தற்போதைய பொருளாதார நிலைமையைப் பயன்படுத்தி நுகர்வோர் பொருட்களுக்கு அதிக விலையை அறவிடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (2) நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான சவால்களுக்கு உடனடித் தீர்வு காணும் நோக்கில் நேற்று (2) பிற்பகல் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் விரும்பியவாறு நிர்ணயம் செய்வதற்கு இடமளிக்காமல் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் ஊறுநு மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களை தீவிரமாக பராமரிப்பதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும, பொருட்கள் தட்டுப்பாட்டைத் தடுப்பதற்கு அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும், பற்றாக்குறை இருப்பதாகக் கூறி சில வர்த்தகர்கள் திட்டமிட்டு விலையை உயர்த்தும் முயற்சிகளைத் தடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி இதன்போது, சுட்டிக்காட்டினார்.
மொத்த சந்தைக்கு விநியோகிக்கப்படும் விவசாய உற்பத்திப் பொருட்களில் ஒரு பகுதியை நேரடியாக கிராமியக் கடைகளுக்குக் கிடைக்கச் செய்வதன் மூலம் கிராமப்புற நுகர்வோர் குறைந்த விலையிலும், விவசாயிகளுக்கு அதிக விலையிலும் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.