சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்நோக்கக் கூடிய பெரிய சவாலானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடராகும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம், இடம்பெற்ற ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
‘மார்ச் 2021 இல் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் , செப்டம்பர் 2022 இல் நடைபெறவிருக்கும் 51ஆவது அமர்வு வரை மட்டுமே. அடுத்து என்னவாக இருக்கும் என்ற கேள்வி உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்படுமா? அல்லது புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பதே மிகப் பெரிய கேள்வியாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
51ஆவது அமர்வின் போது 46/1 தீர்மானம் தொடர்பாக நாடு மற்றும் முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லேட் ஒரு ‘முழு அறிக்கையை’ வழங்குவார் என்றும் அவர் கூறினார்.
2021 மார்ச்சில், பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்காக, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைப் பாதுகாப்பதும், பகுப்பாய்வு செய்வதும் இன்றியமையாதது என்பதை ஐ.நா மனித உரிமை பேரவை அங்கீகரித்துள்ளது.
இது 46/1 தீர்மானத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது, அதற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன.
இந்த மாத தொடக்கத்தில் முடிவடைந்த மனித உரிமை பேரவையின் 49ஆவது ஐ.நா அமர்வில் கோர் குழுவின் சார்பாக பேசிய மனித உரிமைகளுக்கான பிரிட்டன் உலகளாவிய தூதர் ரீட்டா பிரெஞ்ச் தீர்மானம் 46/1 ‘வரையறுக்கப்பட்டதாக’ குறிப்பிட்டார்.
‘குறிப்பாக, காணாமல் போனவர்களின் ஆரம்ப பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்து, வழக்குகளை முழுமையாக விசாரணை செய்வதில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் மெதுவான முன்னேற்றம் கவலையளிக்கிறது,’ என்றும் அவர் மேலும் கூறினார்.
51ஆவது அமர்வுக்கு இலங்கை ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும், நிபுணர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுள்ளதாகவும் பேராசிரியர் கொலம்பகே தெரிவித்தார்.
மேலும், ஐ.நா மனித உரிமை பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளை அலுவலகத்துடன் 46/1 தீர்மானத்தின் கீழ் பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகளை நிறைவேற்றுவதற்கும், அதற்கு போதுமான மனித மற்றும் நிதியுதவிகளை வழங்குவதற்கும் மிச்சேல் பச்லெட் அழைப்பு விடுத்துள்ளார்.