இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று (18) இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெத்தாட தீர்மானித்தது.இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சிம்பாப்வே அணி சார்பில் அதிகபடியாக கிரேக் எர்வின் 10 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 98 பந்துகளுக்கு முகங்கொடுத்து 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.அத்துடன், சிக்கந்தர் ராசா 56 ஓட்டங்களையும், சீன் வில்லியம்ஸ் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் ஜெப்ரி வான்டர்சே 51 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.அதேபோல், நுவன் பிரதீப் 02 விக்கெட்டுக்களையும் மகீஷ் தீக்ஷன மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந் நிலையில், 303 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் தசுன் சானக்க 7 நான்கு ஓட்டங்கள், 4ஆறு ஓட்டங்கள் அடங்களாக 94 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற முதல் சதமாகும்.அத்துடன், கமிந்து மென்டிஸ் 57 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் சிம்பாப்வே அணியின் பிளசிங் முசரபானி 03 விக்கெட்டுக்களையும், டென்டை சடாரா 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.