‘மைனா கோ கம’விற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதால் அலரிமாளிகைக்கு அருகில் பதற்றமான சூழல் நிலவியது.
பிரதமருக்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு அருகில் வந்த ஆதரவாளர்கள், அருகில் உள்ள “மைனா கோ கிராமத்திற்கு” வந்து, அங்கு கட்டப்பட்டிருந்த முகாம்களை தாக்கியதால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் இன்று (09) காலை பிரதமரை சந்தித்த பின்னர் அலரிமாளிகையை வந்தடைந்தனர்.
அங்கு கட்டப்பட்டிருந்த முகாம்களை இடித்து தள்ளினர். அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மாடிகளை இடித்துத் தீயிட்டு எரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை அலரி மாளிகை முன் திரண்ட அரசாங்கத்திற்கு குறிப்பாக மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் பகுதிக்கு செல்ல தயாராகியுள்ளனர்.
இதேவேளை இன்று காலை அலரி மாளிகை பகுதிக்கு காலிமுகத்திடல் போராட்டத்தை சேர்ந்த மூவர் வந்திருந்ததாகவும், அவர்களை அடையாளம் கண்ட அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த மூவரையும் தாக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான சூழ்நிலையில் அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசாங்க ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது