புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலுள்ள எவரும் அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தற்போதைய பிரதமருக்கு சவால் விடுத்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணை இல்லாததால், புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை எமது கட்சியைச் சேர்ந்த எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 113 ஆசனங்களைப் பெரும்பான்மையாகக் காட்டுமாறு நாங்கள் அவருக்கு சவால் விடுகிறோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்க சம்மதித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை அடுத்தவாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கண்டிக்கும் பிரேரணையை சபையில் முன்வைப்போம், அது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டால், அதுவும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நிகரானது என்பதால் பிரதமர் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். ‘எனக்கும் அரசாங்கத்தில் சேர பணம் கொடுக்கப்பட்டது,’ என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதேபோல பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவம்;, பாராளுமன்றத்தில் உள்ள அமைப்பை மாற்றவும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.