நீண்டகால தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளை விடுப்பதற்கான முன்மொழிவுகள், வடக்கு- கிழக்கு நில அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழர் தரப்பு தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘நியூஸ் நவ்’ செய்தி தளத்துக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா,புளோட் தலைவர் சித்தார்த்தன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விடயம் தொடர்பில் நியூஸ் நவ் தொடர்பு கொண்டபோது, மேலும் கருத்து தெரிவித்த சுமந்திரன்,
தமிழர் தரப்பில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது. நீண்ட காலமாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி குறித்த விடயங்கள் தொடர்பில் இணக்கம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வடக்கில் இனப்பரம்பல், நில அபகரிப்பு நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கின் அபிவிருத்தி குறித்தும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இன்னல்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதிக்கு கூட்டமைப்பினர் எடுத்துரைத்துள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக செய்யக்கூடிய நான்கு விடயங்களில் முதலாவது நீண்ட காலமாக சிறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தில் வைக்கப்பட்டிருக்கக் கூடியவர்களின் விடுவிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுப்பாரென்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சர் என்னோடு அது குறித்து பேசி நீண்ட காலமாக இருக்கக்கூடியவர்கள் மிகவும் சீக்கிரமாக விடுவிக்கப்படுவதையும், பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுசீரமைக்கின்ற அரசாங்கத்தினுடைய செயற்திட்டத்தின் கீழ் இவர்களின் விடுதலையையும் உடனடியாக செய்வதாக இனங்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொல்லியல் திணைக்களத்தால் நில அபகரிப்பு, தமிழ் மக்களின் காணிகள், தொடர்பில் விசேட சட்டங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பே இன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பில் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.