சட்டத்தை மதிக்காத, வன்முறையாளர்களான சியோனிஸ யூதர்களுக்கு எச்சரிக்கை கோடாக அமைந்துள்ள ஜெரூஸலம்! :லத்தீப் பாரூக்

Date:

பலஸ்தீன ஊடகவியலாளர் ஷெரீன் அபு அக்லா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு சுமார் 20 நாட்களுக்கும் மேல் கழிந்துள்ள நிலையில் யூத குடியேற்ற தீவிரவாதிகளை அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்துக்குள் “பிளேக் மார்ச்” (கொடி ஊர்வலம்) என்ற பெயரில் அனுமதித்துள்ளதன் மூலம் மீண்டும் ஒரு சர்ச்சையை இஸ்ரேல் ஏற்படுத்தி உள்ளது.

சியோனிஸ ஆக்கிரமிப்புப் படைகளால் 1967ல் கிழக்கு ஜெரூஸலப் பிரதேசம் கைப்பற்றப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையிலேயே இந்த பிளேக் மார்ச் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வு இதுவரை சர்வதேச சமூகத்தால் அங்கிகரிக்கப்படாத ஒரு நிகழ்வாகும். இவ்வாண்டு இந்நிகழ்வு 2022 மே 29 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

யூத தீவிவரவாத குடியேற்றவாசிகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் ஊடாக யூதக் கொடிகளைத் தாங்கியவாறு ‘அரபிகளுக்கு மரணம் உண்டாகட்டும்’ என்ற கோஷங்களை எழுப்பியவாறும் இனவாத மற்றும் பெரும் பாதகமான சொற்களை உள்ளடக்கிய கீதங்களை இசைத்தவாறும் ஊர்வலமாக சென்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேல் கொடியைத் தாங்கியவாறும் இதில் பங்கேற்றனர்.

அல்அக்ஸா வளாகத்தில் யூதக் குடியேற்றவாசிகள்

யூத பிரார்த்தனை அல்லது சமய கோஷங்களை இந்தப் பகுதிகளில் சத்தமாக முழக்கமிடலாம் என்று இஸ்ரேல் நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பை அடுத்தே யூதர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர்.

அல் அக்ஸா பள்ளிவாசல் என்பது இஸ்லாத்தின் மூன்றாவது புனிதப் பிரதேசமாகும். அதில் வழிபடுவது முஸ்லிம்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வளாகம் பலஸ்தீனம் அரபிகள் மற்றும் இஸ்லாத்தோடு தொடர்புடையவை. இது அரசியல் கலந்த ஒரு தேசிய விவகாரம். இஸ்ரேலின் நீதித்துறைக்கு இதில் எவ்வித சம்பந்தமும் கிடையாது.

இந்தக் கொடி ஊர்வலத்தின் போது இஸ்ரேல் பொலிஸார் முதலில் பள்ளிவாசல் முற்றத்தை நோக்கி கற்களை எறிந்தனர்.

அதன் பிறகு குடியேற்றவாசிகள் உள்ளே புகுந்து அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். சில பலஸ்தீனர்களை தடுத்து வைத்தனர்.

இந்த ஊர்வலத்தின் போது “முஹம்மத் இறந்து விட்டார்” எனக் கோஷமிட்டு யுதர்கள் பலஸ்தீனர்களை கேலி செய்தனர். அரபிகளுக்கும் மரணம் உண்டாகட்டும். ஷெரீனும் (அல்ஜஸீராவின் பலஸ்தீன ஊடகவியலாளர்) இறந்து விட்டார் என்று குதூகலமாகக் கோஷமிட்டனர்.
முதற் தடவையாக இஸ்ரேல் பொலிஸாரின் தீவிர கண்கானிப்பின் கீழ் பல்வேறு குழுக்களாக இஸ்ரேல் கொடிகளைத் தாங்கிய வண்ணம் காணப்பட்டனர்.

அண்மைக்கால நினைவுகளின் படி அவர்கள் முதற் தடவையாக இஸ்ரேல் பொலிஸாரின் தீவிர கண்கானிப்பின் கீழ் பல்வேறு குழுக்களாக இஸ்ரேல் கொடிகளைத் தாங்கிய வண்ணம் காணப்பட்டனர்.

பலஸ்தீனர்களை மேலும் ஆத்திரமூட்டும் வகையில இஸ்ரேல் தீவிரவாதக் குழுக்களில் ஒன்றான லெஹாவாவின் தலைவர் கிழக்கு ஜெரூஸலம் கைப்பற்றப்பட்டதை நினைவுகூறும் வகையில் அந்தப் பகுதியில் அமையப் பெற்றுள்ள குவிமாடம் தகர்க்கப்பட வேண்டும் என சட்டவிரோத குடியேற்ற வாசிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

தமது நாடு ஒரு சமய யுத்தத்துக்கான ஆபத்தை எதிர்நோக்கி உள்ளதாக இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுமார் ஐந்து மணிநேரம் நீடித்த இந்த ஊடுறுவலின் போது சில குடியேற்றவாசிகள் அவர்களது சமயக் கிரியைகளிலும் ஈடுபட்டனர். பள்ளிவாசல் முற்றத்தில் அவர்கள் தங்களது கீதங்களையும் இசைத்தனர்.

அல்அக்ஸாவின் இன்றைய நிலை அது தொடர்பான இஸ்ரேல் மீதான தடைகள் என்பன பற்றிய சர்வதேச உடன்பாடுகளை முற்று முழுதாக மீறும் வகையில் இது அமைந்திருந்தது.

இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்ற ரீதியில் அவை தொடர்பாக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் மீதான் கடப்பாடுகளை விளக்கும் சர்வதேச உடன்பாடுகள் மற்றும் சட்டங்கள் என்பன உள்ளன.

அவற்றின் பிரகாரம் அங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் யூதக் குடியேற்றங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று இவ்வாறான சுமார் 164 குடியேற்றங்களில் சுமார் 650000 குடியேற்றவாசிகள் வாழுகின்றனர்.

மேற்குக் கரையிலும் இவ்வாறான சுமார் 116 குடியிருப்புக்கள் உள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூஸலம் பகுதியும் இதில் அடங்கும்.

2021ல் இந்த கொடி ஊர்வலம் காரணமாக ஏற்பட்ட மோதல் சுமார் 11 தினங்கள் இஸ்ரேல் காஸா மீது கொடூரமான தொடர் தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு மோசம் அடைந்தது.

கொடி ஊர்வலத்தில் அன்று கலந்து கொண்டவர்கள் நடத்திய அட்டூழியங்களை பொருத்துக் கொள்ள முடியாத பலஸ்தீனர்கள் இஸ்ரேல் பகுதிகளை நோக்கி உள்ளுரில் தயாரிக்கப்பட்ட ரொக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதை அடுத்தே நிலைமை மோசமடைந்தது.

இவ்வாண்டு மே 29ல் இடம்பெற்ற சம்பவத்தின் போது குடியேற்றவாசிகள் பலஸ்தீன பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

50 வயதான ஒரு பலஸ்தீன பெண் மீது மிளகுதூள் வீசி தாக்குதல் நடத்தும் காட்சியும் அதில் உள்ளது. பழைய நகரை வதிவிடமாகக் கொண்டவரும் செயற்பாட்டாளருமான அய்தா சய்தவி என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டவராவார்.

இதனை அடுத்து பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் கைகலப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பெண் ஆஸ்பத்திரிக்கு எடுததுச் செல்லப்பட்ட வேளையில் அங்குள்ள பலஸ்தீனர்களை இஸ்ரேல் பொலிஸார் துப்பாக்கி முனையில் அச்சுறுத்த அங்கு திரண்டிருந்தவர்கள் மீது யூதர்கள் மீண்டும் மிளகுத்தூள் தூவி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

காலை வேளையில் இஸ்ரேலியர்கள் அல்அக்ஸா பள்ளிவாசல் மீது நடத்திய தாக்குதல் தன்னை பெரிதும் காயப்படுத்தி விட்டதாக அய்தா சய்தவி தெரிவித்துள்ளார்.

“அல் அக்ஸா முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை நாம் நன்கு அறிவோம். அதை ஒருபோதும் நாம் விட்டுக் கொடுக்கப்போவதில்லை என்ன விலை கொடுத்தேனும் அதை நாம் காப்போம்.

அய்தா சய்தவி யூதக் குடியேற்ற தீவிரவாதி ஒருவரால் உதைக்கப்படும் காட்சி.

நாம் இங்கு தான் இருப்போம். எமது பள்ளிவாசலில், எமது வீடுகளில், எமது தெருக்களில் நாம் இருப்போம். உயிரைப் பற்றி எமக்கு எந்தக் கவலையும் இல்லை” என்று அய்தா சய்தவி முழக்கமிட்டார்.

இஸ்ரேல் குடியேற்றவாசிகளையும் பொலிஸாரையும் எதிர்த்து பலஸ்தீன பெண்களும் துணிச்சலாகப் போராடி வருகின்றனர்.

இந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மேற்குக் கரையிலும் காஸா பகுதியிலும் பலஸ்தீன மக்கள் ஒன்று திரண்டு அல் அக்ஸா பள்ளிவாசல் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நிற்கும் தமது மக்களுக்கு ஆதரவாகக் கோஷமிட்டனர்.

இஸ்ரேல் படையினர் நேரடி துப்பாக்கிப் பிரயோகம், இறப்பர் உறையிடப்பட்ட உருக்கு துப்பாக்கி ரவைகள், புகைக் குண்டுகள் என்பனவற்றைப் பாவித்து நப்லுஸ், ஹெப்ரோன், அல் பிரேஹ், ஜெரிகோ, துல்காரம் மற்றும் ஏனைய மேற்குக் கரை நகரங்களில் கூடிய மக்களை விரட்டி அடித்தனர்.

ஆரம்ப கட்டமாக அதிகாலை மற்றும் பகல்வேளை தொழுகைகளுக்காக முஸ்லிம்கள் அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் பிரவேசிப்பதை இஸ்ரேல் படையினர் தடுத்தனர்.

பள்ளிவாசல் வளாகப் பகுதியில் இருந்து பலஸ்தீனர்களை துரத்தி விட்டு அங்கு யூதர்களை வழிபாடுகளில் ஈடுபடச் செய்வதற்கு அவர்கள் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.

50 வயதுக்கு கீழான பலஸ்தீனர்கள் யாவரும் அங்கிருந்து விரட்டப்பட்டனர். அதேவேளை சில முதியவர்களுக்கும் பெண்களுக்கும் இடமளிக்கப்படவும் இல்லை.

இவ்வளவு அநியாயங்களுக்கு மத்தியிலும் அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் ஆட்சி பீடங்களில் அமர்த்தப்பட்டுள்ள அரபுக் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் பணியாற்றும் அரபு உலகத் தலைநகரங்களில் ஒரு வினோதமான அமைதி நிலவியது.

அரபு மக்கள் மீதான வரையறைகள் மட்டும் நீக்கப்படுமானால் அவர்கள் ஜெரூஸலத்தை நோக்கி அணிவகுத்துச் சென்று ஆக்கரமிக்கப்பட்ட தமது பூமிகளில் அநியாயக்காரர்கள் இழைத்து வரும் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களுக்காக நீதி கேட்டு போராடுவர்.

ஆனால் அவ்வாறு எதுவும் நடக்காமல் அடக்குமுறை அரசுகள் பாதுகாத்து வருகின்றன. நீண்டகாலமாக எல்லோரும் ஒரே விதமாகவே பலஸ்தீனர்கள் மீது சவாரி செய்து வருகின்றனர்.

பலஸ்தீன மக்கள் பலஸ்தீன அதிகார சபை உற்பட எல்லோர் மீதும் நம்பிக்கை இழந்து விட்டனர். தனது சொந்த மக்களையே கொன்று குவிக்கும் இஸ்ரேலின் கைக் கூலியாக பலஸ்தீன அதிகார சபையும் மாறிவிட்டமையே இதற்குக் காரணம்.

இந்நிலையில் தான் அபுதாபி இஸ்ரேலுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டதாகவும், இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளுக்கு வழியமைக்கும் வகையிலான ஒரு விஜயத்தை அமெரிக்க ஜனாதிபதி விரைவில் சவூதி அரேபியாவுக்கு மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவை வெட்கக் கேடான நிலைமைகளாகும். இங்கு 1969க்கும் 1974க்கும் இடையில் இஸ்ரேலின் நான்காவது பிரதமராக இருந்த யுக்ரேனில் பிறந்து வளர்ந்த ஆசிரியையான கோல்டா மேயர் தெரிவித்த கருத்துக்கள் நினைவூட்டத்தக்கது.

“நாம் அல்அக்ஸா பள்ளிவாசலை எரித்த அன்றைய தினத்தில் அரபு நாட்டு இராணுவங்கள் எமது நாட்டுக்குள் ஊடுறுவலாம் என்ற அச்சத்தில் நான் இரவு முழுவதும் உறங்க முடியாமல் தவித்தேன்.

ஆனால் அடுத்த நாள் காலையில் சூரியன் உதித்த போது, நாம் எமக்கு வேண்டிய விதத்தில் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

காரணம் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் (உம்மத்) சமூகத்துக்கு தான் நாம் முகம் கொடுக்க வேண்டி உள்ளது என்பதை நான் அப்போது புரிந்து கொண்டேன்” என்பது தான் அவர் அன்று தெரிவித்த கருத்து.

இன்றுவரை இஸ்ரேலியர்கள் இதைத் தான் செய்து வருகின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து யூதர்களை அவர்கள் பலஸ்தீன பூமிக்குள் இறக்குமதி செய்து வருகின்றனர்.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட யூதர்கள் வாழுவதற்கான குடியிருப்புக்களை ஏற்படுத்த தமது சொந்த பூமியில் இருந்து பலஸ்தீனர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர்.

அவ்வாறு விரட்டப்படும் பலஸ்தீனர்கள் காலாகாலமாக எவ்வித உரிமைகளும் அற்றவர்களாக அகதி முகாம்களில் காலத்தை கழித்து வருகின்றனர்.

ஆனால் மறுபுறத்தில் பலஸ்தீன பூமியில் கட்டப்படும் நவீன குடியிருப்புக்களில் சகல வசதிகளோடும் சகல உரிமைகளோடும் இஸ்ரேலியர்கள் வாழ வைக்கப்படுகின்றனர்.

இதை எதிர்க்கும் பலஸ்தீனர்கள் கொல்லப்படுகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் அவர்களின் ஆதரவுடன் காட்டுத் தர்பார் நடத்தும் அரபுலக கொடுங்கோல் ஆட்சியாளர்களின் பக்க பலத்துடன் காட்டுமிராண்டித்தனமான இந்த அட்டூழியத்தை இஸ்ரேல் அன்றாடம் கட்டவிழத்து விடுகின்றது.

பொதுவாக மத்திய கிழக்கும் குறிப்பாக பலஸ்தீனமும் இன்று கொந்தளிக்கும் எரிமலையாகக் காணப்படுகின்றது. எந்த நேரத்திலும் அது வெடித்துச் சிதறி மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

(முற்றும்)

Popular

More like this
Related

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...