கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை கண்டித்து குவைத்திலுள்ள இந்திய தூதரகம் முன் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அரபிகள், உட்பட ஆண், பெண் எனப்பலரும் பங்கேற்றதுடன் குவைத் பாராளுமன்றமும் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக ‘இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவு’ இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.
சுமார் 120 பேர் கலந்துகொண்டதுடன் இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் துன்புறுத்தப்படுவதை நிராகரிப்பதையும் மறுப்பதையும் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் ஹிஜாப் அணிந்த மாணவர்களுக்கு எதிராக என்ன நடக்கிறது? என்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் சிலர் கர்நாடகாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம் பெண்களுக்கு எதிரான இத்தகைய நடைமுறைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் மௌனமாக இருப்பதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை’இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நடப்பது தெளிவான அநீதி, ஒருவருடைய மத நம்பிக்கையை விட்டுவிடுமாறு பிறரை வற்புறுத்துவது ஒரு நபரின் உரிமை அல்ல’ என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ‘மத பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, இந்திய அரசாங்கம் முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள அதன் நாட்டினரை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் அவர்கள் மிகப்பெரிய சமூகங்களில் ஒன்றாகும் மற்றும் அவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளில் முழு சுதந்திரம் உள்ளது,என்று குவைத் வழக்கறிஞரும் அரசியல் ஆர்வலருமான இஸ்ரா அல்-மதூக் குறிப்பிட்டுள்ளார்.