அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காவிட்டால் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் தினமும் ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடஹேவா தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம், பகலில் 5 மணி நேரமும், இரவில் இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு நீடிக்கும் எனவும், எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் அனைத்து அனல் மின் நிலையங்களிலும் எரிபொருள் தீர்ந்து விட்டதாக எரங்க குடஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஒரு மாதமாக தினமும் சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.