கடந்த திங்கட்கிழமை (03) கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தி மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதம சமயலறையில் ஏற்பட்ட வாயுக் கசிவே வெடிப்பிற்குக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டங்கன் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டரின் குமிழ் சரியாக மூடப்படவில்லை என்று கூறிய அவர், அதனால் எரிவாயு கசிவு ஏற்பட்டதாகவும், சமையல்காரர் அடுப்பை அணைத்ததால் திடீரென தீப்பற்றியதாகவும் கூறினார்.
திடீரென பரவிய தீயினால் சமையல்காரரின் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் வெடிப்பு ஏற்படவில்லை என்றும் OIC டங்கன் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
தீக்காயங்களுக்கு உள்ளான சமையல்காரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் வெளியேறினார் என்று அவர் மேலும் கூறினார்.ஹோட்டலின் சமையலறையில் காற்றோட்டத்திற்கான ஜன்னல்களோ அல்லது காற்று சுழற்சியோ இல்லை என்பது விசாரணைகளின் போது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.