இலங்கையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் பற்றி மத்திய கிழக்கு நாடுகளில் நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு இதுபற்றி விரிவாக அறிவிக்கப்பட்டும் உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் இலங்கை தனது நன்மதிப்பை இழந்துள்ளதாக அறிய முடிகின்றது.
வன்முறைகளின் போது சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு வியாபார நிலையம் பல நூற்றாண்டுகளாக மத்திய கிழக்கோடு இலங்கைக்கு இருந்து வந்த நல்லுறவு அண்மைய தசாப்தங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடு நடைமுறை படுத்திய இனவாத அரசியல், இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான விரோதப் போக்கு, குறுகிய பார்வை கொண்ட கொள்கைகள் என்பனவே இந்த நிலைக்கு பரதான காரணங்களாகும்.
இலங்கைக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கும் இடையிலான உறவுகள் சுமார் 13 நூற்றாண்டுகளுக்கும் அதிக பழமையானவை என்று கூறலாம். மேற்கையும் கிழக்கையும் இணைத்த அரபு வர்த்தகர்கள் தமது வர்த்தக பயணங்களை இலங்கையிலும் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது செயல் இழந்துள்ள சன் ஆங்கில பத்திரிகையில் 1968ல் பிரசுரமான ஒரு கட்டுரையில் அந்த காலத்தின் பிரபலமான தமிழ் அரசியல்வாதியான சி.சுந்தரலிங்கம, 2800 வருடங்களுக்கு முன்னரே அரபு வர்த்தகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமயக் காரணங்களுக்காக இலங்கை அரபியர்களினால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு நாடாகவும் இருந்தது. உதாரணத்துக்கு அரபிகள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது அதுதான் உலகின் முதலாவது மனிதனான ஆதம் இலங்கையில் உள்ள பாவா ஆதம் மலையில் (இன்றைய சிவனொளி பாத மலை) இறங்கினார் என்பதாகும்.
இப்னு பதூதாவின் பயணங்கள் என்ற மொழிபெயர்க்கப்பட்ட நூலில் லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள அரபு மொழி விரிவுரையாளர் எச்.ஏ.ஆர். கிப் என்பவர் ‘இலங்கையில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள ஆதமின் பாதங்கள் பதிந்துள்ள இடத்தை இப்னு பதூதா தரிசித்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சிநேகபூர்வ உறவுகள் எவ்வாறான தங்கு தடையும் இன்றி இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதி வரை குறிப்பாக 1948ல் இலங்கை ஒரு சுதந்திர நாடாக மலரும் வரை நீடித்தன.
பலஸ்தீன மக்களின் நியாயாமான போராட்டத்துக்கு இலங்கை சகல பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளிலும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வந்தது.
இதனால் அரபிகளின் உள்ளத்திலும் இலங்கை இடம் பிடித்தது. இலங்கையையும் மத்திய கிழக்கையும் மிக நெருக்கமானதோர் புள்ளிக்கு கொண்டு வந்த விடயமும் இதுவேயாகும்.
1976ம் ஆண்டு இலங்கையில் அணிசேரா உச்சி மாநாடு இடம்பெற்ற வேளையில் இந்த நற்புறவு சர்வதேச அரங்கில் மோலோங்கி நின்றது.
இலங்கையின் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தி, எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாஸர், யூகோஸ்லாவியா ஜனாதிபதி மார்ஷல் டிட்டோ ஆகிய நால்வரும் மூன்றாம் மண்டல நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் அணிசேரா அமைப்பின் முக்கிய நான்கு தூண்களாகக் கருதப்பட்ட காலம் அது.
1976 ஆகஸ்ட் 16 முதல் 19 வரை கொழும்பில் இடம்பெற்ற அணிசேரா உச்சி மாநாட்டில் அன்றைய ஈராக் அதிபர் சதாம் ஹுஸைனைத் தவிர மற்ற எல்லா அரபு தலைவர்களும் பங்கேற்றமை இலங்கையுடனான அரபுலகின் நற்பை உலகுக்கு பறைசாற்றி நின்றது.
முழு உலகையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 86 நாடுகளும், 30 அவதானிப்பாளர்கள் மற்றும் அதிதிகளும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
அன்றைய காலகட்டத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் உலகில் மிகவும் கௌரவத்துக்குரிய ஒரு நாடாக இலங்கை காணப்பட்டது.
1960 மற்றும் 1970களில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எண்ணெய் வளங்கள் அபிவிருத்தி காணத் தொடங்கிய வேளையில் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன் மூலம் அன்றைய காலகட்டத்தில் வருடாந்தம் சுமார் 7 பில்லியன் அnமிக்க டொலர்கள் நாட்டுக்கு வருமானமாகக் கிடைத்தது. இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாகக் கருதப்பட்டது.
ஆனாலும் அன்றைய அரசியல் தலைவர்கள் எவரும் இந்தப் பிராந்தியங்களுக்கு விஜயம் செய்து இந்த நாடுகளுடனான உறவுகளுக்கு மேலும் வலுவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வளப்படுத்தலாம் என்று அவர்கள் சிந்திக்கவே இல்லை.
இந்த நாட்டை இன்றைய மோசமான நிலைக்கு கொண்டு வந்த அரசியல் தலைவர்களின் அன்றைய மனோநிலை இப்படித் தான் இருந்தது.
உதாரணத்துக்கு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் இன்று போல் ஒரு எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைக்கு நாடு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
அப்போது ஜனாதிபதி பிரோமதாஸ அன்று ஈராக்கின் தூதுவராக இலங்கையில் பணியாற்றிய அப்தோ அலி தாயிரியை அலரி மாளிகைக்கு வரழைத்து நாடு எதிர்நோக்கி உள்ள எரிபொருள் தட்டுப்பாடு பற்றி பேசினார்.
அப்போது இரவு 8.30 மணி இருக்கும். ஈராக்கில் அது இரவு வேளை என்பதால் அடுத்த நாள் காலையில் தான் ஈராக்கின் தேசிய எண்ணெய் கம்பனியின் தலைவரோடு இதுபற்றி பேசிவிட்டு அறிவிப்பதாக ஈராக் தூதுவர் கூறினார்.
ஆனால் தூதுவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஈராக்கின் தேசிய எண்ணெய் கம்பனியின் தலைவரின் வதிவிட தொலைபேசி இலக்கத்தை ஜனாதிபதி பிரேமதாஸ தன்வசம் தயாராக வைத்திருந்தார்.
அந்த இலக்கத்துக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டு தூதுவர் அவரோடு பேச வைக்கப்பட்டார். உடனே சாதகமான பதில் கிடைத்தது. இலங்கையர்கள் எமது சகோதரர்கள்.
அவர்களுக்கு நிச்சயம் நாம் உதவுவோம் என்று மறுமுனையிவ் பதில் அளித்த ஈராக்கின் தேசிய எண்ணெய் கம்பனியின் தலைவர் அடுத்த நாள் காலையில் பஷ்ரா நகர துறைமுகம் நோக்கி செல்வதற்கு தயார் நிலையில் இருந்த இரண்டு எண்ணெய்க் கப்பல்களை உடனடியாக தான் இலங்கை நோக்கி திசை திருப்பவதாக கூறப்பட்டது.
அதன் பிறகு அடுத்தடுத்து சில நாற்களில் மேலும் சில கப்பல்களும் வரத் தொடங்கின.
இலங்கை மீது அரபு மக்கள் கொண்டிருந்த அன்பு, அபிமானம், கௌரவம் என்பன அன்று இவ்வாறு தான் இருந்தன.
ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமானப்படுத்தும் வகையிலான பிரசாரங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டன.
முஸ்லிம்கள் மீது ஆங்காங்கே வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டன. பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வதிவிடங்கள் பலவும் தாக்கப்பட்டன. ஏனைய சொத்துக்கள் பல தீக்கிரையாக்கப்பட்டன.
இது அரபுலக அரசுகளையும் அந்த நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதே கலப்பகுதியில் தான் அரசாங்கம் இஸ்ரேலிய சக்திகளுக்கும் இந்த நாட்டின் கதவுகளைத் திறந்து விட்டது.
சுமார் அரை நூற்றாண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிரான தமது தீய எண்ணங்களை நிறைவேற்ற இந்த நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக அவர்கள் காத்திருந்தனர்.
இதே காலப்பகுதியில் தான் இந்தியாவின் ஆளும் கட்சியான பிஜேபியின் முக்கிய அங்கமான ஆர்எஸ்எஸ் தனது ஆதிக்கத்தை இங்கே நிலை நிறுத்தவும் வழிகள் திறந்து விடப்பட்டன.
இந்த இரு சக்திகளுமே முஸ்லிம்கள் மீது தீவிர வெறுப்புணர்வு கொண்டவை என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.
இந்த இரு சக்திகளினதும் வருகையோடு தான் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரம் அடைந்தன என்பது நிதர்சனமாகும்.
இதே காலப்பகுதியில் கடந்த காலங்களைப் போலன்றி பலஸ்தீன மக்கள் தொடர்பான இலங்கை அரசின் போக்கிலும் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இந்த செயற்பாடுகளில் ஊடகங்களும் பிரதான பங்கேற்றன என்பது பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது.
சுனாமி பேரழிவின் போது முஸ்லிம்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். முஸ்லிம் சனத்தொகையில் சுமார் ஒரு சதவீதம் முற்றாகத் துடைத்தெறியப்பட்டது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட பணம் கூட பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிய தேவைக்காக முறையாகப் பயன்படுத்தப்படவில்லை.
மாறாக செல்வாக்கு மிக்க நபர்களின் சட்டைப் பைக்குள் அந்தப் பணம் சென்றது. இது தொடர்பான பல அறிக்கைகள் பிற்காலத்தில் வெளியாகின.
சுனாமியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக சவூதி அரேபியா 500 வீடுகளைக் கட்டிக் கொடுத்தது.
முஸ்லிம்களுக்கு மட்டும் இந்த வீடுகள் வழங்கப்படுவதை இனவாத சக்திகள் எதிர்த்தன. மதகுருமாரை தூண்டிவிட்டு நீதிமன்றம் சென்று இந்த வீடுகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதற்கு எதிராகத் தடை உத்தரவு பெற்றனர்.
இன்று இந்த வீடுகள் பராமரிப்பற்ற நிலையில் முற்றிலும் சிதைவடைந்த கட்டிடங்களாகக் காணப்படுகின்றன.
அவை புதர்க்காடுகளாக மாறி விஷப் பாம்புகளினதும், குரங்குகளினதும் ஏனைய ஜந்துக்களினதும் வாழ்விடமாக மாறிவிட்டன.
இந்த வீடுகள் முற்றாக கைவிடப்பட்டதன் காரணமாக திருத்தப்பட முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்டதாகவும், அவற்றை திருத்தி அமைப்பதை விட புதிய வீடுகளைக் கட்டுவது செலவு குறைந்தது என்றும் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் தான் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வும் வன்முறைகளும் திட்டமிட்ட வகையில் பரவலாகக் கட்டவிழ்த்து விடப்பட்டது.
அரசாங்கம் இதில் ஈடுபட்ட எந்தவொரு நபருக்கு எதிராகவும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவற்றைக் கண்டும் காணாமல் அரசு நடந்து கொண்ட விதம் இந்த செயற்பாடுகளுக்கு அரசு வழங்கி வரும் மறைமுக ஆதரவை உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது. இது மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
வெளிநாடுகளில் செயற்படும் பூகோள ரீதியான இஸ்லாமோபோபியா செயற்பாட்டாளர்களின் தூண்டுதலோடு உள்ளுர் ஊடகங்களும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமானப் படுத்தும் செயற்பாடுகளை நாசூக்காக மேற்கொண்டன. இது முஸ்லிம் நாடுகளின் கவலையை மேலும் அதிகரித்தது.
துபாயில் இருந்து அல்லது மத்திய கிழக்கில் இருந்து வரும் பெற்றோல் கூட எமக்குத் தேவையில்லை என்று காவி உடை தரித்த மடையர்கள் கூச்சலிடும் அளவுக்கு நிலைமை மோசமானது.
ஜுன் மாதம் ஏழாம் திகதி டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகைக்கு வல்பொல ராஹுல தேரர் பௌத்த கற்கை நிலையத்தின் தலைவரான சங்கைக்குரிய கல்கந்தே தம்மானந்த தேரர் வழங்கியுள்ள ஒரு பேட்டியில் இந்த சதித் திட்டங்கள் தொடர்பான எல்லாத் தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
அவை இன நல்லிணக்கத்துக்கு எவ்வாறு பாதகமாக அமைந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ள அவர் இவை முற்றிலும் அரசியல் நோக்கம் கருதி செய்யப்பட்டவை என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்த வெறுப்புணர்வு சதித் திட்டதட்தின் உச்ச கட்டமாக முஸ்லிம்களின் சமய நம்பிக்கைகளை முற்றிலும் அலட்சியம் செய்யும் வகையிலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை தெட்டத் தெளிவாக மீறும் வகையிலும் கொரோணாவால் மரணம் அடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன.
முஸ்லிம்கள் சார்பாக எத்தனையோ பேர் கதறியும் கூட அரசு இந்த விடயத்தில் கவனம் செலுத்தவே இல்லை. இது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் கவலைக்கும் ஆளாக்கியதோடு இந்த அரசின் மீதான அதிருப்தியின் உச்சத்துக்கு அது முஸ்லிம்களைக் கொண்டு சென்றது.
இதில் 20 நாள் பச்சிளம் குழந்தையொன்றும் எரிக்கப்பட்டமை முழு உலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நைஜீரியாவில் இடம்பெற்ற ஒரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது பிரதான பேசுபெருளாக இந்த விடயம் அமைநத்தும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது போதாதென்று முஸ்லிம்களுக்கு பாதகமான இன்னும் பல விடயங்களை அரசாங்கம் அறிமுகம் செய்தது. இவை முஸ்லிம்களின் சமய ரீதியான வாழ்வியல் செயற்பாடுகளோடு நேரடியாக சம்பந்தப்படும் வகையில் அமைந்திருந்தன.
இந்நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது அரசாங்கம் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசு என்பதிலும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டிய பொறுப்பு தனக்குள்ளது என்ற கருத்திலும் தொடர்ந்தும் உறுதியாக இருந்தார்.
இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இந்த திட்டமிட்ட செயற்பாடுகள் இப்போது முஸ்லிம் நாடுகளுக்கு உரிய விதத்தில் நன்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமைகளை அறிந்தோ அறியாமலோ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை அழைத்து உதவி கேற்கின்றார். இலங்கை ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்சி பெறவே அவர் தற்போது அரபுலகின் ஆதரவை நாடி உள்ளார்.