குறிப்பு:- மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு இஸ்லாமிய கண்ணோட்டத்தில் வாழ்வாதாரத்தை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றிய வழிகாட்டலை அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஊடாக வழங்கியுள்ளார். வாசகர்களின் நலன் கருதி அதனை மீள் பிரசுரம் செய்கின்றோம்.
மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு ஆன்மீக ரீதியில் ஒரு வழிகாட்டலை வழங்கி அவர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கோடு இவ்வாக்கம் பகிரப்படுகின்றது.
நமக்குரிய றிஸ்க் இருப்பது அல்லாஹ்வின் கையில் அவனே றஸ்ஸாக், அரசர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் அடங்கலான எல்லோரும் வெறும் அப்துர் றஸ்ஸாக்குகள் -றஸ்ஸாக்கின் அடிமைகளே என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.
நமக்குரிய றிஸ்க் அடிப்படையில் பூமியிலன்றி வானத்திலேயே இருக்கின்றது, அதனை அங்கிருந்து வரவழைத்து தம் வயப்படுத்துவது அதன் சொந்தக்காரனான றஸ்ஸாக்குடனான நமது ஆரோக்கியமான உறவிலேயே தங்கியிருக்கின்றது என்ற உண்மையையும் நாம் புரிய வேண்டும்.
அல்குர்ஆன் கூறுகின்றது:
وَفِى السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ(الذاريات:22)
“அன்றியும் வானத்திலேயே உங்களுக்கான றிஸ்க்கும் உங்களுக்கு வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.”
அல்லாஹ் தஆலாவின் அழகுத் திருநாமங்களில் முதன்மை பெருகின்ற ஒரு நாமம் இருக்கின்றது. அது தான் அர்-ரஸ்ஸாக் என்ற திருநாமம்.
‘அர் ரஸ்ஸாக்’, அனைத்தையும் வழங்குபவன், ஆகாரம், உணவு அளிப்பவன், வாழ்வாதாரம் அளிப்பவன், அனைவருக்கும், அனைத்துக்குமான வாழ்வாதாரத்திற்கு பொறுப்பாக இருப்பவன் முதலான கருத்துக்களைத் தருகின்றது.
அல்குர்ஆன் அல்லாஹ்வை றஸ்ஸாக் என்றும் கைறுர் றாஸிகீன் என்றும் வர்ணிக்கிறது.
பின்வரும் அல்குர்ஆன் வசனங்களைக் கவனியுங்கள்.
﴿ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ ﴾ [الذاريات: 58].
“நிச்சயமாக அல்லாஹ்தான் றிஸ்க் அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.”
﴿ وَارْزُقْنَا وَأَنْتَ خَيْرُ الرَّازِقِينَ ﴾ [المائدة: 114].
“எங்களுக்கு றிஸ்க் அளிப்பாயாக; நீயே றிஸ்க் அளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்.”
﴿ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ ﴾ [الجمعة: 11)
“மேலும் அல்லாஹ்வே றிஸ்க் அளிப்பவர்களில் சிறந்தவன்.”
அர்றஸ்ஸாக், அர்றிஸ்க் என்ற பதத்திலிருந்து பிறந்தது. றிஸ்க் என்ற வார்த்தை பரந்த கருத்துக்களைக் கொண்டது.
அடிப்படையில் றிஸ்க் என்ற பதம் நாளாந்தம் அல்லது வருடாந்தம் அல்லது ஆயுள் பூராகவும் ஒருவருக்கு அளக்கப்பட்டுள்ள வாழ்வாதாரத்தைக் குறிக்கும்.
றிஸ்க் இருவகைப்படும்.
ஒன்று புறவயமானது. இதற்கு உதாரணமாக உண்ணும் உணவு, குடிக்கும் பானம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
அடுத்தது அகவயமானது. ஒருவரின் ஈமான், பெற்றிருக்கும் அறிவு முதலானவை இதற்கு உதாரணங்களாகும்.
மேலும் றிஸ்க் என்பது உலகில் கிடைக்கும் வாழ்வாதாரத்தை மாத்திரமன்றி நாளை மறுமையில் ஒருவருக்குக் கிடைக்கும் வெகுமதிகளையும் குறிக்கும்.
அர் றஸ்ஸாக் என்ற நாமம் நமக்கு சொல்லும் செய்திகள் பல உண்டு.
அல்லாஹ் மாத்திரமே றிஸ்க் அளப்பவன். அவனல்லாத வேறு யாராலும் எவராலும் வாழ்வாதாரத்தை வழங்க முடியாது.
அல்குர்ஆன் கூறுகின்றது.
قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُلِ اللَّه ( سبأ: 24)
“‘(நபியே!) வானங்களிலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு றிஸ்க் அளிப்பவன் யார்?’ என்று (நிராகரிப்போரிடம்) கேட்பீராக! அதற்கு பதிலாக ‘அல்லாஹ்தான்’ என்று கூறுவீராக!..”
﴿ أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ﴾ [الملك: 21]
“அல்லது, தான் றிஸ்க் அளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு றிஸ்க் அளிப்பவர் யார்?”
மனிதர்களுக்கு மட்டுமன்றி வானங்கள், பூமியிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் தேவையான றிஸ்கை வழங்குபவன் அல்லாஹ்தான்.
﴿ وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا ﴾ [هود: 6]
“இன்னும், றிஸ்க் அளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை.”
﴿ وَكَأَيِّنْ مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا, اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ ﴾ [العنكبوت: 60]
“மேலும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்.”
அனைவருக்குமான றிஸ்க் றஸ்ஸாக்கான அல்லாஹ்வினால் ஏலவே அளக்கப்பட்டும் நிர்ணயிக்கப்பட்டும் உள்ளது.
ஒருவர் அளவுக்கதிகமாக அலட்டிக் கொள்வதால் அவருக்குரிய றிஸ்க் அதிகரிக்கப் போவது இல்லை;அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதால் குறையப்போவதும் இல்லை.
அல்லாஹ் முஸ்லிம், காபிர், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடுகள் எதனையும் பார்க்காமல் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவனாக இருக்கின்றான். இது அவனது அன்பின், அருளின் வெளிப்பாடு.
அல்லாஹ் சிலருக்கு வாழ்வாதாரத்தை அதிகமாகக் கொடுப்பான்; மற்றும் சிலருக்கு அளவோடு கொடுப்பான். இன்னும் சிலருக்கு குறைவாகக் கொடுப்பான். இது அவனது ஞானத்துடன் தொடர்புபட்ட விஷயமாகும்.
இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
: ﴿ إِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا ﴾ [الإسراء: 30].
“நிச்சயமாக உமது இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக றிஸ்கை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் – நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.”
ஒருவர் அதிகமான வாழ்வாதாரத்தை,சொத்து, செல்வங்களைப் பெற்றிருப்பது அல்லாஹ் அவர் மீது அன்பு கொண்டிருக்கின்றான் என்பதைக்காட்டும் என்று சொல்வதற்கில்லை.
ஒருவர் குறைவான வாழ்வாதாரத்தைப் பெற்றிருப்பதை வைத்து அவரை அல்லாஹ் விரும்பவில்லை என்றும் சொல்ல முடியாது.
أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُمْ بِهِ مِنْ مَالٍ وَبَنِينَ * نُسَارِعُ لَهُمْ فِي الْخَيْرَاتِ بَلْ لَا يَشْعُرُونَ ﴾ [المؤمنون: 55، 56]،
“அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?
அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.”
அல்லாஹ் ஒருவருக்கு சொத்து செல்வங்களைக் கொடுப்பதனால் அவரை கௌரவிக்கின்றான் என்பதோ மற்றொருவருக்கு கொடுக்காமல் இருக்கின்றான் என்பதால் அவரை கேவலப்படுத்துகின்றான் என்பதோ பொருளல்ல.
﴿ فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ * وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ ﴾ [الفجر:15,16)
“ஆனால், இறைவன் மனிதனை கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: ‘என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்’ என்று கூறுகிறான்.
எனினும் அவனுடைய வாழ்வாதார வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், ‘என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்’ எனக் கூறுகின்றான்.”
இந்த உலக வாழ்வில் மனிதர்கள் தமக்குரிய றிஸ்கைப் பெற்றுக் கொள்வதற்கான வழி ஈமானும் தக்வாவுமாகும். பாவங்கள் வாழ்வாதாரத்தை தடுக்கக் கூடியவை; குறைக்கக்கூடியவை.
﴿ وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَٰكِن كَذَّبُواْ فَأَخَذْنَٰهُم بِمَا كَانُواْ يَكْسِبُونَ ﴾ [الأعراف: 96].
“நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
﴿ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ﴾ [الطلاق: 2، 3]
“மேலும் எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (சரியான ஒரு) வழியை உண்டாக்குவான்.
அத்தகையவருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் வாழ்வாதார (வசதி)களையும் அளிக்கிறான்.”
நாளை மறுமையில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு வழங்க இருக்கின்ற மிகப் பெறும் றிஸ்க் சுவர்கமாகும்.
وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًـا يُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًاؕ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا(الطلاق:11)
“அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்.(இவ்வாறு) அல்லாஹ் அவர்களுக்கு றிஸ்கை சிறப்பாக அமைத்தான்.”
ஆகவே, உறவுகளே,
பௌதீகக் காரணிகளை கவனத்திற் கொண்டு உழைப்பிலும் பொருளாதார முயற்சிகளிலும் ஈடுபடுகின்ற அதே வேளை றஸ்ஸாகுடனான நமது உறவை சீர் செய்து கொள்வதன் மூலமாக நாம் எதிர் கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து விடுபட முனைப்புடன் செயற்படுவோம்.