அனைத்துலக மாணவர் நாள் ( International students day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அநுட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர். இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊடாக இந்த மாணவர் அமைப்பு அழுத்தம் கொடுத்தது.
இன்று அனைத்துலக மாணவர் நாள் என்பதால் இன்றைய மாணவர்களின் கல்வி நிலை பற்றி ஆராயவுள்ளோம்.சமூகத்தில் எழுச்சியை ஏற்படுத்தக் கூடிய மாணவப் படையின் கல்வி இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது.இதற்கு பிரதான காரணம் கடந்த இரண்டு வருடங்களாக முழு உலகையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொவிட் வைரஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வருடங்களாக முழு உலகமுமே இந்த கொவிட் வைரசுடன் போராடி வருகின்றது.பல கோடி மக்களின் உயிர்களை காவு கொண்டுள்ளது.இதனை உலகிலிருந்து விரட்டியடிக்க பல்வேறு மருத்துவ ஆய்வுகள், கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று இறுதிக் கட்டத்தில் தடுப்பூசியே தீர்வு என்ற கட்டத்தை அடைந்துள்ளது.இக் கொடிய கொவிட் வைரசினால் நாட்டின் பொருளாதாரம், வணிகம், போக்குவரத்து, கல்வி , விளையாட்டு முதலான துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.இந் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இத் தாக்கத்திலிருந்து பொதுமக்களின் பெறுமதியான உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் சுகாதார வழிகாட்டலின் கீழ் இடம்பெற்று வருகின்றன.
கடந்த இரண்டு வருடங்களாக முடக்கப்பட்டிருந்த நாடு அனைத்து துறையிலும் முன்னேற்றத்தை இழந்துள்ளது.இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி பெரிதளவும் பாதிக்கப்பட்டுள்ளது.நாட்டில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்போது கட்டம் கட்டமாக திறக்கப்பட்டுள்ளது.பிரதான பரீட்சைகளான க.பொ.தர சாதாரண, உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான அட்டவணைகள் வெளியிட்டுள்ளது.இந் நிலையில் மாணவர்களை மீண்டும் கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இருக்கின்றது.பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் இன்னும் முழுமையாக மாணவர்கள் சமூகமளிப்பதை காணமுடியாதுள்ளது.கொவிட் விடுமுறையில் மாணவர்கள் தொலைக்காட்சி, விளையாட்டுடன் வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர்.மாணவர்கள் கல்வியை விருப்பத்தோடு கற்பதற்கான சூழல் அரிதாகவே காணப்படுகிறது.பெற்றோர்களும் பாடசாலைகள் நடைபெறாததால் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்பதற்காக தூண்டுவதுமில்லை என்றே கூற முடிகின்றது.இந்த நிலை இவ்வாறே தொடர்ந்தால் ஏற்கனவே கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் கல்வி மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது.சமூக வளர்ச்சிக்காக உழைக்கின்றவர்களை விட இன்று சமூக வீழ்ச்சிக்காக உழைக்கின்றவர்கள் ஏராளம்; அவர்களின் கையில் இந்த மாணவப் படை கிடைக்கும் போது தவறான முறையில் வழிநடத்தப்பட்டு சமூகத்தில் பாரிய சீர்கேட்டுக்கு காரணமாக அமைத்து விடுவார்கள்.இதனை கடந்த காலங்களில் எமது நாட்டில் இடம்பெற்ற பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றது.
சிறுவர்கள் வீடுகளுக்குள்ளயே அடைபட்டு இருப்பதால் சில மனநோய் நிலைமைகளுக்குள்ளாகும் சூழ்நிலை அதிகரித்துள்ளதாக ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீடுகளுக்குள் சிறுவர்களுக்கு உகந்த சூழலை அமைத்துக் கொடுப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பல்வேறு மனநோய்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க அவர்களை பாடசாலைக்கு அனுப்புவது கட்டாயமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்வதை விட்டு அதனை நிருபிக்க கூடியவர்களாக ஒவ்வொரு மாணவர்களும் உருவாக வேண்டும் அதற்காக அனைத்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் முழு மூச்சாய் உழைக்க வேண்டும்.மாணவர்களின் கல்விப் பாதையை புனர்நிர்மாணம் செய்வோம் சிறந்த மாணவர் படையை கட்டியெழுப்புவோம்.
அப்ரா அன்ஸார்