ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். தற்போதைய ஜனாதிபதி ஏற்கனவே தனது பதவிப் பிரமாண உரை உட்பட ஓரிரு தடவைகள் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்.
தற்போது மிகவும் நெருக்கடியான ஒரு நிலையில் இந்த நாடு முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியின் விளிம்புக்கு வந்துள்ள நிலையில் இன்று ஜனாதிபதி என்ன சொல்லப் போகின்றார் என்பது மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட விடயமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக அவ்வாறான நிலை காணப்படுவதாக உணர முடியவில்லை.
மாறாக புதிதாக என்னதான் சொல்லப் போகின்றார்? என்ற ஒரு அலட்சியப் போக்கு மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளதையே அவதானிக்க முடிகின்றது. இதுவும் ஒரு நாட்டுக்கு நல்லதல்ல.
இவ்வாறான நெருக்கடி நிலைகளின் போது ஒரு தேசமாக மீண்டும் உயிர்த்தெழ வேண்டுமானால் அந்த தேசத்தின் மக்களுக்கு அந்த தேசத்தின் தலைமைத்துவம் மீது நிலையான அபிமானமும், கௌரவமும் அசைக்க முடியாத நம்பிக்கையும் இருக்க வேண்டும்.
ஆனால் அன்றாடம் தமது தேவைகளுக்காக வரிசைகளில் மணிக்கணக்காவும் நாள் கணக்காகவும் காத்து நிற்கும் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்,
அரச ஊடகங்களைத் தவிர்ந்த பிரதான பிரிவு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் காட்டப்படும் விடயங்கள், தெரிவிக்கப்படும் கருத்துக்கள், வெளியாகும் நகைச்சுவைகள், கேலிச்சித்திரங்கள், நகைச்சுவையின் இணைய வழி புதிய அம்சமான மீம்ஸ்கள் என்பனவற்றை அவதானிக்கும் போது மக்கள் அரச இயந்திரத்தின் மீது நம்பிக்கை இழந்து விரக்தியின் விளிம்புக்கு வந்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
நாடு வீழ்ச்சியின் விளிம்பில் மக்களோ விரக்தியின் விளிம்பில். இது தான் இந்த தேசத்தின் இன்றைய நிலை.
இது மிகவும் மோசமானது. நாம் எதிர்நோக்கவுள்ள ஆபத்தான எதிர்காலத்துக்கான, அனுபவிக்கவுள்ள கஷ்டங்களுக்கான உறுதியான அறிகுறிகள் தான் இவை.
இதுவரை கடைப்பிடித்து வந்த பிற்போக்குத் தனமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் இனிமேலும் தாமதிக்காது அதிகார வர்க்கம் கைவிட வேண்டும்.
சகல கொள்கைகளிலும் தனி ஒரு நபர் நினைப்பது தான் சரி என்றோ அல்லது தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் தன்னால் நியமிக்கப்பட்ட தனக்கு ஜால்ரா போடும் அமைச்சர்களும் சொல்வது மட்டும் தான் சரி என்றோ கருதும் மனப்பாங்கு மாற வேண்டும்.
பல்வேறு நிபுணத்துவ ஆலோசனைகள் உதாசீனம் செய்யப்படாமல் உள்வாங்கப்பட வேண்டும்.
இவ்வாறு முற்போக்குத் தனமான சிந்தனைகளை தனது அணிகலன்களாக அரசு அணிந்து கொண்டால் தான் மக்கள் நம்பிக்கையை வெல்லவும் முடியும்.
மக்களுக்கு ஆறுதல் கூறவும் முடியும், ஆசுவாசப்படுத்தவும் முடியும். பிற்போக்கு சிந்தனைகளில் மூழ்கி இருக்கும் எவரிடம் இருந்தும் நெருக்கடி நிலைகளில் இருந்து மீண்டு வரக் கூடிய மூலோபாயத்தை எதிர்ப்பார்க்க முடியாது.
இதை ஏதோ ஒரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ புரிந்து கொண்டதால் தான் மக்கள் விரக்தியின் விளிம்புக்கு வந்துள்ளார்கள் போல் தெரிகின்றது.
அரசைக் காப்பாற்றவும் நாட்டின் தலைமைத்துவத்தின் இமேஜை மீண்டும் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் சமூக ஊடகங்கள் மூலம் முன்வைக்கப்பட்ட கோஷங்கள் அவை வந்த வேகத்திலேயே காணாமல் போன நிலையில் நாட்டு மக்களுக்கு இன்று நிகழ்த்தப்படும் உரை மிகவும் முக்கியமானது.
பழைய புராணங்களான நாட்டை மீட்டோம், கூரகலையை மீட்டோம், மண்மலையை மீட்டோம் இன்னும் உள்ள இடங்களை மீற்போம், அதை செய்தோம் இதை செய்தோம் என்ற கதைகளை எல்லாம் இனிமேலும் கேட்க மக்கள் தயாராக இல்லை.
அதேவேளை சஜித் பிரேமதாஸ போன்ற ஒரு சோளக்கொல்லை பொம்மையின் பின்னால் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டங்கள் செய்வதும் இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
இன்றைய நிலையில் மிக முக்கியமான தேவையாக இருப்பது நாட்டை மீட்டு எடுக்கக் கூடிய அல்லது வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கும் நாட்டை அதள பாதாளத்துக்குள் செல்ல விடாமல் தடுக்கக் கூடிய நடைமுறை சாத்தியமான சிந்தனை மாற்றங்களும் கொள்கைகளும் மட்டுமே.
என்னால் தான் முடியும் என்ற தம்பட்டத்துக்கும் இனி இடமளிக்க முடியாது..
-ஊடகவியலாளர் நவ்ஷாட் மொஹிதீன்.