சுற்றுலா வலயங்களுக்கு மின்வெட்டுகளிலிருந்து விலக்கு அளிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் (21) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சியடைந்துள்ள வேளையில், மின்வெட்டு காரணமாக சுற்றுலாத்துறை தடைபடக்கூடும் என ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த விடயம் தொடர்பாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாப் பகுதிகளுக்காவது மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது, அமைச்சர்களான கலாநிதி ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
மின்சார அமைச்சர் காமினி லொக்குகே சார்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தித் திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, மின்வெட்டு ஏற்படுமா என்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையுடன் கலந்துரையாடியதன் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு இணங்கியிருந்தார்.
தற்போது நாடளாவிய ரீதியில் 16 சுற்றுலா வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் நிலாவெளி, மதுகங்கை, அறுகம் குடா, திருகோணமலை, கல்குடா, பின்னவல, தெட்டுவ, பெந்தோட்டை, குச்சவெளி, கல்பிட்டி, உனவடுன, நீர்கொழும்பு, பேருவளை, கல்கிசை, யால, மற்றும் எல்ல ஆகிய சுற்றுலாப் பிரதேசங்களாகும்.