அப்ரா அன்ஸார்.
இஸ்லாம் அதன் அரசியல் வரலாற்றின் மிக இருள் சூழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தலை சிறந்த சிந்தனையாளார்களையும், தத்துவ ஞானிகளையும் ஈன்றெடுத்துள்ளது என்பதை இஸ்லாமிய வரலாறு எமக்குணர்த்தி நிற்கின்றது.அந்தவகையில் பாகிஸ்தானின் தோற்றத்திற்கு வித்திட்டவரும், உலகப் புகழ் பெற்ற மகா கவியுமான அல்லாம இக்பால் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அவருடைய 144 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இவ் விசேட கட்டுரையினை Newsnow வாசகர்களுக்கு வழங்குகின்றது.
மகா கவி அல்லாமா இக்பாலின் வாழ்க்கை வரலாறு.
அல்லாமா இக்பால் அவர்கள் பாகிஸ்தானின் சியால்கோட்டில் 1877 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பிறந்தார்.ஷேக் நூர் முகம்மது இமாம் பீபி தம்பதியரின் புதல்வனாவார்.பாரசீகம் மற்றும் அரபு மொழியில் பாடிய மகத்தான கவிஞரும்,சிந்தனையாளரும், அரசியல்வாதியும் ஆவார்.உருது , அரபு மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெரும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.பாகிஸ்தான் என்ற தேசத்தின் உதயத்திற்கு முதன்மையாக திகழ்ந்தவராவார்.விலை மதிக்க முடியாத படைப்புகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய இவர் பள்ளிப் பருவத்திலேயே எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராக விளங்கியவராவார்.மெளலானா அபுல் அஃலா மெளதூதியின் சந்திப்பு அல்லாமா இக்பாலின் சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.அவருடைய கவிதைப் பயணம் ஆன்மீக வெளிச்சம் மிகுந்த பாதையில் அமைந்தது.மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் அவர்கள் இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்த போதும் கூட தனது எழுத்துப் பணியினைத் தொடர்ந்தார்.லாகூர் அரச கல்லூரியிலும்,மூனிச் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.
இங்கிலாந்திலும் , ஜேர்மனியிலும் தனது படிப்பை முடித்துக் கொண்ட இக்பால் சட்டத்துறையில் தொழிலை ஆரம்பித்தார்.ஆனாலும் அரசியல் , பொருளாதாரம் , வரலாறு ,மெய்யியல் மற்றும் சமயம் ஆகிய துறைகளிலேயே அவர் நிறைய எழுதியுள்ளார்.இவருடைய இலக்கியத் திறன் இவரை உலகப் புகழ் பெற வைத்தது.மிர்ஸா குர்கானி, ஹகீம் ஆமீன் உத்தீன், ஹக்கீம் சுஜா உத்தீன், அப்துல் காதர் போன்ற படைப்பாளிகளுடனான தொடர்பு இவரின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.திருக்குர்ஆன் முழுவதையும் படித்து ஆராய்ந்து அதையே தன் வாழ்வாகக் கொண்டிருந்தார்.பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் கூட இவரது கவிதைகளைப் பொதுக் கூட்டங்களிலும் , இலக்கிய அரங்குகளிலும் ,கவியரங்குகளிலும் , சாதாரண உரையாடல்களிலும் அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர்.நவீன கால இஸ்லாமிய சிந்தனையாளர் எனப் போற்றப்படும் இவரது முதல் கவிதை நூல் 1915 இல் வெளிவந்தது.கவிதைகள் தவிர சமூகம் , கலாசாரம், மதம், அரசியல் தொடர்பாக இவர் உருது , ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளும், கடிதங்களும் பிரபலமானவை.இவரது உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது.1922 இல் ‘சர்’ பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.இங்கிலாந்தில் சட்டம் , தத்துவம் படிக்கும் போது அகில இந்திய முஸ்லிம் லீக் லண்டன் கிளையில் உறுப்பினராக இருந்தார்.இவர் உருது பேசும் மக்களினால் ” கிழக்கின் கவிஞர்” என அழைக்கப்பட்டார்.பாகிஸ்தான் அரசு இவரை தேசிய கவிஞராக அங்கீகரித்தது.பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை உட்பட நாடுகளில் உள்ள அறிஞர்களாலும் இன்றுவரை கொண்டாடப்படுகிறார்.பாகிஸ்தானில் இவரது பிறந்த தினம் ” இக்பால் டே” என வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறதோடு அன்றைய தினம் பொது விடுமுறையாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.இக்பால் அவர்களால் எழுதப்பட்ட ” சாரே ஜாகன் சே அச்சா ” இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா ” என்று தொடங்கும் பாடல் 1947 ஓகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ஒலித்தது.மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.
பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவை கண்டு கண்ணீர் வடித்த அல்லாமா இக்பால் இந்தியாவின் விடுதலைக்காகவும் ,உலகில் இந்தியா சுதந்திர நாடாக தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்று எண்ணினார்.பஞ்சாப்பில் ஷாஹித் கஞ்ச மஸ்ஜித் பிரச்சினை விடயத்தில் முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளும் அதை அடக்குவதற்கு இராணுவம் வந்ததும் இக்பாலை மிகவும் மனச் சங்கடத்தில் ஆழ்த்தின.சுகவீனமுற்று எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்திருந்த இக்பால் அவர்கள் ” என்னைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய் கலவரங்கள் நடக்கும் இடத்தில் வையுங்கள் .முதல் துப்பாக்கிக் குண்டு எந் நெஞ்சில் பாய்ந்து நான் சாகிறேன் அப்போதாவது ஒற்றுமை உண்டாகும் என்று உணர்ச்சியோடு கூறினார்.
முற்போக்கானதாக பலராலும் நோக்கப்படும் மேற்கின் அறிவையும், கிழக்கின் அன்பையும் இணைத்து புது உலகம் செய்ய வேண்டும் என்ற கருத்துப்பட அவரினால் எழுதப்பட்ட கவிதை வரிகள் , இன்னொரு புறத்தில் முஸ்லிம் உலகம் மிகவும் பலவீனமானதொரு நிலையிலேயே மேற்கின் அறிவுக் கவர்ச்சியின் பின்னால் செல்ல எத்தனிக்கிறது என்ற அவரது எச்சரிக்கை மற்றொரு புத்தியிர்ப்புவாத சாயல்களைத் தழுவியதாக அவருடைய கருத்துக்கள் அமைந்துள்ளது.இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அல்லாமா இக்பாலின் பெயர் சூட்டப்பட்டுள்ள கிராமங்கள் ஏராளமுள்ளன.மேலும் அவருடைய கவிதைகளை மொழிபெயர்த்த கவிஞர்களும் இங்கு இருக்கின்றனர்.
இலங்கைக்கு சர்வதேச நாடுகளில் உதவிகள் கிடைத்தாலும் , பாகிஸ்தானின் உதவியும், ஆதரவும் நிலையானது என்று சொன்னால் மிகையாகாது.பாகிஸ்தான் அரசு கடந்த ஜூன் மாதம் அல்லாம இக்பால் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவம் உட்பட ஏனைய துறைகளுக்கான மாணவர்களை தெரிவு செய்து புலமைப் பரிசில் வழங்குவதோடு பாகிஸ்தானின் முன்னோடி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கான வாய்ப்பையும் வழங்கி வருகின்றது.
மகா கவி அல்லாமா இக்பாலின் நற்பண்புகள்.
சிறு வயதிலேயே இக்பால் அவர்கள் சிறந்த ஒழுக்க நெறிகளைப் பின் பற்றினார். இஸ்லாமிய வழி முறைகளை நன்கு மதித்தார். மிகவும் எளிய வாழ்க்கையையே நடத்தினார், தொழுகையில் மிகவும் பேணுதலாயிருந்தார். பிற்காலத்தில் தஹஜ்ஜத் தொழுகையையும் தவறாது நிறைவேற்றி வந்தார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அளவில்லா அன்பும் பற்றும் வைத்திருந்தார். அவரின் ஒவ்வொரு கருத்திலும் குர் ஆனின் குரல் ஒளிக்கும். “உன் அறிவை நூல்களின் தாயால் குர்ஆன் நிரப்பு” எனத் திருகுர் ஆனைப் பற்றி உயர்வாகக் கூறியுள்ளார். மனநிறைவோடு கண்களிலே நீர் மல்கத் தினமும் திருக்குர்ஆனை ஓதுவது அவருடைய பழக்கமாகும். எதை கூறியும் பெருமை அடையமாட்டார். தம்மை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வார்.இவர் ஆடம்பரத்தையும்,விளம்பரத்தையும் வெறுத்தார். அகங்காரம் கொண்டவர்கள் எவராயிருந்தாலும் சரி, ஏளனமாய் வெறுத்து ஒதுக்கினார்.
இக்பால் ஓர் ஒப்பற்ற கவிஞர்; சியால்கோட் தந்த சிந்தனைச் சிற்பி, மேலை நாடே போற்றிய மேதையாகும்.அறிவு முதிர்ந்த தத்துவ ஞானி. இருந்தாலும் இவரிடம் தலைக்கணம் சொற்பளவும் இருக் கவில்லை. அடிக்கடி தம்மை ஒரு ‘பக்கீர்’ என்றே மிகவும் தாழ்வாகக் கூறிக் கொள்வார்.மாம்பழத்தை மிகவும் விரும்பினார் சிலவேளைகளில் நண்பர்களுக்கும் மாம்பழங்களை கொடுத்து மகிழ்ச்சியடைவார்.வசதி,வாய்ப்பிருந்தும் இக்பால் சாதாரண வாழ்க்கையில் தான் இன்பம் கண்டார். ஆடை அணிகலன்களில் மட்டுமல்லாது, உணவில் கூட அவர் சாதாரண முறையையே விரும்பினார்.
“தந்தை மிக, மிக எளிய வாழ்க்கையே வாழ்ந்தார். ஒரு சட்டை, ஒரு வேஷ்டி, தலையை மூடிக் கொள்ள ஒரு துவாலை தொழும்போது இது தான் அவரின் உடை” என மகாகவி இக்பாலின் அன்பு மகன் ஐவீது இக்பாலே கூறுகிறார்.
மகா கவி அல்லாமா இக்பாலின் கவிதைகள் சில,
“எழுங்கள், கிழக்கின் அடிவானில் இருள் கப்பிக்கொண்டுள்ளது. நம் நெருப்பெழும் குரலால் (தூங்கும்) அவையில் விளக்கேற்றுவோம்.”
(அல்லாமா இக்பால்)
“அறிவு என் தலையில் சிலைகள் கொண்ட ஒரு கோயிலைக் கட்டியெழுப்பியது – ஆனால் இப்றாஹீமை ஒத்த அன்பு அச் சிலைகளின் வீட்டை ஒரு கஃபாவாக மாற்றியது”
(அல்லாமா இக்பால்)
“செயலாற்றுவோர் முன்னேறுகின்றனர் ஒரு கணமாவது ஓய்பவர்கள் சதா சுழன்றுகொண்டே இருக்கும் காலச் சக்கரத்தில் சிக்கி நசுக்குண்டு விடுகின்றனர்”
(அல்லாமா இக்பால்)
“தனிமனிதன் ஒரு சமூகத்தின் அங்கமாகவே இருக்கின்றான் தனித்த நிலையில் அவன் ஒன்றுமே இல்லை அலைகள் சமுத்திரத்தில்தான் அலை மோதுகின்றன சமுத்திரத்திற்கு வெளியில் அது வெறுமையே”
(அல்லாமா இக்பால்)
“உண்மை விசுவாசியின் அடையாளத்தை நான் சொல்கிறேன் மரணம் வரும் காலையில் அவன் வதனம் மலர்ச்சியுற்றிருக்கும்”
(அல்லாமா இக்பால்)
மகா கவி அல்லாமா இக்பாலின் இறுதிக் காலம்.
அல்லாஹ் தமக்கு அருளிய அபார அறிவாற்றல், பேச்சாற்றல், தத்துவ விளக்க வல்லமை ,கவிதைப் பொழிவு ஆகிய சகல திறமைகளின் துணைகொண்டு உலகமெங்கும் பிரபல்யம் அடைந்தார்
இக்பால் தமது இறுதிக் காலத்தை ‘ஜாவீது மன்ஸில்’ என்ற தமது வீட்டிலேயே கழித்தார். திடகாத்திரமான உடம்பும், வயது செல்லச் செல்ல நோய்வாய்ப்பட்டார் . பலவித வைத் தியங்கள் செய்தும் பலன் போதியளவு கிட்டவில்லை.1938 ஏப்ரல் 21 அன்று தமது 65 வயதில் காலமானார்.
உலகில் எத்தனையோ எழுத்தாளர்கள் தோன்றி மறைகின்றார்கள்.ஆயினும் ஒரு சிலருடைய எழுத்துக்கள் மாத்திரம் மறையாத பொக்கிஷங்களாகப் போற்றப்படுகின்றன.அத்தகையவர்களுள் ஒருவராக மறைந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் மகா கவி அல்லாமா இக்பால்.