அண்மைய நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்திருந்த முதியவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதை அடுத்து, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், இவ்வாறு வரிசையில் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்கு தங்களால் இயன்றவரை முயற்சிப்பது அவசியம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர், பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ம வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது,’பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் அத்தகைய இடங்களில் நிற்காமல் இருப்பது நல்லது.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது அவர்களுக்கு இருக்கும் சில நோய்களை இன்னும் அதிகப்படுத்தலாம். இந்த நாட்களில் நிலவும் வறண்ட வானிலையால் அவை நீரிழப்புக்கு உள்ளாகலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், கேஸ் சிலிண்டர்கள் போன்ற கனமான பொருட்களை நீண்ட நேரம் தூக்குவது வயதானவர்களுக்கு ஏற்றதல்ல, எனவே, வயதானவர்களை அனுப்புவதை விடுத்து, உடல் தகுதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவ்வாறான இடத்தில் தங்கினால் நல்லது என்றும் டாக்டர் ஹேரத் தெரிவித்தார்.
‘பெரியவர்கள் மட்டுமின்றி இதுபோன்ற இடங்களில் தங்கும் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால், அது தீவிரமடையும் வரை காத்திருக்க வேண்டாம்.
உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், அருகில் உள்ள ஒருவருக்குத் தெரிவித்து, விரைவில் மருத்துவமனைக்குச் செல்லவும். வரிசையில் காத்திருக்கும்போது ஒரு தண்ணீர் போத்தல் வைத்திருப்பது முக்கியம்.
எரிபொருள் நிலையங்கள், எரிவாயு விநியோக மையங்கள் மற்றும் வேறு சில இடங்களுக்கு அருகில் வரிசைகள் தொடர்ந்து வரிசையாக நிற்பதால், அவர்களிடமிருந்து அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அண்மையில் எரிபொருள் வரிசையில் நின்று பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.