பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்ட நிலையில், உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷ்ய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 4ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் இராணுவமும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், கீயூவ் நகரில் எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் நச்சுப் புகை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.ரஷ்ய ஏவுகணைகள், உக்ரேன் தலைநகர் கீயூவ் அருகிலுள்ள வாசில்கிவில் உள்ள எண்ணெய்க் கிடங்கு தாக்கப்பட்டுள்ளது.
இதனால் நச்சுப் புகை வெளியேறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தலைநகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள வாசில்கிவில் எண்ணெய் கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அது வெடித்த காரணத்தால் காற்றில் புகை மற்றும் நச்சுப் பொருள்கள் பரவக்கூடும்.
எனவே மக்கள் தங்கள் ஜன்னல்களை இறுக்கமாக மூடிவைத்திருக்க வேண்டும் என்று கியூவ் நகர நிர்வாகத்தை மேற்கோள் காட்டி தி கீவ் இன்டிபெண்டன்ட் பத்திரிகை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
இந்த தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் அதிக அளவிலான புகை காற்றில் பரவுவது தெரிகிறது.