கிழக்கு ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
மடகாஸ்கர் வட கிழக்கு கடற்கரை அருகே, சுமார் 138 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் கவிழ்ந்திருக்கலாம் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை செயின்ட்- மேரி தீவுகளுக்கு அருகில் இருந்த பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் உயிரிழப்புகள் 64 ஆக உயர்ந்துள்ளதாகவும் காணாமல் போன 24 பயணிகளைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், 50 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.