ஐக்கிய மக்கள் சக்தி சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்தது ஏன்?-அப்ரா அன்ஸார்!

Date:

அப்ரா அன்ஸார்

இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கீழ் கரைக்கு அப்பால் இந்திய பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவே நம் நாடாகும். 1972க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயரின் 133 வருட கால ஆட்சிக்குப் பின்னர் 1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்தது. கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி 74ஆவது சுதந்திர தினத்தை இலங்கை தேசம் கொண்டாடியது. எனினும் பொதுமக்கள் மத்தியில் நாம் உண்மையில் சுதந்திரம் பெற்றுள்ளோமா என்ற கேள்வி இருக்கின்றது. இதற்கு விடை சொல்ல இந்த அரசு தயாரில்லை என்பது கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் மக்கள் படும் துன்பத்தை வைத்து ஊகிக்க முடிகின்றது.

சுதந்திரத்தை கொண்டாட நாம் தகுதியானவர்களா?

ஏகாதிபத்திய நாடுகள் அல்லது காலனித்துவ நாடுகளின் கையிலிருந்து சுதந்திரம் பெற்ற நாள் தான் பெப்ரவரி 4 ,1948 ஆகும். இருந்த போதும் இலங்கை மக்கள் நாட்டில் சுதந்திரமாக வாழ்கிறார்களா என்று பார்த்தால் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எங்களுடைய உரிமைகளை எந்த கட்டுப்பாடுகளுமின்றி, எந்த அச்சமுமின்றி அனுமதிப்பதே உண்மையில் சுதந்திரமாகும். யாரும் யாரையும் அடக்குமுறை செய்யக்கூடாது ,அடக்குமுறை அச்சுறுத்தலுக்கு பயந்து வாழ்வது என்பது சுதந்திரமாகாது. இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்பினால் அதற்கு பதில் ஆம் என்று வர முடியாது.குடியியல் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்றால் அதுவும் கிடையாது. கடந்த இரண்டு வருடங்களாக நாட்டை ஆள்கின்ற கொவிட்டுக்கு பின்னர் பொருளாதார சுதந்திரத்தை மக்கள் இழந்துள்ளனர். பாரிய வறுமை நிலையை இலங்கை சந்தித்துள்ளது. இந் நிலை எதிர்வரும் வருடங்களில் கூடுமே தவிர குறையாது .அடிப்படை தேவைகளை கூட எங்களால் சரியாக பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். உண்மையிலேயே நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது இல்லை. சுதந்திர கலாச்சாரத்தை இன்று இலங்கை இழந்துள்ளது.இந் நாட்டு மக்கள் சுதந்திரத்தை இன்றும் அனுபவிக்கவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

74 ஆவது சுதந்திர தினத்தை எதிர்கட்சி புறக்கணித்தது ஏன்?

இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. தேசிய சுதந்திர தின நிகழ்வை நாட்டின் பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்திருந்தது. நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த சுதந்திர தினம் தேவைதானா என்கின்றவாறு அப் புறக்கணிப்பு அமைந்திருந்தது. அத்தோடு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் இந்த சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்திருந்தார்.எமது தாய்நாடு 74 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத் தருணத்தில் அனுபவித்த அனைத்து சுதந்திரங்களும் இல்லாமல் செய்த நாட்டையே இந்த அரசு உருவாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுதந்திர தினத்தில் விடுத்திருந்த ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

நாட்டில் தாங்க முடியாத அளவு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ளன. அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடி காரணமாக எரிபொருள், மருந்து பொருட்கள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத இக் கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது.மின் துண்டிக்கப்படாது என அரசாங்கம் குறிப்பிட்டாலும் நாளாந்தம் மின்தடை ஏற்படுகிறது. பஸ் மற்றும் புகையிரதம் உட்பட போக்குவரத்து துறையின் கட்டணங்கள் அனைத்தும் மக்களினால் சுமக்க முடியாதுள்ளது. தற்போது நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகள் விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் எடுக்கும் ஆற்றலும் அரசின் கட்டுப்பாடுகளிலிருந்து கைநழுவிப் போயுள்ளது. பொது மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் பொறுப்பேற்காத நிலைமைக்கு நாடு இன்று தள்ளப்பட்டுள்ளது.

நெருக்கடி மிக்க இச் சந்தர்ப்பத்தில் கோடிக்கணக்கில் செலவிட்டு சுதந்திர தினம் ஒன்று கொண்டாடுவதற்கு தேவைதானா என்ற கேள்வியை ஐக்கிய மக்கள் சக்தி எழுப்பியிருந்தது.இது நியாயமான கேள்வியாகவே அனைவராலும் நோக்கப்படுகின்றது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது வானவேடிக்கைகளுக்காக பறக்கும் விமானங்களுக்கு எந்தளவு எரிபொருள் விரயமாகும்.சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகளுக்கான செலவினங்களை மதிப்பிட்டு பார்த்தால் நாட்டினால் சுமக்க முடியுமா? டொலர் இல்லாத காரணத்தினால் எரிபொருள் கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கிக் கொண்டுள்ளன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் மக்கள் அனுபவிக்காத சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு பில்லியன் கணக்கில் செலவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகவே உள்ளது. குறைந்த செலவில் சாதாரண உற்சவம் நடத்தி இதற்கான செலவுகளை மக்களின் நலன் கருதிய நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் செலவிட்டு இருக்க வேண்டும்.பணத்தை அச்சிட்டு அரசாங்கம் நிதி திரட்டுகின்றது. இதன் காரணமாக நாட்டின் பணவீக்கம் 14 வீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதாரத்திற்குள் உள்வாங்குவது அரசாங்கத்தின் புதிய முயற்சியாகவுள்ளது.கறுப்பு பணத்தை உபயோகித்தே யுத்தத்திற்கு தேவையான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அண்மையில் நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனூடாக நாட்டின் அடையாளத்திற்கும், கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறான கருத்துக்கள் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி இலங்கையின் எதிர்காலத்தை அபாய நிலைக்கு தள்ளியுள்ளது எனலாம்.

அபாய நிலையில் உள்ள நாம்! 

இந்த நாட்டில் வாழும் சிங்கள ,தமிழ்,முஸ்லிம் என அனைவரினதும் பிரச்சினைகளுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நம் உடலில் ஒரு காயம் ஏற்பட்டால் அது முழு உடலையும் பாதிக்கும் அதே போல தான் இந்த நாட்டில் ஒரு இனம் தாக்கப்பட்டால் குணப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும். 1960களில் மூன்றாம் உலக நாடாக இருந்த சிங்கப்பூர் இப்போது முதல்தர உலக நாடாக மாறியுள்ளது.எமது முன்னேற்றங்களின் கூலி வேலையாளர்களின் பூமி என்று அழைத்த சிங்கப்பூர் இன்று தனிநபர் வருமானத்தில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.அறுபதுகளில் லீ குவான் யூ சிங்கப்பூர் ஒரு நாள் இலங்கையால் மாற வேண்டும் என்று கூறியிருந்தார். இன்று இலங்கை மக்கள் சிங்கப்பூரிற்கு வேலை தேடி செல்கிறார்கள்,சிங்கப்பூரின் அழகை பார்த்து பிரம்மிக்கின்றார்கள். இதுவே விதியின் விளையாட்டு என்பார்கள். சிங்கப்பூர் லீகுவானினால் கைப்பற்றப்பட்ட போது சீன ,மலாய் சமூகத்தவர்கள் தமக்கிடையே பிரச்சினை சூழ்நிலையை கொண்டிருந்தனர். அப்போது அவர் ஒரே நாடு ஒரே மக்கள் இன் கீழ் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தினார். அவரது கருப்பொருளை எமது நாட்டு அரசுக்கும் ஈடுபட முடியும் எனினும் எல்லாம் தலைகீழாக உள்ளது. நாட்டில் மக்களிடையே பிளவுகளை உருவாக்கி அதன் அடிப்படையில் வாழத்துடிக்கும் அரசியல் தோற்கடிக்கப்படவேண்டும் இல்லையெனில் எதிர்கால சந்ததியினருக்கு வழங்கப் போவது இருண்ட எதிர்காலத்தை தான் என்று கூறுவதில் ஐயமில்லை.

இன்று மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க பாதையில் இறங்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. நாட்டின் எப் பாகத்திலும் ஒவ்வொரு துறையினரும் தங்களின் உரிமைகளை கேட்டு தொழிற்சங்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.உரிமைகளை வெற்றி கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டங்களை எதிர்க்கவில்லை எனினும் பொதுமக்கள் சங்கடப்படும் வகையில் தொழிற்சங்க போராட்டங்கள் அமையக்கூடாது என நீதி அமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

நாட்டில் சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், நீர் போன்ற அத்தியாவசிய சேவையாளர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டங்களினால் நாட்டில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் எவ்வித முன்னறிவிப்புமின்றி புகையிரதத்தை இடையில் நிறுத்திவிட்டு புகையிரத ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பான்மையானவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.இது நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை முன்னெடுப்பவர்களை கட்டுப்படுத்த நினைக்கும் இந்த அரசு அவர்களுக்கான தீர்வை முறையாகப் பெற்றுக் கொடுப்பதில் தவறிவிட்டார்கள். அண்மையில் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆர்ப்பாட்டம், போராட்டங்களை மேற்கொள்ளும்போது சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபறுவது போல் பொதுமக்களுக்கு முன்னறிவித்தல் வழங்கிய பின்னர் முறையாய் போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என யோசனை வழங்கியுள்ளார். இதைப் பார்க்கும் போது வேடிக்கையிலும் வேடிக்கையாகவுள்ளது.

அரசியல் என்றால் சாக்கடை என்று பொதுவாகச் சொல்வார்கள் அதனை உண்மைப்படுத்தும் விதமாகவே இந்த அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. இந்த அரசின் செயற்பாடுகளை தொடர்ந்து ஆதரிக்கும் மக்கள் இன்னும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.இலங்கை மக்களின் உண்மை சுதந்திரம் எப்போது கிடைக்கும் , எப்போது விடிவு காலம் பிறக்கும்.இப்போதைக்கு அது கானல் நீராகத் தான் இருக்கின்றது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...