ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரை கடந்த சில தினங்களில் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த செயலணியின் கடந்தகால மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் இதன்போது நீதித்துறையில் நீதி நிர்வாகத்தை விரைவுபடுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள எண்மானமயமாக்கல் வேலைத்திட்டம், புதிய நீதிக்கட்டமைப்பு, நீதி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் தொடர்பான தகவல்களை நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி செயலணியிடம் கையளித்தார் என்றும் ஜனாதிபதி பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கம் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச மாநாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டு, ஒருநாடாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு ஏதேனும் காரணிகள் தோன்றுமாயின் அவற்றை முறியடிப்பதன் முக்கியத்துவம்பற்றி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செயலணிக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், செயலணிக்கு கிடைத்த பொதுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து அமைச்சர் சரத் வீரசேகரவிடம் விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை ஒற்றையாட்சி நாடு என்பதாலேயே “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற தேவை ஏற்படுவதாக தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நாட்டில் ஒரே சட்டம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலணியை நியமித்தார்.
கலகொடஅத்தே ஞானசார தேரர், இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கருத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கருத்துக்களையும் ஆராய்ந்து பிரேரணைகளுடன் கூடிய கருத்துருவை சமர்பிக்கவுள்ளார்.
ஜனாதிபதி செயலணியானது தற்போது இலங்கையின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய பொது ஆலோசனைகளை நடாத்தி கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது