சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேகரித்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சுற்றிவளைப்பின் போது 27,000 லீற்றர் பெற்றோல் மற்றும் 22,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் மோசமான நடத்தை காரணமாக நாட்டில் மொத்தம் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் எரிபொருள் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களை சில நபர்கள் மிரட்டியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.
அதன்படி, இந்த நிரப்பு நிலையங்களுக்கான அனைத்து எரிபொருள் ஆர்டர்களும் ரத்து செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது ஐந்து தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுவதற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்காவிட்டால், மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.