பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், அண்மைக்காலமாக திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சந்தேகங்களும்,அச்சங்களும் காரணமாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும்,சகவாழ்வும் ,புரிந்துணர்வும் பல மட்டங்களிலே குறைந்து போயுள்ளதை நாம் அவதானிக்கின்றோம்.இதனால் ஆங்காங்கே பிரச்சினைகளும்,நெருக்கடிகளும் உருவாகுவதை கூட பார்க்க முடிகின்றது.இத்தகைய அச்சத்தையும், சந்தேகத்தையும் இல்லாமல் ஆக்குவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த
வகையில் புத்தளம் நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பக்கா ஜும்மா பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை (19) இடம்பெற்ற திருமண நிகழ்வு அமைந்துள்ளது.
ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமானஅஷ்-ஷெய்க் எம்.எஸ் அப்துல் முஜீப் அவர்களின் இரண்டாவது புதல்வர் முஆஸ் முஜீபின் நிகாஹ் -திருமண ஒப்பந்த நிகழ்வு இந்த வகையில் பாராட்டத்தக்க ஒரு நிகழ்வாகும் .புத்தளம் பகுதியில் சகவாழ்வு விவகாரத்தில் அக்கறை கொண்ட கிறிஸ்தவ, இந்து மதத் தலைவர்கள் இருவர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுடைய உணர்வுபூர்வமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.முதற் தடவையாக முஸ்லிம்களின் திருமண வைபவத்தில் நேரடியாக கலந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தை இந்த நிகழ்வினூடாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது என்பதை மகிழ்ச்சியுடன் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
இன்றைய கால சூழலில் இவ்வாறான முயற்சிகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.ஏனையவர்களும் இதனை முன்மாதிரியாகக் கொண்டு, சமாதானமும் புரிந்துணர்வும் மேலோங்கிய இலங்கையை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
(Newsnow செய்தியாளர்)