போதும் போதும் என்றாகிவிட்டது முஸ்லிம்களை இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள்

Date:

இது கொழுந்துவிட்டு எரியும் தேசிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நேரம்: மக்கள் துன்பங்களுக்கு தீர்வு காண வேண்டிய நேரம்: முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டங்களையும் குவாஸி நீதிமன்றங்களையும் சீர்திருத்துவதல்ல இன்றைய தேவை

 

1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரப்பாட்டுக்கும், இன நல்லுறவுக்கும் சமாதானத்துக்கும் மின்னும் உதாரணமாகத் திகழ்ந்த ஒரு நாடு என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இன்று அது ஒரு ஊழல் மிக்க தேசமாகவும் தவறாக முகாமைத்துவம் செய்யப்படும் ஒரு தேசமாகவும் பொருளாதார சரிவை விரைவில் எதிர்நோக்கி உள்ள தேசமாகவும் மாறிவிட்டது.

நமது நாடு இன்று உணவு நெருக்கடி உற்பட பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. மில்லியன் கணக்கான மக்களை இது பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளி உள்ளது. இந்தத் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிவகைகளை ஆராய்வது தான் இன்றைய காலத்தின் தேவையாகும். அதை விட்டுவிட்டு இவ்வாறான ஒரு காலகட்டத்தில் ஏற்கனவே பல தொந்தரவுகளைச் சந்தித்துள்ள முஸ்லிம் சமூகத்தின்; விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் அவற்றோடு தொடர்புடைய குவாஸி நீதிமன்றங்கள் என்பனவற்றை அவசரஅவசரமாக மாற்றம் செய்வதற்கு எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் ஏன் என்பது தான் பெரும் புதிராக உள்ளது.

இந்த நாட்டில் 1200 வருடங்களுக்கும் மேலாக அமைதியாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்த ஒரு சமூகம் தான் முஸ்லிம் சமூகம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்ற இனவாதத்தை ஒரு ஆயுதமாக பாவிக்கும் நிலை ஏற்பட்ட வரைக்கும் முஸ்லிம்கள், அமைதியாகவும் இணக்கப்பாட்டோடும் தான் வாழ்ந்து வந்தனர். இந்த நாட்டில் வாழும் மூவின சமூகங்கள் மத்தியில் முஸ்லிம் சமூகம் தான் மிகவும் அமைதியானது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக போர்த்துக்கேயர், டச்சு, மற்றும் பிரிட்டிஷ் காலணித்துவ காலத்தின் போதும் அதற்கு பிந்திய காலப்பகுதியிலும் சமாதானம், இந்த நாட்டின் அமைதி, சுபிட்சம் மற்றும் பாதுகாப்பிலும் கூட அவர்களின் ஒட்டு மொத்த பங்களிப்புக்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் உள்ளன.

விடுதலைப் புலிகளுடனான 30 வருட கால யுத்தத்தின் போது பாதுகாப்பிற்கு முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பு பற்றி முன்னாள் பிரதம பாதுகாப்புத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன ஒரு வைபவத்தில் பேசும் போது “ எமது துணிச்சல் மிக்க முஸ்லிம் படை அதிகாரிகளால் தான் இன்று நாம் உயிருடன் இருக்கின்றோம்” என்றார். தெல்தெனியா, கண்டி, அம்பாறை ஆகிய இடங்களில் ரணில் மைத்திரி ஆட்சி காலத்தில் சிங்களக் காடையர்களால் வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்ட போது இடம்பெற்ற அமைச்சரவை பாதுகாப்புக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “முஸ்லிம்களை நாங்கள் இவ்வாறு இம்சிக்கக் கூடாது” என்று அவர் குறிப்பிட்டார்.

தமது முஸ்லிம் இராணுவ அதிகாரிகளுக்கு இந்த நாட்டின் இராணுவம் பாரிய அளவில் கடமைப்பட்டுள்ளது. இராணுவத்துக்கு தேவையான புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுவதில் அவர்கள் தான் முன்னணியில் இருந்து செயற்பட்டவர்கள். வடக்கிலும் கிழக்கிலும் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் விரட்டி அடித்தார்கள். அதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் தங்களுக்கு ஆதரவாக செயற்படவில்லை என்பதுதான். நியாயமின்றி முஸ்லிம்களை துன்புறுத்தும் சிங்களவர்கள் தான் உண்மையில் தேசத் துரோகிகள். முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் எல்லோருக்கும் உள்ளது. (த ஐலண்ட் பத்திரிகை 2008 மார்ச் 11)

2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம்கள் மீது ஆங்காங்கே வன்முறைகளும் தாக்குதல்களும் இடம்பெறத் தொடங்கின. இவை எல்லாமே பதவியில் இருந்த அரசாங்கத்தின் ஆதரவில் தான் இடம்பெற்றன என்பது பின்னர் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று வரை இந்தச் சம்பவங்களோடு தொடர்புடைய எவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. இதுவே அதற்கு போதுமான சான்றாகும்.

இந்த நாட்டில் இஸ்ரேலுக்கும், இந்தியாவின் ஆளும் தரப்பான பிஜேபி இன் முன்னணி அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்குமான கதவுகள் திறந்து விடப்பட்ட பின்பே இந்த வன்முறைகள் தலைதூக்கியமை நன்கு அவதானிக்கத் தக்கதாகும். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறை எனபனவற்றால் வடிவமைக்கப்பட்டவர்கள் என்பது எல்லோரும் நன்கு அறிந்த ஒன்றே. அத்தோடு பூகோள மயமாக்கப்பட்ட இஸ்லாமோபோபியாவும் இணைந்து கொண்டமை  நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை மேலும் மோசமாக்கியது.

நெருக்குதல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களால் விரக்தி அடைந்திருந்த முஸ்லிம்கள், மகிந்த ராஜபக்ஷவுக்கு துரோகம் இழைத்து ரணில்  விக்கிரமசிங்கவோடு இணைந்து கொண்ட மைத்திரிபால சிறிசேனவை நம்பி 2005 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தனர். இருவரும் இணைந்து நல்லாட்சிக்கான வாக்குறுதியை அளித்தனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் இழைத்து அவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழத்து விட்டனர். பின் நன்றாகத் திட்டமிடப்பட்ட ஒரு சதியாக இது அரங்கேறியது.

2019 ஏப்பிரல் 21ல் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதலில் முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்பது ரணிலுக்கும் மைத்திரிக்கும் நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் முஸ்லிம்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்ட போது இருவரும் மௌனம் காத்தனர். ஒவ்வொரு முஸ்லிம் வீட்டையும் பள்ளிவாசல்களையும் சோதனை இடுமாறு இராணுவத்தை ஏவிவிட்டனர். சப்பாத்துக் கால்களுடனும் நாய்களுடனும் இராணுவம் பள்ளிவாசல்களுக்குள் பிரவேசித்தது. அந்த வகையில் முஸ்லிம்கள் பெரும் அவமானத்துக்கு உற்படுத்தப்பட்டதோடு நிலை குலையச் செய்யப்பட்டனர். இராணுவச் சோதனைகள் முஸ்லிம் குடும்பங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது. எந்த நியாயமான காரணங்களும் இன்றி நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சட்டத்துக்கு புறம்பான முறையில் தடுத்து வைக்கப்பட்டனர். தடுப்பு நிலையங்களில் மிக மோசமாக முஸ்லிம்கள் நடத்தப்பட்டனர்.

ஊரடங்கு சட்டத்தை அமுல் செய்து விட்டு முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என்பனவற்றை கொழுத்துவதற்கு பொலிஸாரினதும் இராணுவத்தினதும் பாதுகாப்போடு காடையர்களுக்கு சுதந்திரமாக சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. நோன்பு நோற்றுக் கொண்டிருந்த ஒரு அப்பாவி முஸ்லிம் அநியாயமாக வெட்டியும் குத்தியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல்களில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டு ஓரிரு தினங்களிலேயே விடுவிக்கப்பட்டனர். அதேவேளை திகன கலவரத்தை தூண்டி அதை அரங்கேற்றிய நபர் வீதிகளில் மாலை போட்டு வரவேற்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

மூன்று வாரங்களாக முஸ்லிம் வீடுகளும் கடைகளும் தொடர்ந்து தேடுதலுக்கு உற்படுத்தப்பட்டன. அங்குள்ள சமையலறை கத்திகள் கூட அவசரகால சட்ட விதிகளின் கீழ் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு முஸ்லிம்கள் முழுமையாக நிராயுதபாணிகள் ஆக்கப்பட்ட பின் அவர்கள் மீது காடையர்கள் ஏவிவிடப்பட்டனர். இவற்றின் நடுவே எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் மைத்திரி முஸ்லிம்களின் முகம் மூடும் ஆடைக்கும் தடை கொண்டு வந்தார். நோன்பு நோற்கும் புனித றமழான் மாத காலத்தில் முஸ்லிம்கள் நிம்மதி இழந்து வீடுகளில் கூட இருக்க முடியாமல் தாக்குதலுக்கு அஞ்சி புதர்க் காடுகளுக்குள்ளும் வயல் வெளிகளிலும்; தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டது. கொட்டாரமுல்லையைச் சேர்ந்த தச்சுத் தொழில் செய்யும் பௌஸ{ல் அமீன் என்ற நபர் நோன்பு துறப்பதற்காக வீட்டுக்கு வந்தபோது தனது 16 வயது மகன் முன்னிலையில் கழுத்து வெட்டப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.

சில முஸ்லிம் பெண்கள் தமது பிள்ளைகளோடு அயலில் வசித்த பெரும்பான்மை மக்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு கருதி ஓடியபோது சிலர் அபயம் அளித்து உணவும் வழங்கினர் அனால் பலர் விரட்டி அடிக்கவும் செய்தனர். முஸ்லிம்கள் சார்பில் நீதி கேட்டு ஆஜராக சிங்கள சட்டத்தரணிகள் மறுத்தனர். முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பகிஷ்கரிக்கப்பட்டன. ஒரு பிரதேச சபை தலைவர் தனது அதிகார எல்லைக்கு உற்பட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என தடையும் விதித்தனர். முஸ்லிம்களுடனான வர்த்தகங்களை பகிஷ்கரிக்குமாறு சில பௌத்த விகாரைகளில் கூட போதனைகள் இடம்பெற்றன.

நிராயுதபாணிகளான உதவிக் கரம் நீட்ட எவரும் அற்ற முஸ்லிம் சமூகத்தை கைவிட்டு விட்டு மைத்திரி சீனாவுக்குப் புறப்பட்டார். அந்த இடைவெளியில் ஆயுதம் ஏந்திய கொலைகாரக் கும்பல் தர்மதீப என அழைக்கப்பட்ட இந்த நாட்டை முஸ்லிம்களின் கொலைகளம் ஆக்கினர். முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறைகள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் ஒழுங்கமைக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு முஸ்லிம் தர்ம ஸ்தாபனம் புற்றுநோய் வைத்தியசாலையின் நோயாளிகளுக்கும் அங்கு வருகை தருபவர்களுக்குமாக தினசரி சுமார் மூவாயிரம் பேருக்கு இலவசமாக வழங்கி வந்த மூவேளை உணவை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு மோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதான ஊடகங்கள் பெரும்பாலும் முன்னரே தயாரிக்கப்பட்ட விதத்தில் இஸ்லாத்தை இழிவு படுத்தும் பிரசாரங்களையும் ஒவ்வொரு முஸ்லிமும் பயங்கரவாதி என்ற ரீதியில் காட்டி முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையிலும் தீவிர பிரசாரங்களை முழு அளவில் முன்னெடுத்தன.

இந்த அச்சமூட்டும் அரசியல் சூழலை ராஜபக்ஷ சகோதரர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பனவற்றில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். அதன் படி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் பதவியேற்றனர்.

உயிர்த்தஞாயிறு சம்பங்கள் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு மைத்திரியும் ரணிலும் இன்னும் சில உயர் அதிகாரிகளும் முஸ்லிம்களின் இரத்தம் தோய்ந்த கரங்களுடன் இருப்பதாகக் கூறி அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தது. ஆனால் மைத்திரிக்கு ஆளும் கட்சியின் தவிசாளர் பதவி வழங்கியும் ரணில் மீது ஏற்கனவே இருந்த பாரிய குற்றச்சாட்டான மத்திய வங்கி பிணை முறி ஊழல் குற்றத்தை மூடி மறைத்தும், மறந்தும் இருவருக்கும் இந்த அரசு வெகுமதியதை; தான் வழங்கி உள்ளது. இவர்கள் இருவரும் இன்னமும் அரசியலில் இருப்பதும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பதும் தான் இந்த நாட்டின் கேவலமானதும் வெற்கக் கேடானதுமான அரசியல் நிலையாகும்.

ராஜபக்ஷ சகோதரர்களின் புதிய தனிச் சிங்கள அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான பல மோசமான நடவடிக்கைகளில் இறங்கியது. கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக தகனம் செய்தமை, உலகப் புகழ் பெற்ற சமய ஒப்பீட்டு ஆய்வாளரும் பேததகருமான டொக்டர் சாகிர் நாயக்கின் பீஸ் டிவி போன்ற முஸ்லிம் தொலைக்காட்சி ஒளிபரப்புக்களைத் தடை செய்தமை என்பனவும் அதில் அடங்கும்.

இந்த வரிசையில் தற்போது முஸ்லிம் தனியார் விவாக மற்றும் விவாகரத்து சட்டம், குவாஸி நீதிமன்றம் என்பன பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கார் இது பற்றிக் கூறுகையில் ‘இது முழுக்க முழுக்க முஸ்லிம்களின் சமயத்தோடு தொடர்பு பட்ட விடயம். அதன் விளைவுகப் புரிந்து கொள்ளாமல் அரசு நெருப்பேடு விளையாடுகின்றது. இந்த விவகாரங்களில் அவசரம் தேவையில்லை. சமூகத்தின் இன்றைய நிர்க்கதி நிலையைப் பாவித்து அவர்கள் மீது எவ்வித திணிப்புக்களையும் செய்யத் தேவை இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் சமூக மட்டத்தில் ஆராயப்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டு சகலரதும் நலன் கருதி செய்யப்பட வேண்டிய ஒரு விடயம். இன்றைய காலத்தின் அடிப்படையில் அவசரமாக செய்ய வேண்டிய விடயம் மக்களை பட்டினியில் இருந்து பாதுகாப்பதும் அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதில் எதிர்நோக்கியுள்ள கடினமான நிலைக்கு முற்றுப் புள்ளி வைப்பதுமாகும். இதன் தொடராக சமூகங்கள் ஒன்று படுத்தப்பட்டு ஒற்றுமையுடன் கூட்டாக முன்னோக்கி செல்ல வேண்டியதே காலத்தின் தேவையாகும். அரசியல் கட்சிகள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் மக்கள் துரிதமாக நம்பிக்கையை இழந்து வருகின்றனர். இந்த சிங்கள பௌத்த அரசைக் கொண்டு வருவதில் முன்னணியில் நின்று பங்காற்றிய பௌத்த தேரர்கள் கூட சகல சமூகங்களும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக முன்னேறிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தக் குறிக்கோளின் முதல் படியாக சமூகங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும். தமது சுய நலன்களுக்காக சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கூலிப்படை ஊடகங்களுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும்.

(முற்றும்)

லத்தீப் பாருக்

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...