இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 54 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சேத்தன் சகாரியா 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், 172 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
அணி சார்பில் அதிகபடியாக ராகுல் தெவாடியா 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷிவம் மாவி 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.