‘எமது உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்’-ஸ்ரீ சண்முகா பாடசாலை ஆசிரியை பஹ்மிதா உறுதி!

Date:

நேர்காணல் :அப்ரா அன்ஸார்

தனது பாடசாலையில் பணியைத் தொடர அனுமதிக்கப்படாத ஹிஜாப் அணிந்த முஸ்லிம் ஆசிரியை பாத்திமா ஃபஹ்மிதா ரனீஸ், தனது உரிமைகளை மீட்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என நியூஸ் நொவ் தமிழிடம் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 7 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டைத் தொடர்ந்து நியூஸ் நொவ் தமிழிடம் பேசும் போது ஆசிரியை பஹ்மிதா இவ்வாறு கூறினார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் லிங்கேஸ்வரி நீதிமன்ற உத்தரவு மற்றும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலை மீறி ஹிஜாப் அணிந்து பணியைத் தொடர ஆசிரியை பஹ்மிதாவை மறுத்துவிட்டார்.

ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் பணியில் சேரவிடாமல் அதிபர் தடுத்ததாகவும், ஆசிரியரை பயமுறுத்துவதற்காக வெளியாட்களை வரவழைத்து, பாடசாலை வளாகத்திற்குள் சட்டவிரோதமாக வெளியாட்களை அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாது குறித்த ஆசிரியரின் கழுத்தை நெருக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், முஸ்லிம் ஆசிரியைக்கு எதிராக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை தூண்டிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை கொவிட் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக வீதியில் இறங்கிய மாணவர்கள், வைத்தியசாலைக்குள் நுழைவதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஆசிரியை பஹ்மிதாவின் அடிப்படை உரிமைகளை கேள்விக்குறியாக்கினார்கள் மற்றும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத உரிமைகளை மறுத்தனர்.

ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரி தமிழருக்கானது என்றும், பிற கலாச்சாரங்களுக்கு இடமில்லை என்றும் அதிபர் உரையாற்றிய போது, அவரது இனவெறி மனப்பான்மை, ஆணவம், அக்கிரமத்தை அம்பலப்படுத்தியிருந்தது.

தனது நிலைப்பாட்டிற்கு தனது கணவரும் குடும்பத்தினரும் உறுதுணையாக இருப்பதாகவும், இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் இனவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பதை உலகுக்கு காட்ட விரும்புவதாகவும் ஆசிரியை பஹ்மிதா கூறினார்.

‘நமது சொந்த ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு அடிப்படை உரிமையாகும், அது ஆபாச ஆடை அல்ல’ என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஸ்ரீ சண்முகா பாடசாலையின் அபாயா பிரச்சினை தொடர்பாக 2021 ஆம் ஆண்டு ஆசிரியை பஹ்மிதாவினால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பஹ்மிதா சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ சண்முகா பாடசாலை அபாயா பிரச்சினை தொடர்பாக 2021 ஆம் ஆண்டு ஆசிரியர் பஹ்மிதாவினால் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது .2018ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய சண்முகா பாடசாலை பரிந்துரையை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்தே இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது .அது கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது நீதிமன்றம் இரு தரப்புகளையும் கேட்ட பின்பு எதிர் மனுதாரர்களுக்கு வழக்கில் ஆஜராகும் படி அறிவித்தல் (notice) விடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி 19 ஆம் திகதி வழக்கு எடுக்கப்பட்டபோது அரசு சட்டத்தரணிகள் திணைக்களத்திலிருந்து வந்த சட்டத்தரணி எதிர் மனுதாரர்கள் ஒரு சுமூகமான இணக்கப்பாட்டுக்கு வந்தார்கள். அதாவது மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா சார்பில் நான் அதற்கு இணங்கி நாங்கள் கலந்தாலோசித்துக் கொண்டு இருந்தோம்.அது கலந்தாலோசனை செய்யப்பட்டிருக்கும் வேளையில் கல்வி அமைச்சினால் ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.அதாவது பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி பாடசாலைக்கு நிரந்தர பதவி ஏற்க செல்லுமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் சென்ற போதுதான் இப் பிரச்சினை இடம்பெற்றது. எனவே திங்கட்கிழமை (07) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தேன். அரச சட்டத்தரணிகள் திணைக்களத்திலிருந்து அவர்கள் வந்திருந்தார்கள். இப் பிரச்சினையை தீர்க்க முனைந்த பொழுதும் இவ்வாறான பிரச்சினை நடந்தபடியால் இணக்கப்பாடு என்பது முடியாத விடயம் எனவே இதனை விசாரணைக்கு எடுக்கும் படி நீதிமன்றத்தில் கேட்டதன் பிரகாரம் நீதிமன்றம் மார்ச் மாதம் ஆட்சேபனைக்கு நியமித்து அதன் பின்பு விசாரணைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளது. என்று சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் பெண் ஊடகவியலாளர்கள், பெண் சமூக ஆர்வலர்கள், பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...