அமைச்சரவை அமைச்சர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் திங்கட்கிழமை (09) பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் பதவி விலகுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இனியும் செயற்பட முடியாது என்பதால் பிரதமர் பதவி விலகவுள்ளதாக அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் தானாகவே கலைந்துவிடும். நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நெருக்கடியான சூழ்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை எனவும், தொழிற்சாலைகள் மூடப்படுவதும் கூட பாரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நெருக்கடிக்கு தீர்வு காணும் பட்சத்தில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்து எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.