மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தின் ஒரு பகுதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது, ‘அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மக்கள் மீது எவ்வித அடிப்படையும் இன்றி குற்றம் சுமத்துவது தார்மீக அரசியல் செயல் அல்ல எனவும், இந்த தீங்கிழைக்கும் கருத்து தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
‘இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான அறிக்கை, மத்திய வங்கி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவையும், தடயவியல் கணக்காய்வு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவையும் நியமித்து, மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு உண்மையாகும்.
பலரால் பாராட்டப்பட்டது மற்றும் இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மரியாதைக்குரிய விஷயம், ‘என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட (Perpetual Treasuries Limited) நிறுவனத்திடம் இருந்து அன்றைய ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவர்களில் ஒருவர் எனவும் ஊழல் எதிர்ப்ர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க இன்று தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் 106 பக்கங்களை கொண்ட விசாரணை அறிக்கையை வெளியிடாமல் இன்னும் மறைத்து வைத்துள்ளனர்.
அந்த அறிக்கையை வெளியிடுமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் நான்கு முறை எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த போதிலும் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
106 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் பிணை முறி மோசடியில் சம்பாதித்த 3,250 மில்லியன் ரூபாயை பகிர்ந்துக்கொண்டவர்களின் விபரங்கள் இருக்கின்றன.
அதில் ரோசி சேனாநாயக்க, தயாசிறி ஜயசேகர ஆகியோரின் பெயர்கள் பகிரங்கமாக பேசப்பட்டன. எனினும் பகிரங்கமாகாத பலரது விபரங்கள் அறிக்கையில் உள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அதில் உள்ளன.
அவர்களில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் பெயரும் உள்ளது. இதனை தவிர அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது மகள், மகன், மருமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பிணை முறி மோசடியில் சம்பாதித்த பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் அன்றைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அதில் தொடர்புள்ளது என தெரியவந்தது. அவருக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு வழக்ககள் விசாரிக்கப்பட்டு வருகின்றன எனவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.