காணாமலாக்கப்பட்ட உறவினர்கள், மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை அவர்களுக்கான அரசியல் நீதியையே கேட்கின்றனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ‘நியூஸ்நவ்’ செய்திக்கு கருத்து தெரிவித்த அவர்,
நீண்ட காலத்திற்கு போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தங்கள் பிள்ளைகள், கணவர்மார்களுக்கு என்ன நடந்தது என்ற ஒரு காரணத்தையே கேட்கின்றனர்.
எனினும் அந்த விடயங்களுக்கு பதில் சொல்லாமல் இந்த மரணச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டால் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என இந்த அரசாங்கம் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்ட்டவர்களின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற காரணத்தையே தவிர மரணச்சான்றிதழ் அல்ல, அவர்கள் உறவினர்கள், தாய்மார்கள் தங்களுக்கு அரசாங்கத்தின எந்த சலுகைகளையோ இழப்பீட்டுத்தொகையையே எதிர்பார்க்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்றே கேட்கின்றார்கள்.
மேலும், உறவினர்களின் நீதிக்கான குரலை கொச்சைப்படுத்துவதுப் போன்றே இந்த அரசாங்கத்தின் செயற்பாடு உள்ளது.
இந்த இழப்பீட்டுத் தெகையை கொடுப்பதன் ஊடாக சர்வதேசத்தை அமைதிப்படுத்த பார்ப்பதுடன் சர்வதேசத்திடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம் அதற்காக காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தை கையிலெடுத்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களையும் ஒட்டுமொத்த தமிழர்களையும் நீதிக்காக குரல் கொடுக்கும் அத்தனை பேரையும் ஏமாற்றும் ஒரு செயலாகத்தான் இந்த அரசாங்கம் மீண்டும் மீண்டும் செய்துகொண்டு வருகின்றார்கள்.
இந்த ஏமாற்றங்களை 1947 ஆம் ஆண்டிலிருந்து தெளிவாக பார்த்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை காணமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற விடயத்தை இன அழிப்பின் ஒரு அங்கமாகும்.
ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையோ அல்லது சர்வதேச அமைப்புக்களோ இன அழிப்பு என்ற கோணத்தில் பார்க்காமல் மனித உரிமை மீறல்கள் என்ற நோக்கிலே பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.