ஆராய்ச்சியாளர் ,பன்னூலாசிரியர் புள்ளிவிபரவியலாளர் ஆவணக் காப்பாளர் என்ற பன்முக அடையாளங்களோடு, இடையறாது இயங்கி வந்த எம்.ஐ.எம்.முஹியத்தீன் அவர்கள் கொழும்பில் உயிரிழந்துள்ளார். மரணிக்கும் போது அவருடைய வயது 85 ஆகும்.
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி (MULF) என்ற அரசியல் கட்சியை நிறுவி, அதன் செயலாளர் நாயகமாக இருந்து சளைக்காமல் செயற்பட்டார் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார். கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியின் ஸ்தாபகரும்,முஸ்லிம் செய்தி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
சமூக செயற்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தன் சொந்த நிதியைச் செலவிட்டு பல பெறுமதியான நூல்களையும் ஆவணங்களையும் அச்சிட்டு வெளியிட்டவர் ஆகும். பதியுதீன் மஹ்மூத் தலைமையில், புலிகளோடு சென்னையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்.தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நாட்களில், பழைய அரிசி ஆலைக் கட்டிடத்தைப் புனர் நிர்மாணம் செய்தவர். சுனாமி இழப்புகள் தொடர்பாக தகவல்கள் திரட்டி, ஆய்வு செய்து அதைப் பதிவு செய்தவர். யுத்தகால இழப்புகளை ஆவணப்படுத்தியவர். நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணக் கோரிக்கையின் பிதாமகன் ஆவார்.
அக்கரைப்பற்று 2 ஆம் குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மருதானை நொறிஸ் கனல் வீதியில் மிக நீண்டகாலமாக வசித்து வந்தார். தன் வீட்டையே ஒரு ஆவணக் காப்பகமாக ஒழுங்கமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சிராஜ் மஸுர்