உக்ரை- ரஷ்யா போரில் உக்ரைன் நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவோம் என்று நேட்டோ படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ரஷியா போரை நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன.
ஆனால் தற்போது உக்ரைனை ஆக்ரோஷமாக தாக்கி வரும் ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோவும் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது, ‘தங்களுக்கு எந்த நாடும் உதவவில்லை. தாக்குதலை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன’ என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்
இந்தநிலையில் இது குறித்து நேட்டோ படையின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோன் பெர்க் குறிப்பிடுகையில்,
உக்ரைன் அரசை கவிழ்க்க ரஷ்யா முயற்சித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
நிலம், வான்வெளி, கடல் மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகளை நேட்டோ பிராந்தியத்தில் நிலை நிறுத்தி வருகிறோம். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அதிக அளவில் வழங்க முடிவு செய்திருக்கிறோம்’ என்றார்.
இதற்கிடையே பிரான்ஸ் நாடு தனது 500 படை வீரர்களை ருமேனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. நேட்டோ படைக்கு வலு சேர்ப்பதற்காக 500 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.