நாடு வங்குரோத்து அடைய முன்பே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுங்கள் என்று குறிப்பிட்டோம் ஆனால் இந்த அரசாங்கம் கேட்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் டொலர் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல கோரிக்கை விடுத்தோம் எல்லாம் தலைக்கு மேல் போன பிறகு தற்போது நாணய நிதியத்திடம் வளைந்து கொடுத்து உதவி கேட்டு செல்கின்றார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆரம்பமாகியுள்ள எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் கொழும்பில் இடம்பெற்றுக்கெண்டிருக்கின்றது.
இதில் கலந்துகொண்டு குறிப்பிடுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
மேலும் மக்களை வரிசையில் நிறுத்திய இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கோட்டா உள்ளிட்ட அனைவரும் மீண்டும் அமெரிக்காவுக்கே செல்லவேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பை முற்றுகையிட்டு குறித்த போராட்டம் மாபெரும் அளவில் முன்னெடுக்கப்படுவதுடன் இதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான பொது மக்கள் கொழும்பு நோக்கி படையெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி ஹட்டன், பொலன்னறுவை, காலி ஆகிய பிரதேசங்களிலிருந்தும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கொழும்பை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.