இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக மன்னாரில் நடைபெற்ற கையெழுத்து போராட்டத்திற்கு அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜசீம் வருகைத் தந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி இன்று (சனிக்கிழமை) மன்னாரில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
18 மாத சிறைவாசத்தின் பின்னர் சிறையில் இருந்து வந்த அஹ்னாப் ஜசீம் தனது குடும்ப உறுப்பினர்கள் பலருடன் வருகை தந்தார்.
இதனையடுத்து குறித்த மனுவில் கையொப்பமிட்டுள்ளார். இந்த கையெழுத்து போராட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலருடன் உரையாடலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கான கையெழுத்துப் போராட்டம் நாடெங்கிலும் பல பாகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
பின்பு வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்ததோடு, கிழக்கு மாகாணத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.