மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் மதிய உணவை இடைநிறுத்துமாறு கோரி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 53 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் இன்று (19) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் ஒரு வேளை உணவு கூட உண்ண முடியாமல் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ள இவ்வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு பெருமளவு பணம் செலவு செய்வது அநியாயமானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பகல் முழுவதும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது மாத்திரம் சந்தை விலையில் பார்சல் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி நீடிக்கும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்குவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநிறுத்த வேண்டும் என குறித்த கடிதத்தில் மேலும் கோரப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் சிசிர ஜயகொடி, பிரமித பண்டார தென்னகோன், பிரேமநாத் சி தொலவத்த, கபில அத்துகோரல, ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி, சஹான் பிரதீப் விதான, சாந்த பண்டார, சரித ஹேரத், லலித் வர்ண குமார, சமன்பிரிய ஹேரத், அருந்திக பெர்ணான்டோ, இந்திக்க அநுரத்த பியந்த சில்வா, நால கொடஹேவா,சன்ன ஜயசுமன, கயாஷான் நவநந்தன, மதுர விதானகே, பவித்ரா வன்னியாராச்சி, கெஹலிய ரம்புக்வெல்ல, காமினி வல்பொட உள்ளிட்ட 53 பேர் இதில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.