பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ள பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பல்வேறு தரப்பினர் ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அவருக்கு பதிலாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமர் பதவி வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை புதிய பிரதமராக நியமிக்க வேண்டுமென வேறு வேறு தரப்பினர்கள், கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல புதிய பிரதமர் பதவிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் பிரதமர் பதவிக்கு வேறு பல கட்சிகளினால் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இடைக்கால அரசாங்கத்திற்கு 20 உறுப்பினர்களுக்கு மிகாத அமைச்சரவையொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் எவ்வாறாயினும், அமைச்சர்கள் எத்தனை பேர் நியமிக்கப்படுவார்கள் என்பது முக்கியமல்ல, விஞ்ஞான ரீதியில் எத்தனை அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதுதான் முக்கியம் என சில தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவொன்று இன்று அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தயாராகி வருகிறது.
பிரதமரை பதவி விலக வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் பதவி விலகத் தயாராகி வருகின்றனர்.
பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.