வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து பல பில்லியன் டொலர் நிதியொன்றை பெறுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியானது இலங்கையில் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு அல்ல, வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்வதுடன், யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள் நடவு செய்வதற்காக அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீளவும் விடுவிக்க முடியும்.
புதிய அரசியலமைப்பின் கீழ் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான குழுவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கக் குழுவும் கலந்துகொண்டன.
இலங்கை கிழக்கில் சுவிட்சர்லாந்தாக மாறுவதை நாம் காண விரும்புகின்றோம் என தெரிவித்த ஆர்.சம்பந்தன், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம் என ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்களை தடை செய்த அரசாங்கம், தற்போது பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளபோது அந்த புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கின்றாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்குவதற்கு கூட அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி உள்ளது. இது எதை காட்டுகிறது என்றால் தடை என்பது இலங்கை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.