அமரர் விஜய குமாரதுங்கவின் 34 ஆவது நினைவு தினம்!

Date:

மறைந்த விஜய குமாரதுங்கவின் 34 ஆவது நினைவு நாள் நேற்றைய தினமாகும்.இதனையொட்டி இந்த கட்டுரை பிரசுரமாகின்றது.

இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரை நினைவு கூரும் முகமாக அவரது மனைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கட்டுநாயக்க 18வது மைல் தூணுக்கு அருகில் உள்ள விஜய குமாரதுங்க நினைவு தூபிக்கு முன்பாக இந்த வைபவம் நடைபெற்றதுடன் கட்டான விஜய குமாரதுங்க நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பௌத்த வழிபாடுகளின் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஏனைய உறவினர்கள் விஜய குமாரதுங்க நினைவிடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர்களான ஜீவன் குமாரதுங்க மற்றும் பீலிக்ஸ் பெரேரா, முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்களான சஞ்சய விஜய பண்டார, பத்மசிறி கொடிகார மற்றும் விஜய குமாரதுங்கவின் நெருங்கிய சகா எம்.எஸ்.எம். கபீர் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

விஜய குமாரதுங்க 1988 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். (ஒக்டோபர் 9, 1945 – பெப்ரவரி 16, 1988) இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமாக திகழ்ந்தார்.

சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலும் ஈடுபட்டார் விஜய குமாரதுங்க ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து செயலாற்றினார்.

அதன் பின்னர் 1974 இல் இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். 1982 ஆம் ஆண்டில் அரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்காகப் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேக்கடுவவை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தலின் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசு குமாரதுங்கவை நக்சலைட் எனக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது.

அதுமட்டுமில்லாது, சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக 1984 இல் இலங்கை மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.

இலங்கை மக்கள் கட்சி, சமூக ஜனநாயகவாத மார்க்கத்தில் பயணித்ததுடன் இலங்கையில் இனப் பிரச்சினை பல வழிகளிலும் ஏற்பட்ட காலத்தில் இன, குல, மத பேதங்களை புறந்தள்ளி நாட்டின் சகல இன மக்களையும் ஒரேயொரு அரசியல் சக்திக்குள் கொண்டு செலுத்த அரும்பாடுபட்டார் விஜய குமாரதுங்க.

விஜய குமாரதுங்க 1985/86 காலப் பகுதிகளிலேயே இலங்கை இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே ஒரேயொரு இறுதித் தீர்வென அச்சமின்றி சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் விஜய குமாரதுங்க 1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் சென்னை சுற்றுப் பயணம் மேற்கொண்டு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் அரசியல் இணைப்பை ஏற்படுத்த முன்வந்து செயற்பட்டார்.

யாழ்ப்பாணம் சென்ற விஜய குமாரதுங்க உட்பட்ட குழுவினரை அங்குள்ள சாதாரண மக்கள் வரவேற்ற முறையிலிருந்தே அவர் மீது, வட பகுதி மக்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை வெளிப்பட்டது.

இதேநேரம் சென்னைக்கும் சென்ற விஜய குமாரதுங்கவை சந்திக்கவென அப்போது, தமிழ் நாட்டில் தங்கியிருந்த வடக்கின் சகல போராட்டத் தலைவர்களும் வந்திருந்தனர்.

யாழ்ப்பாணம் சென்ற விஜய குமாரதுங்கவிற்கு அப்போது விடுதலைப் புலிகளின் பொறுப்பிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றையும் விடுதலை செய்ய முடிந்தது.

இதேவேளை, 1988 இல் பெப்ரவரி 16ஆம் திகதி அவரது பொல்ஹேன்கொடவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே மோட்டர்சைக்கிளில் வந்த இருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...