அப்ரா அன்ஸார்.
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிக மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.“சூப்பர் 12” சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் அரையிறுதிக்கு 4 அணிகள் தகுதி பெற்றுள்ளது.
பொதுவாக இந்தியா அணி எனும் போது அனைத்து கிரிக்கெட் இரசிகர்களினதும் கருத்து அவர்களை அசைக்க முடியாது என்று தான்.ஆனால் இத் தொடர் அதற்கு தலைகீழான விம்பத்தையே காட்டியுள்ளது.“சூப்பர் 12” இல் குழு 2 இல் இடம்பிடித்த இந்திய அணி தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானை சந்தித்து 10 விக்கெட்டுகளால் படு தோல்வியடைந்திருந்தது.இரண்டாவது போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது.இவ் இரு தோல்விகளும் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
ஆப்கானுடனான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றிருந்தது.எனினும் இப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக பல கருத்துக்கள் வெளிவந்தது.சமூக வலைத்தளங்களில் மூத்த கிரிக்கெட் ஜாம்பவான்களும், கிரிக்கெட் இரசிகர்களும் இது குறித்த தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வந்ததை கடந்த ஒரு சில நாட்களில் அவதானிக்க முடிந்தது.
இந்தியா தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்திருந்தாலும் கூட இன்னும் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது என இந்திய இரசிகர்கள் உட்பட இந்திய தரப்புக்கள் கூறி வந்தனர் அதாவது நியூசிலாந்து ஆப்கானிடம் தோல்வியடைவதன் மூலம் இந்திய அணிக்கான அரையிறுதி நுழைவாயில் திறக்கப்படும்.எனினும் ஆப்கான் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கனவாகியது.இப் போட்டியில் ஆப்கானின் வெற்றியை ஆப்கான் இரசிகர்களை விட இந்திய இரசிகர்களே எதிர்பார்த்து இருந்தனர்.
இந்திய கடைசி ஆட்டத்தில் நமீபியாவை எதிர் கொண்டு ஆறுதல் வெற்றியை பெற்றுக் கொண்டது.இப் போட்டியில் அரைச்சதம் கடந்த ரோஹித் சர்மா இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார்.ஐந்து லீக் ஆட்டத்தில் இறுதி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது.
இந்திய அணியின் தோல்விக்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய அணியின் இருபதுக்கு இருபது அணித் தலைவர் விராத் கோலி தலைமை பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.விராட்டின் இடத்தை யார் பூரணப்படுத்துவார் என்ற கேள்வியை கிரிக்கெட் இரசிகர்கள் எழுப்பி வருகின்றனர் இந் நிலையில் கடந்த நமீபியாவுக்கு எதிரான போட்டியின் நாணய சுழற்சியின் போது கருத்து தெரிவித்த விராட் கோலி தனது ஓய்வு குறித்தும் அடுத்த தலைவர் யார் என்பதையும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அவர் கருத்து தெரிவிக்கும் போது,
இந்திய அணியின் தலைவராக செயல்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி . எனினும் அணியை முன்னேற்ற வேண்டிய சந்தர்ப்பம் இது .இதற்கு ரோஹித் பொருத்தமானவர்.சிறந்த நபரிடம் தான் அணி உள்ளதாகவும் தனக்கு அந்த நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.இதனையடுத்து இந்திய கிரிக்கெட் சபை இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.