நாட்டில் நிலவும் மின்வெட்டு காரணமாக, நுகர்வுக்குத் தகுதியற்ற பல வகையான உறைந்த உணவு பொருட்கள் சந்தை மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில்,
நாட்டின் பல பகுதிகளில் கிட்டத்தட்ட ஏழு மணி நேர மின்வெட்டு காரணமாக குளிர்சாதன பெட்டிகள், ஃப்ரீசர்களில் சேமிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், கடந்த இரண்டு வாரங்களில், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட உறைந்த உணவுகளை விற்பனை செய்தமைக்காக 387 விற்பனையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உபுல் ரோஹன தெரிவித்தார்.
மின்சாரம் தடைபடுவதால், வெப்பநிலையை துல்லியமாக பராமரிக்க முடியாவிட்டால், உறைந்த உணவுகளை விற்பனை செய்ய வேண்டாம் என்றும், அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், உணவின் நிறம், மணம் மற்றும் தரம் மாறினால், அந்த உணவுகள் மனித நுகர்வுக்கு ஏற்றவை அல்ல என்று ரோஹன கூறினார்.
உணவுப் பொருட்களை வாங்கும் முன் அதன் தரம் மற்றும் தோற்றம் குறித்து நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.