மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகின்ற ஐசிசி 19 வயது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற 5ஆம், 6ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த பாகிஸ்தான் அணி 238 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் 16 அணிகள் இம் முறை பங்குகொண்ட இளையோர் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் 19 வயதின்கீழ் அணி 5ஆவது இடத்தையும், இலங்கை 19 வயதின்கீழ் அணி 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
அண்டிகுவாவில் உள்ள சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடுமாறு, பாகிஸ்தான் அணிக்கு பணித்தார்.
அதன்படி முதலில் பாகிஸ்தான் களமிறங்கியது. அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய முஹம்மத் ஷெஸாத் – ஹஸீபுல்லாஹ் கான் ஜோடி அதிரடியான ஆரம்பத்தை அணிக்கு கொடுத்திருந்தது.
முதல் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டம் பெறப்பட்டது.அதனடிப்படையில் 134 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் முஹம்மத் ஷெஸாத் ரவீன் டி சில்வாவின் பந்துவீச்சில் 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஹஸீபுல்லாஹ் கான் மற்றும் காசிம் அக்ரம் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்து சதமடித்து அசத்தினர்கள்.இதில் ஹஸீபுல்லாஹ் கான் 136 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த அணித்தலைவர் காசிம் அக்ரம் ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பாகிஸ்தான் அணித்தலைவர் காசிம் அக்ரம் 65 பந்துகளில் சதம் பெற்று இளையோர் உலகக் கிண்ண போட்டிகளில் அதிகவேக சதம் எனும் உலக சாதனைக்கு சொந்தக்காரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். அதேபோல ஹஸீபுல்லாஹ் கான், இம் முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் 2ஆவது சதத்தைப் பதிவுசெய்தார்.
இதன் மூலம் பாகிஸ்தான் 19 வயதின் கீழ் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 365 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மதீஷ பத்திரன 2 விக்கெட்டுகளையும், ரவீன் டி சில்வா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். எனினும், இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் 17 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்திலுள்ள இலங்கை அணித்தலைவர் துனித் வெல்லாலகேவினால் இந்தப் போட்டியில் எந்தவொரு விக்கெட்டினையும் கைப்பற்றவில்லை.
போட்டியின் வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 34.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.
இலங்கை 19 வயதின்கீழ் அணியின் துடுப்பாட்டத்தில் 9ஆம் இலக்க வீரராகக் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வினுஜ ரன்புல் அரைச்சதம் அடித்து 58 பந்துகளில் 53 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்ய, அணித்தலைவர் துனித் வெலால்கே தனது பங்கிற்கு 40 ஓட்டங்களை எடுத்து வலுச்சேர்த்தார்.
மறுபுறத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரை சதீஷ ராஜபக்ஷ மாத்திரம் 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தமை தோல்விக்கு காரணமாக அமைந்தவை இங்கு குறிப்பிடத்தக்கது.