எவ்வித முயற்சிகளை மேற்கொள்வதுமில்லை. பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்காமல் மீள்குடியேற வேண்டும் என்றே நிர்ப்பந்திக்கின்றனர். இது இம்மக்களுக்கு பாரிய மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது.
பிரஜா உரிமை அழிக்கப்படும் வடமாகாண முஸ்லிம்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளால் வஞ்சிக்கப்பட்டு வாழ வழியின்றி 31 வருடங்களாக அகதி முகாம்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்ற வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியேற மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அவர்களின் வறுமை மற்றும் அரசாங்கத்தின் சட்ட ஒழுங்கு என்பவற்றால் உடனடியாக மீள்குடியேற முடியாமல் தவிக்கிறார்கள்.
இவர்களை உடனடியாக மீள்குடியேறுமாறு வடமாகாண நிருவாகம் நிர்ப்பந்திக்கின்றது. இல்லையாயின் வாக்குரிமை, கிராம சேவகரினால் வழங்கப்படுகின்ற நற்சான்றுப் பத்திரம் என்பவற்றை வழங்க மறுக்கின்றனர். அதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலந்தமாக வெளியேற்றப்பட்டு வாழ்கின்ற அகதி முகாம்கள் அமைந்துள்ள பிரதேசங்களிலும் இவர்களின் வாக்குரிமை மறுக்கப்படுகின்றது. அங்கும் கிராம சேவகரினால் வழங்கப்படுகின்ற நற்சான்றுப் பத்திரம் மறுக்கப்படுகின்றது. இதனால், இவர்களின் பதிவுகள் இரு இடங்களிலும் இல்லாமலாகின்றது.
மேலும், இவர்கள் அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்திற்கு உட்படுவதில்லை. இவர்களின் பிள்ளைகள் பல்கலைக்கழக நுழைவிலும் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். மேலும், கிராம சேவகரின் நற்சான்றிதழ் இன்மையால் தொழில் மற்றும் கல்வி என பல விடயங்களை இழக்கின்றார்கள்.
ஆனால், நிலைமாறு கால நீதி நடைமுறையில் உள்ளதாகவும், அது அகதிகளுக்கு கட்டம் கட்டமாக மீளக்குடியேறும் உரிமையை வழங்குவதாகவும் குறிப்பிடுகின்றது. ஆனால், வடமாகாண முஸ்லிம்களுக்கு இந்நீதியோ இது வழங்குகின்ற உரிமையோ இல்லையோ என்றுதான் உணரும் அளவுக்கு வடமாகாண நிருவாகம் இவர்களை அடக்குகிறதோ என்று உணரக் கூடியதாக இருக்கின்றது.
கொரோனாவும் வடக்கு முஸ்லிம்களின் வாக்குரிமையும்
அண்மையில் உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வடமாகாண முஸ்லிம்களையும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டது. மேலும், அவர்களின் பிரஜா உரிமையையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. கொரோனாவின் போது முழு நாட்டுக்குமான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டன. போன போனவர்கள் அந்தந்த இடங்களில், உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்தனர்.
இக் காலத்தில் அரசாங்கம் சமுர்த்தி பயணாளிகளுக்கு 5000 ரூபாயை வழங்கியது. இதில் வடமாகாணத்தில் பதிவிலுள்ள சிலர் புத்தளம் சென்று இருந்தனர். புத்தளம் கொரோனா பாதிப்பு எனக்கூறி சுமார் 2 மாதங்களாக முடக்கப்பட்டிருந்தது. அவ்வாறு புத்தளத்தில் முடக்கப்பட்டிருந்த வடமாகாண முஸ்லிம்களுக்கு அரசாங்கம் (வடமாகாண நிருவாகம்) பரிதாபப்பட்டு புத்தளம் சென்று 5000 ரூபாய்களை வழங்கியது. (இம்மனித நேய செயற்பாட்டை பாராட்டித்தான் ஆக வேண்டும்.)
அகதி முகாம்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்ற இம்மக்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 2 மாதங்களாக முடக்கப்பட்டு இருக்கின்றபோது, அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பதாக அறிவித்ததும், இம் மக்கள் உடனடியாக தங்களது பெயர்களையும் பதிவு செய்துள்ளனர். இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திய வடமாகாண நிருவாகம் அவர்களின் பெயர்ப் பட்டியலை பெற்றுக் கொண்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு கொத்தனி வாக்களிப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாக அறிவித்தனர். அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 31 வருடங்களாக செய்வதறியாது வாழ்வை இழந்து தவிக்கின்ற வடமாகாண முஸ்லிம்கள் கொத்தனி வாக்களிப்புக்காக தங்களது பெயர்களையும் பதிவு செய்துள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி கொத்தனி நிலையங்களில் வாக்களித்த, வடமாகாண முஸ்லிம்களில் சுமார் 7000 இற்கும் அதிகமான முஸ்லிம்களின் வாக்குகளை இப்போது வடமாகாண நிருவாகம் பதிய மறுக்கின்றது. இது அவர்களின் ஒட்டுமொத்த உரிமையையும், வாக்குரிமையையும் குழிதோன்றிப் புதைக்கும் செயலாகவே இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சந்தர்ப்பத்தில் அப்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் மிக அழகாக எடுத்துக் கூறினார். “நான் கொழும்பில் வாழ்கிறேன். எனது பிள்ளைகள் கொழும்பில் படிக்கிறார்கள். ஆனால், நான் மன்னார், தாராபுரத்தில் வாக்குப் பதிவினை வைத்துள்ளேன். அங்கேயே வாக்களிக்கின்றேன். அப்படியாயின் ஏன் இம்மக்களுக்கு வாக்குரிமையை வழங்க மறுக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
வடமாகாண நிருவாகம் கூறுவதுபோல் இருந்தால், அரசாங்கம் எதற்காக தபால் மூல வாக்குகளை வைத்துள்ளது என்ற கேள்வியை இம்மக்கள் எழுப்புகின்றனர். ஏனெனில், தபால் மூல வாக்கு என்பது தொழில் நிமித்தம் நாட்டின் ஏனைய பாகங்களில் வாழ்பவர்கள், தங்களது வாக்குரிமையை தனது சொந்த பிரதேசத்தில் செலுத்துவதற்காகவே வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு இச்சட்ட ஒழுங்கு செல்லுபடியற்றதோ என்று நோக்கும் அளவுக்கு இங்குள்ள நிருவாகம் செயற்படுவதை உணரக் கூடியதாக இருக்கின்றது என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும், வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தைத் தவிர வேறு எங்கும் தொழில் நிமித்தமோ, வேறு வியாபார காரணங்களுக்காகவோ நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழ முடியாதா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.
இம் மக்கள் மீள்குடியேற வந்தால் இங்குள்ள நிர்வாகம் உங்களுக்கு வாக்குரிமை இருக்கின்றதா என கேட்கின்றனர். வாக்குரிமையைப் பதியச் சென்றால் உங்களது கிராம உத்தியோகத்தரிடம் சென்று உங்களது இருப்பிடத்தை உறுதிப்படுத்தி வாருங்கள் என்கின்றனர். இவ்வாறு இரண்டு பக்கமும் இருந்து பந்தாடுகின்றனர். இறுதியில் அப்பாவியான இம்மக்கள் செய்வதறியாதும், தொடர்ந்து இவ்வாறு செலழித்துக் கொண்டிருக்க முடியாத காரணத்தினாலும் மீள்குடியேறாமல் புத்தளத்து அகதி முகாமில் எவ்விதப் பதிவும் இன்றி வாழ்கின்றனர்.
இது 1990 ஆம் ஆண்டு இம்முஸ்லிம்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்காக விடுதலைப் புலிகள் வெளியேற்றியதைவிடவும் மிகப் பயங்கரமான முறையில் இந்நிருவாகம் இவர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட சதியாகவே இவர்கள் நோக்குகின்றனர்.
தொழில் ரீதியான பாகுபாடு
வெளியேற்றப்பட்ட இம் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் மற்றும் மீன்பிடித் தொழிலாளிகளே காணப்படுகின்றனர். இதில் விவசாயத்தின்போது பெரும்போகம் சிறுபோகம் என காணப்படுகின்ற சிறுபோக விவசாயத்தின்போது விவசாயத்திற்கான நீர் உரிய முறையில் வழங்குவதில்லை என விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறே முஸ்லிம் மீனவர்களும் பல்வேறு அசௌகரிகங்களுக்கு உட்படுகின்றனர். பொதுவாக இந்திய மீனவர்களின் கெடுபிடிகளுக்கு உள்ளாவது ஒரு வகை. அதற்கு அப்பால் மீள்குடியேறுகின்ற பிரதேசங்களில் மீனவர்களின் படகுகளை தரைகளில் பாதுகாப்பாக வைப்பதற்கான இடப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ளது.
இவ்வாறு பல்வேறு சிக்கல்களுக்கும், அசௌகரிகங்களுக்கும் மத்தியில் வாழ்வின் இலக்கு தெரியாமல் வடமாகாண முஸ்லிம்களில் பெரும்பாலான முஸ்லிம்கள் நாடோடிகளாக வாழ்கிறார்கள்.
32 ஆவது வருடமாகவும் இவர்கள் அழுவதே விதியென்றால்…
வாழ்க சமத்தும்
வளர்க எம் தேசம்.