பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் உதிர்ந்தும் உயிர்வாழும் அறிவு ஜீவி!

Date:

நேற்று மறைந்த இலங்கையின் தலைசிறந்த கல்வியலாளரும் சிந்தனையாளருமான பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் குறித்து ஜாமிஆ நளீமியாவின் விரிவுரையாளர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் எழுதியுள்ள கட்டுரையை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் அவர்களது மரணம் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல இலங்கை வாழ் முழு கல்விச் சமூகத்துக்கும் பேரிழப்பாகும். இருப்பினும் அல்லாஹ்வின் நாட்டம் அப்படி அமைந்தால் எமக்கு அது பற்றி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாது.

அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன்.

அல்லாஹ் அவருக்கு உயர்தரமான சுவர்க்கத்தையும் அபரிமிதமான நற்கூலிகளையும் வழங்குவானாக!

1980 களில் நளீமிய்யாவில் நாம் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் விசேட விரிவுரைகளை நிகழ்த்துவதற்காக அவர் ஜாமிஆ நளீமிய்யாவுக்கு வருகை தந்த நாட்களில் அவரை முதன்முதலில் அறிந்துகொண்டோம்.

 

உள்ளத்தைத் தொடும் உளவியல் ரீதியான வாழ்க்கைத் தத்துவங்களை தனக்கே உரிய பாணியில் ஜாமிஆவின் மாநாட்டு மண்டபத்தில் அவர் நிகழ்த்திய உரைகள் வாயிலாக முன்வைத்தார்.

 

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கணிசமான அளவு காலம் சேவை செய்த அவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இரண்டு தடவைகள் கடமை புரிந்தார். அவர் சேவை செய்த அக்காலப் பிரிவில் பல கலாநிதிகள் பிற்பட்ட காலத்தில் உருவாகுவதற்கான அடித்தளத்தை இட்டது மாத்திரமல்ல அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக துறைகள் உருவாவதற்கும் காரணகர்த்தாவாகவும் இருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து மலேசியா சென்ற அவர் அங்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த நிலையில் பல கலாநிதிப் பட்ட ஆய்வுகளுக்கான மேற்பார்வையாளராக கடமை புரிந்தார். இலங்கையில் முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார்.

 

தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்த அவர் என்னோடு அடிக்கடி தொலைபேசி வாயிலாக உரையாடுவார். ஜாமிஆ நளீமிய்யாவை சர்வதேச தரமிக்க மிகப்பெரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மிளிரச்செய்ய வேண்டும் என்பது சம்மந்தமாக அவர் பல கற்பனைகளை தன்னுள் வளர்த்துக் கொண்டு அவற்றை என்னுடன் அழுத்தமாக வெளியிட்டு வந்தார்.

 

கலாநிதி சுக்ரியின் மறைவைத் தொடர்ந்தும் ஜாமிஆ நளீமிய்யாவுக்கெதிரான சில விமர்சனங்கள் சில சக்திகளால் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்தும் அவரை நாம் அணுகி நளீமிய்யா பற்றியும் கலாநிதி சுக்ரீ பற்றியும் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றுக்கு வருமாறு அழைத்த போது எவ்வித மறுப்பும் இன்றி அதற்கு முன்வந்தார். UTV தொலைக்காட்சியில் அவரது கலந்துரையாடல் மிகத்தரமாகவும் பயன்மிக்கதாகவும் அமைந்தது.

 

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் சனிக்கிழமை சிந்தனைக் களம் உரையாடல் நிகழ்ச்சியில் அவர் பிரதம வளவாளராக என்னோடு கலந்துகொண்டு பல பயன்மிக்க தலைப்புக்களில் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் அவரது சமுகப் பிரக்ஞையையும் தூரநோக்கையும் பரந்த வாசிப்பையும் கள அனுபவங்களையும் பிரதிபலித்தன. அந்த நினைவுகள் எனக்குள் பசுமையாக நிழலாடுகின்றன.

 

இலங்கை முஸ்லிம்களது கல்வி நிலையை ஆராய்ச்சி செய்து சிபாரிசுகளைச் செய்யும் நோக்கில் தனது முதுமை நிலையையும் பார்க்காமல் பல முஸ்லிம் கிராமங்களுக்கு நேரடியாக சென்று அவர் பேட்டிகளை கண்டு ஆய்வுகளைச் செய்திருக்கிறார். இது பற்றி என்னுடன் தனிப்பட்ட முறையில் சில அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

 

இலங்கையில் மிகப் பெரும் சுயாதீன அமைப்பான Public Service commission எனப்படும் பொதுச் சேவைகள் ஆணையத்தின் உறுப்பினராக இருந்த அவர், NIE எனப்படும் தேசிய கல்வி நிறுவனத்தின் Academic affairs board ன் உறுப்பினராகவும் கடமையாற்றினார். மேலும், இந்த நாட்டின் ஒரு கல்விமானுக்குக் கிடைக்கும் உயர் பதவியான National Education Commission எனப்படும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். காரணம் இந்த நாட்டின் கல்விக் கொள்கையை தீர்மானிக்கும் அதிகாரமிக்க உயர் சபை அதுவாகும்.

 

அந்த வகையில் முஸ்லிம் அல்லாத கல்விமான்கள், உயர் அரச அதிகாரிகளது மட்டத்திலும் சபைகளிலும் அவருக்கு தனியான மரியாதையும் இடமும் இருந்தது. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக தைரியமாக குரல் எழுப்பிய அவர் எம் சமூகத்தின் பலவீனங்களையும் சுட்டிக்காட்ட பின்நிற்கவில்லை.

 

அவரது சேவைகளையும் அறிவுப் பணிகளையும் அல்லாஹ் அங்கிகரித்து அல்லாஹ் அவரைப் பொருத்திக் கொள்வானாக!

 

எனது அழைப்பின் பேரில் அவர் கலந்துகொண்ட இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இடம்பெற்ற சில நிகழ்ச்சிகள்:-

 

1. பாடசாலைகளில் இடைவிலகல், ஒழுக்கப் பின்னடைவு-காரணங்களும் தீர்வுகளும் (Dropouts in Schools and Decline of Morals – Reasons & Solutions)

 

18.11.2017 சனிக் கிழமை காலை 9.00 – 9.50

 

2. கிதாபு மத்ரஸாக்களது கலைத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில சீர்திருத்தங்கள் பற்றிய சில ஆலோசனைகள் (Reformations in the Madrasa Curriculum-Some suggestions)

24.2.2018 சனிக் கிழமை காலை 9.00 – 9.50

 

3. ஜாமிஆ நளீமிய்யா தொடர்பாக UTV ல் இடம்பெற்ற பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் அவர்களுடனான கலந்துரையாடல்.

 

https://www.facebook.com/Theprime.lk/videos/878612482621663/

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...