எரிபொருளைக் கோரி வவுனியாவில் – யாழ்ப்பாணம் ஏ9 வீதியை மறித்து வவுனியா பிரதேசவாசிகள் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் பதற்ற நிலைமை நிலவியதுடன் பொலிஸாரும், போராட்டக்காரர்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரின் அறிவுறுத்தலின் பேரில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக நான்கு நாட்களாக காத்திருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மக்களை தவறாக வழிநடத்தியதால் எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் அவருக்கும் எரிபொருள் ஊழியர்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா எரிபொருள் நிலையமொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆண்டியா புளியாளங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாடானது வாள்வெட்டுச் சம்பவமாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வாள்வெட்டு சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் பேருந்து ஒன்றுதாக்கப்பட்டு, கப் ரக வாகனம் ஒன்றின் இருக்கை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ள பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.