‘சாத்வீகப் போராட்டம் இன மோதலாக மாற்றப்படலாம்’:எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய சூரா சபை வேண்டுகோள்

Date:

தூர நோக்கோடு மேற்கொள்ளப்படும் சாத்வீகப் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் சில சக்திகள் இனங்களுக்கு இடையிலான மோதல்களை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளிவருவதால் அத்தகைய சதிகார வலையில் சிக்கிவிடாமல் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டுமென தேசிய சூரா சபை வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலை தொடர்பில் தேசிய சூரா சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் ஒரு மாத காலமாக, மிகவும் அமைதியான முறையில் சாத்வீக ரீதியாக போராடி வந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை தேசிய ஷூரா சபை வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஷுரா சபை, சாத்வீகப் போராட்டம் ஜனநாயக நாட்டின் உரிமை என்பதை வலியுறுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இத்தாக்குதலையடுத்து இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்ற எதிர்விளைவுகளின் போது உயிர்கள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல்வாதிகள் முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரித்திருந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே சரியானது. அதனைவிடுத்து சொத்துக்களை அழிப்பதையும் வன்முறைகளில் ஈடுபடுவதையும் முற்றுமுழுதாக தவிர்க்கும்படி குறித்த அறிக்கையில், வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு தூர நோக்கோடு மேற்கொள்ளப்படும் சாத்வீகப் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் சில சக்திகள் இனங்களுக்கு இடையிலான மோதல்களை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளிவருவதால் அத்தகைய சதிகார வலையில் சிக்கிவிடாமல் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.

இடைக்கால நிர்வாகமொன்று பற்றிய கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்ற இச்சூழலில் இனம், மதம், மொழி, ஆகிய குறுகிய எல்லைகளுக்கு அப்பால் நின்று அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவான ஒரு இடைக்கால தீர்வுத் திட்டத்தை நோக்கி, எல்லோரும் இதய சுத்தியோடு முயற்சிகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தேசிய ஷூரா சபை அதற்கான அனைத்து பங்களிப்புகளையும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது.

நீதி, நியாயம், பொருளாதார சமத்துவம், இனங்களுக்கிடையிலான நட்புறவு, தேசத்தின் வளர்ச்சி என்பவற்றை இஸ்லாம் இலக்காகக் கொள்வதனால், இத்தகைய விழுமியங்களைக் கொண்ட புதிய அரசியல் கலாசாரத்தை வளர்ப்பதற்கு ஏனைய இனங்களோடு முஸ்லிம்கள் கைகோர்க்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் விடயத்தில் பொலிசார் தாமதமின்றியும் பக்கச் சார்பின்றியும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கண்டிப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரை தேசிய ஷூரா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...