பொது ஜன பெரமுன அரசின் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தனது முதலாவது வரவு-செலவுத் திட்டத்தை எதிர்வரும் 12ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.
இதுசுதந்திர இலங்கையின் 76 ஆவது வரவு-செலவுத்திட்டமாகும்.
இக் கட்டுரையில் நிதி அமைச்சர் சமர்ப்பிக்கப் போகும் வரவு-செலவுத் திட்டத்தையன்றி அதன்பின் 26 நாட்களாக நடக்கப்போகும் வரவு-செலவுத்திட்ட விவாதம் பற்றியே ஆராய முற்படுகிறோம்.
நிதி அமைச்சர் 2022 ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு-செலவுகளை இந்த வரவு-செலவுத் திட்டத்தினூடாகச் சமர்ப்பிக்கவுள்ளார்.வரவு-செலவுத்திட்ட விவாதம் 13ஆம் திகதியே ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்ற நிலையியற் கட்டளை 75 (1) இன் படி டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன் இரண்டாம் வாசிப்பு விவாதத்துக்காக 26 நாட்கள் ஒதுக்கப்படவேண்டும். இத் தினங்களில் பாராளுமன்ற அமர்வு தினமும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 6.30 மணி வரையும் சபை அமர்வு இடம்பெற வேண்டும். வருடத்தில் பாராளுமன்ற அமர்வு தொடராக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கூடுவது வரவு-செலவுத் திட்டத்தை பரிசீலிப்பதற்காகும். ஒதுக்கீடுச் சட்டமூலம் விவாதம் நடைபெறும் போது பாராளுமன்றத்தில் வேறு எந்த அலுவலும் எடுக்கப்படக் கூடாது.
ஏழு நாட்கள் விவாதத்தின் பின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடாத்தப்படும். வாக்கெடுப்பில் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டால் வரவு-செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பார். இதற்கு மறுதினம் குழுநிலை விவாதம் நடைபெறும். இதற்காக 22 நாட்களுக்கு மேற்படாது நாட்கள் எடுக்கப்படும்.
குழுநிலை விவாதத்தில் ஒவ்வொரு அமைச்சினதும் நிதி ஒதுக்கீடுகள் பற்றி ஆராயப்படும். குழுநிலை விவாதத்தின் நிகழ்ச்சி நிரலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமே தயாரிக்கின்றது. அதனை எதிர்க்கட்சியின் விவாதம் என்றே அழைக்கப்படும். ஒவ்வொரு அமைச்சுக்கும் புறம்பாக நேரம் ஒதுக்கப்பட்டு, விவாதம் இடம்பெறும். பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற அமைச்சுக்களுக்கு கூடுதலான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவு-செலவு திட்டத்தின் முதலாம் வாசிப்பு ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இடம்பெற்றது. எதிர்வரும் 12ஆம் திகதி நிதி அமைச்சர் தனது வரவு-செலவுத் திட்ட உரையைச் சமர்ப்பிப்பது இரண்டாம் வாசிப்பு விவாதமாகும். இந்த விவாதம் தொடர்ந்து ஏழு நாட்கள் இடம்பெறும். ஏழு நாள் விவாதத்தின் பின் வாக்கெடுப்புக்கு விடப்படும். விவாதத்தை எதிர்க்கட்சிப் பிரதிநிதி ஒருவரே ஆரம்பித்து வைப்பார்.
பொருளாதார விவகாரம் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற ஒருவரே இந்த விவாதத்தை ஆரம்பித்து வைப்பார். விவாதம் நடைபெறும் ஏழு நாட்களும் நிதி அமைச்சர் சபையிலிருந்து செவிமடுப்பார். எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விடயங்களுக்கு தெளிவுகளை வழங்குவார். இந்த ஏழு நாட்களும் பாராளுமன்றத்தில் செய்தி திரட்டுவோருக்கு முக்கியமானதாக இருக்கும். 13ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் வாக்கெடுப்பு 22ஆம் திகதி நடைபெறும்.
23ஆம் திகதி குழுநிலை விவாதம் ஆரம்பமாகி, டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறும். 10ஆம் திகதி மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும். ஜனாதிபதி ஆட்சி முறையை நடைபெறும் இலங்கையில் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது. பாராளுமன்றம் நிதியை அங்கீகரிக்காவிடின் அரசுக்கு இயங்க முடியாத நிலை ஏற்படும்.
பட்ஜெட் விவாதம் முழு நாட்டினதும் அவதானம் செலுத்தப்படும் ஒரு விவாதமாகும். நாட்டின் பொருளாதார நிலை பற்றியும், அமைச்சுக்களின் செயற்பாடு பற்றியும் விவாதிப்பதற்கு கிடைக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த விவாதம் அமைந்துள்ளது. விவாதம் நடைபெறும் தினங்களில் சபையின் கோரம் விஷேடமாகக் கவனிக்கப்படும். நிலையியற் கட்டளை பதினொன்றின்படி சபையின் கூட்ட நடப்பெண் இருபதாகும். அரசியலமைப்பின் 73ஆம் உறுப்புரைப்படி பாராளுமன்றக் கூட்ட நடப்பெண் தலைமை வகிப்பவர் உட்பட 20 உறுப்பினர்களாகும். எந்நேரத்திலாவது கூட்ட நடப்பெண் இல்லை என உறுப்பினர் ஒருவரால் சபாநாயகர் அல்லது தலைமை வகிப்பவரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால், அவர் வாக்கழைப்பு மணி அடிக்க கட்டளையிடுவார். 5 நிமிடங்களின் முடிவில் கூட்ட நடப்பெண் காணப்படாத பட்சத்தில் இவர் வினாவின்றிப் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தல் வேண்டும்.
பாராளுமன்ற அமர்வு தினமும் தொடராகக் கூடுவதனால் சில நாட்களில் உறுப்பினர்கள் முழுமையாக சபையில் இல்லாத சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே, பாராளுமன்ற பிரதம கொரடாவுக்கு அங்கத்தவர்களை சபைக்குள் வைத்துக்கொள்ளும் பாரிய பொறுப்பு உள்ளது. எதிர்க்கட்சித் தரப்பினர் சில சமயங்களில் கோரமில்லை எனச் சுட்டிக் காட்டினால் விவாதத்தை தொடர முடியாத நிலை ஏற்படலாம். பாராளுமன்ற உறுப்பினர்களது பிரசன்னம் கட்டாயமாகையால் அரசாங்கத் தரப்பினருக்கு இக்காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விவாதம் நடைபெறும் போது சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் சபைக்கு மாறி மாறி தலைமை வகிப்பர். இவர்கள் சமூகமளிக்காத போது தவிசாளர் குழாத்திலுள்ள ஒருவர் சபைக்குத் தலைமை வாங்குவார். ஒவ்வொரு கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் 4 பேருக்குக் குறையாத அங்கத்தவர்களது பெயர்களை சபாநாயகர் தவிசாளர் குழாமுக்குப் பிரேரிப்பார். அவர்களில் ஒருவரை சபைக்குத் தலைமை வகிக்குமாறு அழைக்கப்பட வேண்டும். இவ்வாறு தலைமை வகிக்கும் ஒருவர் பிரதி சபாநாயகர் ஆற்றக்கூடிய எதனையும் ஆற்றலாம். நிலையியற் கட்டளையின் 140 இல் விவரிக்கப்பட்டுள்ளது.
225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் சகல எம்.பி.க்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு முறையேனும் பேசும் சந்தர்ப்பம் பட்ஜெட் விவாதத்திலேயே கிடைக்கின்றது.
நிதி அமைச்சர் தனது வரவு-செலவுத் திட்ட உரையை இரண்டு அம்சங்களாகச் சமர்ப்பிப்பார். முதலில் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விளக்குகின்ற நீண்ட உரையை நிகழ்த்துவார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு வரவு-செலவுத் திட்டத்தோடு தொடர்பான பிரேரணைகளை நிதி அமைச்சர் சமர்ப்பிப்பார். பொதுவாக வர்த்தக சந்தை மூடப்பட்ட பின்பே இந்த அறிவிப்புகள் செய்யப்படும். ஏனெனில், அதனால் ஏதும் தாக்கங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக சம்பிரதாயபூர்வமாக மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு தான் இந்த அறிவிப்புகள் மேற்கொள்ளப்படும். வரவு-செலவு திட்டம்
பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப் படாவிடின் முதலில் அமைச்சரவை பதவி இழக்கும். அதன் பிறகு மீண்டும் ஓர் அமைச்சரவை நியமித்து அரசாங்கத்தை அமைக்கலாம். இரண்டாம் முறையும் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும்.
அதேநேரம், வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கும் வேளையில், இடைவேளையின் போது நிதி அமைச்சர் தேநீர் விருந்துபசாரம் ஒன்றை பாராளுமன்றத்தில் வழங்குவார். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தோடு பட்ஜெட் சமர்ப்பிப்பதனை கண்டறிவதற்கு வந்துள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், ஏனைய பிரமுகர்கள் இந்த தேநீர் விருந்துபசாரத்துக்கு அழைக்கப்படுவார்கள். ஊடகவியலாளர்கள் உட்பட அழைக்கப்படுவார்கள்.
இந்த தேநீர் விருந்துபசாரத்துக்குப் பின்பே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் அடங்கிய உரையை நிதி அமைச்சர் நிகழ்த்துவார். அதிலேயே விலை ஏற்றம், ஏனைய சம்பள அதிகரிப்பு போன்ற முக்கியமான விடயங்கள் அந்த கடைசி அம்சத்திலே இருக்கும்.
இலங்கையில் ஆகக் கூடுதலான வரவு – செலவுத் திட்டங்களை சமர்ப்பித்து சாதனை நிலை நாட்டியவராக ஐக்கிய தேசிய கட்சியின் நிதி அமைச்சராக இருந்த ரொடி டி மெல் திகழ்கிறார். அவர் 11 முறை வரவு-செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்திருக்கிறார். அவருடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் ஆகக் கூடுதலான நேரத்தை அவர் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
என்.எம்.அமீன்