இலங்கையின் பழமையான இஸ்லாமிய கல்லூரிகளில் மகரகம கபூரிய்யாவும் ஒன்றாகும்.
சுமார் 100 வருட பழமை வாய்ந்த இக் கல்லூரி, ஆரம்ப காலம் முதல் ஆளுமைத் திறன் மிக்க, மார்க்க அறிஞர்களையும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் சமூகத் தலைவர்களையும் உருவாக்கி வரலாறு படைத்துள்ளது.
தேசத்தை தன் செல்வத்தால் வளப்படுத்திய வள்ளல்களில் ஒருவரான மர்ஹூம். N. D. H. அப்துல் கபூர் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு, தற்போது கலாநிதி. அஸ்ஹர் PHD அவர்களை பணிப்பாளராகவும் அஷ்ஷெய்க். S. M. நபார் அஸ்ஹரி அவர்களை அதிபராகவும் கொண்டு இக் கல்லூரி இயங்கி வருகின்றது.
இந் நிலையில், தொழிநுட்பக் கல்விக்கான ஒரு பிரிவும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதன் மூலம், இக் கல்லூரி மாணவர்கள் படித்து விட்டு சுய தொழில்களில் ஈடுபடவும் நாட்டின் பொருளாத்துக்கு பங்களிப்புச் செய்யவும் தகுதி வாய்ந்தவர்களாக உருவாகவும் அவசியமான ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொழிநுட்பக் கல்வி வழங்குனரான அஷ்ஷெய்க். ஸஹ்ரான் ஹாஸனின் நேரடி வழிகாட்டலில் இயங்கவுள்ள இப்பிரிவின் அங்குரார்பண நிகழ்வில் உரையாற்றிய பணிப்பாளர் கலாநிதி, அஸ்ஹர் அவர்கள்,
“இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். கைத்தொழிலை கற்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.கௌரவமான வாழ்க்கைக்கு இக் கல்வி உதவும் என்றார்.
நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான உணவுப் பற்றாக்குறைக்கு பங்களிப்புச் செய்யும் வகையில் விவசாயப் பயிர் செய்கையும் இங்கு முன்னெடுக்கப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிட வேண்டிய மற்றொரு அம்சமாகும்.
இச் சிறப்பான நிகழ்வில் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க். நபார், முகாமைத்துவ சபை உறுப்பினர் அஷ்ஷெய்க். ஹனான், அஷ்ஷைக். ஸஹ்ரான் ஹசன் ஆகியோரும் உரையாற்றினர்.
(செயலாளர், I. L. தில்சாத் அவர்களின் தகவல்களை மையப்படுத்தி newsnow tamil க்காக இவ் ஆக்கம் தயாரிக்கப்பட்டது)