அப்ரா அன்ஸார்
நாடுகளுக்கிடையே ஏற்படும் மோதல்கள் ஆயுதங்களைக் கொண்டு நிகழும் போது அது யுத்தமாகும். இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் பல உயிர்களை காவுகொண்ட, பல சொத்துக்களை பறி கொடுத்த இரண்டு மாபெரும் யுத்தங்களை இந்த உலகம் மறந்திருக்க வாய்ப்பில்லை .உலகில் வல்லரசுடைய நாடுகளும் இதற்கு அடித்தளமிட்டு முழு உலகிற்கும் தாக்கங்களை சேர்த்தமையால் இவை உலக மகா யுத்தங்கள் என அழைக்கப்பட்டன.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கேட்பது என்ன?
உக்ரைன்- ரஷ்யாவிற்கிடையிலான போர் பதற்றத்திற்கு நேட்டோ அமைப்பு மையமாக இருக்கின்றது.இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் 1949 ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உட்பட 12 நாடுகளால் நேட்டோ படை உருவாக்கப்பட்டது.ரஷ்யா தலைமையிலான சோவியத் யூனியனை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது.நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாடு இன்னொரு நாடு மீது தாக்குதல் நடத்தினால் கூட்டணியில் இருக்கும் அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக இருக்கும் என்பதே சாராம்சம்.
12 நாடுகளுடன் தொடங்கப்பட்ட நேட்டோ அமைப்பில் தற்போது 30 உறுப்பு நாடுகள் உள்ளன.இதில் ரஷ்யா எல்லையை ஒட்டி முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளும் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.இந்த வரிசையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்திருந்தது. சோவியத் யூனியனில் அங்கம் வகித்த மற்றும் ரஷ்யாவுடன் நீண்ட எல்லையை பகிரும் உக்ரைன் நேட்டோவில் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை.
கலாச்சார பிணைப்புக் கொண்ட உக்ரைன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதிலும் மேற்கத்திய படைகள் ரஷ்ய எல்லையை நெருங்க கூடாது என்பதிலும் ரஷ்யா ஸ்திரமாக இருக்கின்றது.எல்லையில் படைகளை குவித்து இருக்கும் ரஷ்யா உக்ரேன் நேட்டோவில் இணைக்கக் கூடாது எனவும் அங்கிருக்கும் வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றது. மேற்கு ஜேர்மனி , கிழக்கு ஜேர்மனி இணைப்புக்கு ரஷ்யா உடன்பட்டால் நேட்டோ படை எல்லையை கிழக்கு நோக்கி விஸ்தரிக்க மாட்டோம் என 1990 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதியை மேற்கத்திய நாடுகள் மீறுவதாகவும் குற்றம் சாட்டுகின்றது.
ரஷ்யா குறிப்பிடும் ஆண்டுக்கு பின்னர் நேட்டோவில் போலந்து, செக் குடியரசு,ஹங்கேரி, அஸ்டோனியா, லித்துவேனியா உட்பட 14 நாடுகள் உறுப்பு நாடுகளாகியுள்ளன.
ரஷ்யாவின் இந்தக் கூற்றை மறுக்கும் மேற்கத்திய நாடுகள் 1990 உடன்படிக்கை ஜேர்மனிக்கு மட்டுமே பொறுந்தும் எனவும் இறையாண்மை கொண்ட எந்த ஒரு சுதந்திர நாடும் நேட்டோவில் இணையலாம் என்பதாகும்.வெளிப்படையான கொள்கை பின்பற்றப்படுவதாக கூறுகின்றன.
தன்னுடைய நிலைப்பாட்டில் ஸ்திரமாக இருக்கும் ரஷ்யா 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியாவை கைப்பற்றியது.கிழக்கு உக்ரைனிலுள்ள டொனட், லூக்கன்ஸ் மாகாணங்கள் அடங்கிய டான்பாஸ் பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா போரை தொடுக்குமா?
உக்ரைன் ரஷ்யா பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்ற நிலையில் உக்ரைன் நாட்டின் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்துள்ள ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. போர் பயிற்சிக்காகவே எல்லையில் படைகளை குவித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்து வந்தாலும் அதனை அமெரிக்கா ஏற்க மறுத்து வருகிறது. இதற்கு மத்தியில் கிழக்கு உக்ரைனிலுள்ள “டன்ஸ்க்” மாகாணத்தில் தனி நாடு கேட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் போராடி வரும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் இராணுவத்துக்குமிடையே மோதல் வெடித்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியொன்றில் உக்ரைன் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பதாக ரஷ்யாவிற்கு அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா வேண்டுமென்றே பதட்டத்தை ஏற்படுத்தி படையெடுப்பை தொடங்க திட்டமிட்டு ள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் வரும் வாரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்.
க்யூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை முன்மொழிவதாகவும் அதற்கான இடத்தை ரஷ்யா தேர்வு செய்யப்படும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கு உடனடியாக எந்தவித பதிலையும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை அறிவிக்கவில்லை.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்காமல் இருந்தால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேசுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொள்கை அளவில் நேற்று திங்கட்கிழமை (21)ஒப்புக் கொண்டுள்ளார்.வொஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, உக்ரைன் மீது படையெடுக்கும் அளவுக்கு எல்லைக்கு அருகிலேயே ரஷ்யப் படைகள் நிலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் .ரஷ்யா தனது படைகளை உக்ரைனை நோக்கி அனுப்பாமல் இருந்தால், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஜெர்ஜீ லாவ்ரோவ் ஆகியோரின் சந்திப்பு வரும் வியாழனன்று ஐரோப்பாவில் நடைபெறும் என தெரிவித்தார்.உக்ரைன், ரஷ்யா இடையிலான தகராறுகளை தீர்க்க பேச்சு நடத்த அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் ஜென் சாகி மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை (22) உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 3 பேரை ரஷ்யா இராணுவம் சுட்டுக் கொண்டுள்ளதாக ரஷ்யா இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக் காரணமாக அண்மைக்கால முன்னேற்றங்களின் பின்னணிகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.துருக்கியின் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம், உக்ரைனில் வசிக்கும் 14 இலங்கை மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில், உக்ரைனில் உள்ள 14 மாணவர்களில் ஆறு பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம் எஞ்சிய எட்டு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், உக்ரைனில் உள்ள அனைத்து இலங்கை பிரஜைகளும் அவதானத்துடன் செயற்படுமாறும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.தற்போது அனைவரினதும் பார்வையை சர்வதேசம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ள முக்கிய பிரச்சனையாக உக்ரைன்-ரஷ்யா மோதல் உள்ளது.இந்த விவகாரம்
மூன்றாம் உலக மகா யுத்தத்தை ஏற்படுத்துமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.